இனி 7 லட்சம் வரை கம்மி விலையிலேயே கிரெட்டா எலெக்ட்ரிக் காரை வாங்கலாம்.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹூண்டாய்!
டாடா சியரா EV வெளியான மறுநாளே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கிரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு BaaS திட்டத்தை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் என்றால் அது ஹூண்டாயின் கிரெட்டா தான். எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் 2025ன் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கிரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் மீது ஆர்வம் இல்லாமல் எல்லாம் இல்லை. ஏனெனில் மஹிந்திரா மற்றும் டாடாவின் எலெக்ட்ரிக் கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் விருப்பத்தைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் கிரெட்டா எலெக்ட்ரிக் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எதற்கு BaaS திட்டம்?
எனவே தான் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கார் மீது ஆர்வம் வரவைக்கும் வகையில் BaaS திட்டத்தை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியிருக்கிறது. Battery as a Service என்பதன் சுருக்கம் தான் BaaS. இந்தத் திட்டத்தின் கீழ் கார் வாங்கும் போது பேட்டரி நமக்கு சொந்தமாக இருக்காது. கார் மட்டுமே நமக்கு சொந்தம். காரில் இருக்கும் பேட்டரியை வாடகை முறையில் ஒவ்வொரு மாதமும் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
எதற்கு இந்தத் திட்டம்? எலெக்ட்ரிக் கார்களில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய பயமே பேட்டரி விரைவில் கெட்டுப்போய்விடும் அல்லது பழுதாகிவிடும் என்பது தான். மேலும், வாகனத்தின் பேட்டரியின் விலையானது கிட்டத்தட்ட புதிய காரின் அளவிற்கு இருக்கும். எனவே அந்த பயத்தைப் போக்க, பேட்டரிக்கான பொறுப்பை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. குறிப்பிட்ட ஆண்டு காலத்திற்கு பேட்டரியில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அது நிறுவனத்தின் பொறுப்பு தான். நம்முடையது கிடையாது.

கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு BaaS:
மேலும், இந்த BaaS திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம், எலெக்ட்ரிக் காரின் தொடக்கவிலை மிகவும் குறைவது தான். கிரெட்டா எலெக்ட்ரிக் காரை 18.03 லட்சம் ரூபாய் முதல் 24.70 லட்சம் ரூபாய வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. இது பேட்டரியுடன் கூடிய காருக்கான விலை.
தற்போது BaaS திட்டத்தின் கீழ் இந்தக் காரை 10.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கே நாம் வாங்க முடியும். கிட்டத்தட்ட எரிபொருள் கிரெட்டா காரின் அதே விலைக்கே எலெக்ட்ரிக் கிரெட்டா காரையும் நாம் வாங்கலாம். இது சுமார் 7 லட்சம் ரூபாய் வரை குறைவான தொடக்க விலையாகும். இந்த குறைவான விலையுடன், பேட்டரிக்கான கட்டணமாக ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் 3.90 ரூபாய் நாம் செலுத்த வேண்டியிருக்கும்.
மாதம் 1000 கிமீ கிரெட்டா எலெக்ட்ரிக் காரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் 3,900 ரூபாய் பேட்டரிக்கான பயன்பாட்டுக் கட்டணமாக ஹூண்டாய் நிறுவனத்திற்கு நாம் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட காருக்கு பெட்ரோல் போடுவது போல என வைத்துக் கொள்ளுங்களேன். இந்தியாவில் எலெக்ட்ரிக் காருக்கு BaaS திட்டத்தை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் ஏழாவதாகச் சேர்ந்திருக்கிறது ஹூண்டாய்.
கிரெட்டா எலெக்ட்ரிக் காரில் வேறு மாற்றங்கள்:
இந்த எஸ்யூவியில் பயணிகள் எளிதாக உள்ளே ஏறவும், இறங்கவும் பயன்படும் வகையில் இன்டகிரேட்டட் சைடு ஸ்டெப்பை ஹூண்டாய் தற்போது கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மேம்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இதுவரை 11 kW AC ஹோம் சார்ஜர் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி 7.4 kW AC ஹோம் சார்ஜரையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
கிரெட்டா எலெக்ட்ரிக் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சு:
இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 42 kWh மற்றும் 51.4 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுக்கிறது ஹூண்டாய். இதில் சிறிய பேட்டரி பேக்கானது 420 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 510 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.
பவர்ட்ரெயினாக சிறிய பேட்டரி பேக்குடன் 135 hp பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும், பெரிய பேட்டரி பேக்குடன் 171 hp பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் காரின் முன்பக்க ஆக்சிலில் இணைக்கப்பட்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு BaaS திட்டத்தைக் கொடுக்க ஹோண்டா முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் இது வாடிக்கையாளர்களின் மனதை மாற்றி அதிக விற்பனைக்கு வழிவகுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது BaaS திட்டத்தைத் தவிர இன்னும் நிறைய விஷயங்களை இந்தக் காரில் ஹூண்டாய் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதே எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications