4.1 மீட்டரில் மீண்டும் ஒரு சைஸில் சிறிய ஹூண்டாய் கார்! மாருதி கார் அருகில் பார்க்கும்போது வித்தியாசம் தெரியுது
ஹூண்டாய் நிறுவனத்தின் புத்தம் புதிய கம்பாக்ட்டான எஸ்யூவி காரான 'பேயான்' (Hyundai Bayon) மீண்டும் ஒருமுறை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதுவும் யாருக்கு பக்கத்தில் தெரியுமா? மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் கலக்கிக் கொண்டிருக்கும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) காரின் அருகில் இது நிறுத்தப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் வேலூரில் ரெடிட் பயனர் 'Tradition Mindless125' என்பவரால் பகிரப்பட்ட இந்த ஸ்பை படங்கள், இந்த இரண்டு எஸ்யூவி கார்களுக்கும் இடையே உள்ள வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்ப அளவிலான வித்தியாசங்களை மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. அறிமுகமான சில மாதங்களிலேயே கிரெட்டாவுக்கு அடுத்தபடியாக, நடுத்தர எஸ்யூவி கார்கள் பிரிவில் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் காராக மாருதி சுஸுகி விக்டோரிஸ் உருவெடுத்துள்ளது.

தற்போது இந்தத் பிரிவில் கிரெட்டாவின் ஆதிக்கத்தைப் பலப்படுத்தவும், மாருதி விக்டோரிஸ் காருக்கு நேரடியாக சவால் விடவும் ஹூண்டாய் இந்த பேயான் காரை களமிறக்கத் தயாராகி வருகிறதோ என்கிற ஆர்வம் வாகன உலகினரிடையே எழுந்துள்ளது. புதிய ஹூண்டாய் பேயான் ஆனது விக்டோரிஸை விட சிறியதா? வென்யூவை விட பெரியதா? என கேட்டால் i20 காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஹூண்டாய் பேயான், சுமார் 4.1 மீட்டர் நீளம் கொண்டது.
ஆனால், மாருதி விக்டோரிஸோ 4.3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு கம்பீரமான எஸ்யூவி கார் என்பதால், நேரில் பார்க்கும்போது பேயானை விட விக்டோரிஸ் பெரியதாகத் தெரிகிறது. இருப்பினும், சோதனையில் உள்ள பேயான் காரில் தடிமனான வீல் ஆர்ச்கள், உயரமான ரூஃப்லைன் மற்றும் அகலமான பின்புற வடிவமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளதால், பெரியதாக வித்தியாசம் தெரியவில்லை.

ரூஃப் ரெயில்கள், கரடுமுரடான பாடி கிளாடிங் மற்றும் புதிய அலாய் சக்கர டிசைன்கள் ஆகியவை புதிய ஹூண்டாய் பேயான் காருக்கு ஒரு அட்டகாசமான கிராஸ்ஓவர் தோற்றத்தைத் தருகின்றன. இதன் முன்பக்க விளக்குகள் ஹூண்டாய் வென்யூ காரைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரிஸ் மற்றும் பேயான் கார்களின் என்ஜின் மற்றும் செயல்திறனை பொறுத்தவரையில், பேயான் கார் இரண்டு என்ஜின் ஆப்ஷன்களுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின். மற்றொன்று, 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வரும் 1.2-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் என்ஜின் ஆகும். இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 78 பிஎச்பி பவரையும், 112.7 என்.எம் டார்க் திறனையும் வழங்கும்.
அதே வேளையில் டர்போ என்ஜின் 99 பிஎச்பி பவரையும், 171.6 என்.எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். வெளிநாடுகளில் பேயான் காரில் பிரண்ட்-வீல் டிரைவ் (FWD) ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. மறுபுறம், மாருதி விக்டோரிஸ் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 139Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. விக்டோரிஸ் காரில் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனும் இருப்பது அதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
தொழில்நுட்பம் மற்றும் சொகுசு அம்சங்களை பொறுத்தவரையில், ஹூண்டாய் கார் என்றாலே தொழில்நுட்ப அம்சங்களுக்கு பஞ்சமிருக்காது அல்லவா? பேயானில் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேயானின் டாப் வேரியண்ட்களில் ADAS போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹூண்டாய் பேயானை விட குறைந்த பவர் எண்களை மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டிருந்தாலும், சவாலான சாலைகளில் சிறப்பான செயல்திறனை விக்டோரிஸ் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதில் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், பெட்ரோல் என்ஜின்களுடன் சேர்த்து பேயான் காரில் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனும் வழங்கப்படலாம் என்று பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications