₹48 லட்சத்தில் வந்த ஹோண்டா காருக்கு செம டிமாண்ட்... முதல் 2 பேட்ச் கார்களுக்கும் புக்கிங் முடிந்தது!
ரூ.48 லட்சம் விலையில் அறிமுகமான ஹோண்டா ZR-V ஹைபிரிட் எஸ்யூவிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான சில நாட்களிலேயே இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட முதல் இரண்டு பேட்ச் கார்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த பிரீமியம் எஸ்யூவி தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.
ஹோண்டா இதுவரை எத்தனை யூனிட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், முதல் இரண்டு பேட்ச்களும் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஜப்பானில் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட (CBU) மாடலாக இறக்குமதி செய்யப்படுவதால், ஆரம்ப கட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான கார்களே இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

பிரிமீயமான ஹோண்டா கார்
இந்தியாவில் ஹோண்டாவின் தற்போதைய கார் வரிசையில் எலிவேட், சிட்டி மற்றும் அமேஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அவற்றை விட உயர்ந்த பிரீமியம் பிரிவை குறிவைத்து ZR-V அறிமுகமாகியுள்ளது. டொயோட்டா கரொல்லா க்ராஸ், ஹூண்டாய் டூசான், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற உயர்தர பிரிமீயம் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இதை ஹோண்டா களமிறக்கியுள்ளது.
என்ஜின் விபரம்
இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்த e:HEV ஹைபிரிட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பவர்டிரெயின் இணைந்து அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 315 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. நகரப் பயன்பாட்டில் அதிக நேரம் எலக்ட்ரிக் மோடில் இயங்கும் வகையில் இந்த ஹைபிரிட் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருப்பதால், செயல்திறனும் எரிபொருள் சிக்கனமும் சமநிலையாக கிடைக்கும். இந்த கார் சோதனை நிலைகளில், லிட்டருக்கு 22.08 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வசதிகள்
வசதிகளைப் பொறுத்தவரை, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.2 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், பவர் டெயில்கேட் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பிலும் இந்த எஸ்யூவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. Honda Sensing ADAS தொகுப்பின் கீழ் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (Adaptive Cruise Control) முன்புற வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப தானாகவே வேகத்தை மாற்றும். லேன் கீப்பிங் அசிஸ்ட் (Lane Keeping Assist) கார் பாதையை விட்டு விலகாமல் இருக்க உதவும். கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங் (Collision Mitigation Braking System) மோதல் அபாயத்தை கண்டறிந்து தானாகவே பிரேக் பயன்படுத்தும். ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் (Road Departure Mitigation) சாலையை விட்டு வாகனம் விலகுவதை தடுக்க உதவும். இதனுடன் பல ஏர்பேக்குகள், Vehicle Stability Assist மற்றும் Hill Start Assist போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
யாருக்கு இந்த கார் பொருத்தமாக இருக்கும்?
உயர்தர ஹைபிரிட் எஸ்யூவி வாங்க திட்டமிடுபவர்கள், நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்ப்பவர்கள், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரீமியம் குடும்ப எஸ்யூவியை விரும்புபவர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஹோண்டா மாடலை வாங்க விரும்புபவர்கள் ZR-V-யை பரிசீலிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
முதல் இரண்டு பேட்ச் கார்களும் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவில் பிரீமியம் ஹைபிரிட் எஸ்யூவிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது. விற்பனை எண்ணிக்கையை ஹோண்டா வெளியிடவில்லை என்றாலும், குறைந்த எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மாடலாக இருந்தபோதும் ZR-V-க்கு கிடைத்த வரவேற்பு, இந்த பிரிவில் ஹோண்டாவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications