மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா சோலி முடின்ச்! அதிகம் பேர் பயணம் செய்யும் புதிய எம்பிவி கார்கள் வர போகுது!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி ரக கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எம்பிவி ரக கார்களுக்கும் நல்ல டிமாண்ட் இருக்கவே செய்கிறது. குறிப்பாக அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸ் ஆக எம்பிவி ரக கார்கள் உள்ளன.
எம்பிவி ரக கார்களில் 6 பேர் அல்லது 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். அத்துடன் இந்திய மக்கள் மத்தியில் சமீப காலமாக அடிக்கடி குடும்பத்துடன் தொலை தூர பயணங்களை மேற்கொள்வது ஒரு டிரெண்ட் ஆக மாறி வருகிறது. இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இந்தியாவின் எம்பிவி கார் செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எர்டிகா போன்ற கார்கள் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனமும், இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஹைக்ராஸ் மூலமாக டொயோட்டா நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன.
இருப்பினும் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய 2 நிறுவனங்களும் கூடிய விரைவில் இந்த செக்மெண்ட்டில் புதிய எம்பிவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் நிறுவனம் ஒரு எம்பிவி காரை கூட விற்பனை செய்யவில்லை.

எனவே இந்த செக்மெண்ட்டில் நுழைய ஹூண்டாய் நிறுவனம் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. மறுபக்கம் கியா நிறுவனம் கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கார்னிவல் போன்ற எம்பிவி கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இருப்பினும் புதிய எம்பிவி கார் மூலம் இந்த செக்மெண்ட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்ள கியா நிறுவனம் விரும்புகிறது.
கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமே, இந்தியாவில் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்து ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து விட்டது. இந்த கார் அனேகமாக வரும் 2028ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் போன்ற கார்களுடன் இது போட்டியிடும். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய கார் ஹைப்ரிட் இன்ஜினை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மறுபக்கம் கியா நிறுவனம் கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி கார்களின் புதிய ஹைப்ரிட் வெர்ஷன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், கார்னிவல் ஹைப்ரிட் கார் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது. தென் கொரியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். மறுபக்கம் கேரன்ஸ் க்ளாவிஸ் எம்பிவி காரின் புதிய ஹைப்ரிட் வெர்ஷன் 2027-2029ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் புதிய எம்பிவி கார்களின் வருகை, மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய எம்பிவி கார்களை பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் மாதங்களில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications