பெட்ரோல், டீசல் கார் பக்கமே போக மாட்டீங்க, இது எல்லாம் தெரிஞ்சா! எலெக்ட்ரிக் கார் வாங்கும் முன் அறிய வேண்டியவை
பெட்ரோல், டீசல் கார்களை வாங்குவது போன்று எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதும் எளிதான ஒன்றுதான். ஆனால் நம்மில் பலர் முதல்முறையாக எலெக்ட்ரிக் காரை வாங்கும்போது அதனை கவனமாக பார்த்து எவ்வாறு தேர்வு செய்வது என்பது தெரியாமல் வழக்கம்போல் பெட்ரோல், டீசல் கார்களின் பக்கம் செல்கின்றனர். எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்க போகிறீர்கள் என்றால் கவனத்தில் வைக்க வேண்டிய சில அறிவுரைகள்...
எவ்வளவு நேரம் சார்ஜ் நீடிக்கும்
மொபைல் போனின் சார்ஜ் போன்று இல்லாமல், எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜ் ஆனது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படக் கூடியவை ஆகும். அதாவது, காரை ஓட்டும் விதம், கார் ஓட்டப்படும் சாலை, கால சூழ்நிலை என பல்வேறு காரணிகளை பொறுத்தது ஆகும். பெட்ரோல், டீசல் கார்களில் மைலேஜ் என குறிப்பிடப்படுவது, எலெக்ட்ரிக் கார்களில் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அது 0 சார்ஜ் அளவை அடைவதற்குள் அதிகப்பட்சமாக எவ்வளவு தொலைவிற்கு பயணிக்கலாம் என்பதுதான் ரேஞ்ச் ஆகும். காரின் ரேஞ்ச் இதுதான் என அந்த காரை உற்பத்தி செய்த நிறுவனம் கூறும் ரேஞ்ச் அளவை பெறுவது கடினமானது; இன்னும் சொல்லப்போனால் அது நிஜ உலகில் முடியாத ஒன்று என்றே சொல்ல வேண்டும். அதில் இருந்து சற்று குறைவான ரேஞ்சையே நிஜ உலகில் பெற முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்
பெட்ரோல், டீசல் கார்களை போன்று எலெக்ட்ரிக் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்துப் பார்த்து வாங்குவது அவசியமாகும். இன்னும் சொல்லப்போனால், பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, ஓட்டிப் பார்க்கும் கார் இயக்கத்தின் போது எந்த அளவிற்கு சத்தத்தை வெளியிடுகிறது என்பதை அறியவும்.

ஏனெனில், சில எலெக்ட்ரிக் கார்கள் சுத்தமாக சத்தத்தை எழுப்பாமல் மிகவும் அமைதியாக இயங்கக் கூடியவை ஆக உள்ளன. மிகவும் அமைதி கூட சில நேரங்களில் விபத்துக்கு காரணமாக அமையலாம் என்பதை மறக்காதீர்கள். ஓட்டிப் பார்க்கும்போது, அனைத்து ஜன்னல்களையும் திறந்து எந்த அளவிற்கு சத்தத்தை கார் வெளியிடுகிறது என்பதை அறிவதுடன், ஜன்னல்களை மூடியும் சத்தத்தின் அளவை சரிப்பார்க்கவும்.
ஜன்னல்கள் அனைத்தையும் மூடி பயணம் செய்யும்போது காருக்குள் மிக மிக அமைதியான சூழல் நிலவினால், அதுவும் தலைச்சுற்றல், வாந்தி போன்ற உபாதைகளை பயணிகளுக்கு ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம். மேலும், டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும்போது காரின் ரேஞ்சையும் பரிசோதிப்பது நல்லது. இதற்காக, டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு முன்னர் காரின் சார்ஜ் என்ன, செய்து முடித்த பின் சார்ஜ் என்ன என்பதை அளவிடவும்.
எலெக்ட்ரிக் காரின் உத்தரவாதம்
பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் கார்களில் மிகவும் குறைவான பாகங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், எதாவது ஒரு பாகம் பழுதடைந்தாலும் பெரிய செலவை இழுத்துவிட வாய்ப்புள்ளது. ஆதலால், காருக்கு குறைந்தப்பட்சம் 5 வருட உத்தரவாதத்தை ஆவது காரை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்குகிறதா என்பதை ஆராயவும். மேலும், அந்த உத்தரவாதத்தை கூடுதல் கட்டணத்தை செலுத்தி நீட்டிக்க முடியுமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
விரைவான சார்ஜிங் நிலையங்களை அணுகுவது
எலெக்ட்ரிக் கார்களை வாங்க இன்னமும் பலர் தயங்குவதற்கு காரணம், அதனை விரைவாக எவ்வாறு சார்ஜ் செய்வது என்பது தெரியாததினாலே ஆகும். பெட்ரோல், டீசலை போன்று எந்த எலெக்ட்ரிக் காரையும் சில வினாடிகளில் சார்ஜ் செய்துவிட முடியாது. அந்த அளவிற்கு இன்னும் எந்த நாட்டின் தொழிற்நுட்ப துறையும் வளர்ச்சி அடையவில்லை.
விரைவாக சார்ஜ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் அல்லது சூப்பர் சார்ஜிங் போன்ற இவி சார்ஜர்கள் தான் தற்போதைக்கு தீர்வுகளாக உள்ளன. ஆதலால், எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு முன் உங்களது இருப்பிடம் மற்றும் அலுவலகத்திற்கு அருகில் ஃபாஸ்ட் இவி சார்ஜிங் வசதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் இத்தனை விஷயங்கள் இருந்தாலும், ஒருமுறை எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட்டீர்கள் என்றால் அடுத்தடுத்து வாங்கும்போது உங்களுக்கு பெரியதாக குழப்பமாக இருக்காது. இதுவரையில் பெட்ரோல், டீசல் காரையே வாங்கியது கிடையாது எனும்போது குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவே. எலெக்ட்ரிக் காரை வாங்கும் ஒவ்வொருவரும் பசுமையான சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications