இந்தியாவுக்கான புதிய எஸ்யூவியின் பெயரை அறிவித்தது ஹூண்டாய்... கிரெட்டாவைவிட விலை குறைவான தேர்வு
இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலுக்கு ஹூண்டாய் பேயான் (Hyundai BAYON) எனப் பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி கிரெட்டா எஸ்யூவியைவிட விலை குறைவான மாடலாக இருக்கும்.
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்த அழகான பேயோன் (Bayonne) என்ற அழகிய நகரத்தின் பெயரைத் தழுவி இந்த காரின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. உலகளாவிய வடிவமைப்பு தத்துவத்தையும், வளர்ந்து வரும் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.

பெயர் அறிவிப்போடு ஒரு சுவாரஸ்யமான டீசர் வீடியோவையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. ஒரு நவீன ஆராய்ச்சி மையத்தின் பின்னணியில், நுட்பமான பாகங்கள் ஒன்றிணைந்து 'BAYON' என்ற பெயரை உருவாக்குவது போல இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. 'இன்டலிஜென்ஸ் ஆன்' (Intelligence ON) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த காரில் ஸ்மார்ட் அம்சங்களுக்கும், ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதை அந்நிறுவனம் இந்த டீசர் மூலமாக சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய பேயான் மாடல் குறித்துப் பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சிஇஓ தருண் கார்க், "இது வெறும் புதிய கார் அறிமுகம் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் அன்றாடப் பயணங்களை மிகவும் எளிதாகவும், இயல்பாகவும் மாற்றக்கூடிய ஒரு புதிய முயற்சியாக எடுத்துக் கொண்டு உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்தை எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இதே பேயான் பெயரில் ஒரு கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி விற்பனையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடலானது முற்றிலும் எஸ்யூவி வடிவமைப்பை தாத்பரியத்தை தாங்கி வர இருக்கிறது. ஹூண்டாயின் தற்போதைய கார் வரிசையில் வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய இரண்டு பிரபலமான மாடல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் இது களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற நெரிசல் மிகுந்த சாலைகளில் சுலபமாக ஓட்டுவதற்கும், நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களில் போதிய இடவசதி அளிப்பதற்கும் ஏற்ற வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும். போதிய அளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், நவீன தொழில்நுட்பங்களுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சொகுசான கேபின் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையக்கூடும்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில், ஹூண்டாய் பேயானின் வருகை புதிய போட்டியை உருவாக்கும். அடுத்த சில வாரங்களில் இந்த புதிய காரின் எஞ்சின் விபரங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்த கூடுதல் தகவல்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


