மாருதி ஃபிராங்க்ஸுக்கு போட்டியாக வருது புதிய ஹூண்டாய் கிராஸ்ஓவர் ஹைபிரிட் எஸ்யூவி.. அதுவும் டர்போ இன்ஜினோட!
மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிகச்சிறப்பான கார்களுள் ஒன்றாக இருந்து வருகிறது கிராஸ்ஓவர் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான ஃபிராங்க்ஸ் (Fronx). இந்தக் காருக்குப் போட்டியாக முற்றிலும் புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவியை விரைவில் வெளியிடவுள்ளது ஹூண்டாய். இந்தப் புதிய காரை தற்போது சர்வதேச அளவில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்தப் புதிய கார் என்ன? இதில் இருக்கும் அம்சங்கள் என்ன? ஆகிய தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பேயான் (Bayon) என்ற எஸ்யூவி மாடலையே இந்தியாவிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது ஹூண்டாய். இதன் அடுத்த தலைமுறை மாடலை தற்போது உருவாக்கி வருகிறது ஹூண்டாய். இந்த அடுத்த தலைமுறை மாடலே இந்தியவிலும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவில் ஏற்கனவே சப்-காம்பேக்ட் பிரிவில் இரண்டு எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய்.

ஒன்று டாடா பன்ச்சுக்குப் போட்டியாக விற்பனையில் இருக்கும் எக்ஸ்டர். மற்றொன்று அனைத்து சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படும், பேபி கிரெட்டா என அழைக்கப்படும் வென்யூ. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக புதிய பேயானை வெளியிடவுள்ளது ஹூண்டாய். தற்போது விற்னையில் இருக்கும் பேயான் மாடலானது பார்ப்பதற்கு i20-யின் மேம்படுத்தப்பட்ட வடிவம் போலவே இருக்கிறது.
ஆனால் புதிதாக சோதனை செய்யப்பட்டு வரும் புதிய தலைமுறை பேயான் மாடலின் லுக் அப்படி இருப்பதாகத் தோன்றவில்லை. இதன் ஸ்பைஷாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் பேயான் மாடலை கிராஸ்ஓவர் எஸ்யூவி என்று சொன்னாலும், ஹேட்ச்பேக் போன்ற தோற்றத்தை அது கொண்டிருப்பதை நம்மால் மறுக்க முடியவில்லை. ஆனால், புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் அடுத்த தலைமுறை மாடலானது எஸ்யூவிக்கான தோற்றத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது தற்போதிருப்பதை விட சற்ற பாக்ஸியான டிசைனை புதிய காருக்கு ஹூண்டாய் கொடுத்திருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக காரின் முன்பக்கமும் பின்பக்கமும் சற்று உயர்த்தி வைக்கப்பட்டது போலான உயரமான டிசைனைப் பெற்றிருக்கின்றன. இந்த டிசைன் எஸ்யூவி என்ற பெயருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் பேயான் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மைல்டு ஹைபிரிட் சிஸ்டமையும் கொண்டிருக்கும் இந்த இன்ஜினானது இரண்டு வகையான ட்யூன்களில் பேயானில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறை மாடலில் முறையான ஹைபிரிட் பவர்ட்ரெயினை ஹூண்டாய் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் வெளியிடப்படும் போது வென்யூ மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் பேயானிலும் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனைத் தவிர்த்து முற்றிலும் புதிதாக உருவாக்கப்படும் 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல், ஹைபிரிட் இன்ஜினையும் புதிய பேயானின் இந்திய வெர்ஷனில் ஹூண்டாய் கொடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்டரை விட சற்று பெரிய கார் வேண்டும் என்பவர்களுக்காக புதிய பேயானை உருவாக்கி வருகிறது ஹூண்டாய். இந்தியாவில் தற்போது மிகவும் ஹாட்டான பிரிவு என்றால் அது சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு தான். எஸ்யூவிக்கான அம்சங்களுடன், பட்ஜெட் விலையிலான கார்களை இந்தப் பிரிவிலேயே வாங்க முடியும். எனவே விதவிதமான வசதிகளைக் கொண்ட காம்பினேஷன்களில் புதிய கார்களை இந்தப் பிரிவில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. மாருதி ஃபிராங்க்ஸ் மற்றும் கியா சோனெட் ஆகியவற்றை சில உதாரணங்களாகக் கூறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனமும் தங்களுடைய லக்கை இந்த இடத்தில் முயற்சி செய்யவிருக்கிறது. எக்ஸ்டை விட சற்று அதிகமாக, வென்யூவை விட சற்று குறைவாக ரூ.7 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்தப் புதிய பேயான் எஸ்யூவி மாடலை ஹூண்டாய் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீமியமான லுக்கில் மேம்பட்ட அம்சங்களுடன் குறைவான விலையில் ஒரு கார் கிடைத்தால் நமக்கு கசக்குமா என்ன.
ரூ.7 லட்சத்தில் தொடங்கி ரூ.13 லட்சம் வரையிலான விலையில் இந்தப் புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வரலாம் எனத் தெரிகிறது. பன்ச்-ஐ விட ப்ரீமியமான கார் வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் பேயான வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு முதலில் ஹூண்டாய் சரியான காம்பினேஷனில் இதனைப் பிளேஸ் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








