ஜனவரியில் வருகிறது ஹூண்டாய் பேயான் சிஎன்ஜி கார்! மைலேஜில் கலக்குமா?
ஹூண்டாய் பேயான் எஸ்யூவியின் சிஎன்ஜி (CNG) மாடல் வரும் ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள பேயான் காரில், சிஎன்ஜி வசதியும் சேர்க்கப்படுவது எரிபொருள் செலவைக் குறைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக மாறும்.
தினசரி அலுவலகப் பயணம், குடும்பப் பயன்பாடு எனப் பல தேவைகளுக்கு எஸ்யூவி வாங்க நினைப்பவர்கள், காரின் விலை மட்டுமின்றி அதன் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவையும் கணக்கிடுகின்றனர். அந்த வகையில், ஹூண்டாய் பேயான் சிஎன்ஜி மாடல் வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரிக்கும் விஷயமாக இருக்கிறது.

தற்போதைய ஹூண்டாய் பேயான் காரில் நான்கு சிலிண்டர் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 115 எச்பி பவரையும் 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதே எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு சிஎன்ஜி மாடல் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிஎன்ஜியில் இயங்கும்போது எஞ்சினின் பவர் மற்றும் டார்க் திறன்கள் மாறுபட வாய்ப்புள்ளது.
கியர்பாக்ஸ் தேர்வு
பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. ஆனால், சிஎன்ஜி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வரும் என தெரிகிறது. சிஎன்ஜி கார்களை வாங்கும்போது பொருட்களை வைக்கும் இடவசதி முக்கியமான விஷயமாக உள்ளது.. வழக்கமான சிலிண்டர் அமைப்பு பூட் ஸ்பேஸை குறைக்கும் என்பதால் பேயான் காரில் சிலிண்டர் எங்கு பொருத்தப்பட்டு இருக்கும் என்பதும் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
ஹூண்டாய் பேயான் பெட்ரோல் மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனைவிட நிச்சயமாக கூடுதலாக இருக்கும். இருப்பினும், விலை, வேரியண்ட்டுகள் மற்றும் மைலேஜ் விவரங்கள் வெளியான பிறகே இந்தக் கார் எவ்வளவு சேமிப்பை வழங்கும் என்பதை கணக்கிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஹூண்டாய் பேயான் காரில் சிஎன்ஜி மாடல் அறிமுகம் செய்யப்படுவது, எஸ்யூவி கார் வாங்க இருப்பவர்களுக்கும், எரிபொருள் செலவையும் குறைக்க நினைப்பவர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தியாக இருக்கும். ஆனால், சிஎன்ஜி கார் என்பதாலேயே அது அதிக மைலேஜ் தரும் அல்லது அதிக லாபகரமான தேர்வாக இருக்கும் என்று முடிவு செய்துவிட முடியாது.
அதன் உண்மையான மைலேஜ், பெட்ரோல் மாடலுடனான விலை வித்தியாசம், பூட் ஸ்பேஸ் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவைதான் வாங்கும் முடிவில் முக்கியப் பங்கு வகிக்கும். விலை மற்றும் இதர விபரங்கள் வெளியாகும்போதுதான் அதுகுறித்த கூடுதல் விபரங்களை கணக்கிட்டு முடிவு செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications

