இதோ வந்துவிட்டது புதிய ஹூண்டாய் பேயான் எஸ்யூவி... விலை ரூ.9.99 லட்சம் மட்டுமே!!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் (Hyundai Bayon) எஸ்யூவியை சற்றுமுன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் பேயான் கார் வென்யூ மற்றும் கிரெட்டா கார்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கியுள்ள இந்த கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.11,000 முன்பணத்துடன் ஏற்கனவே புக்கிங் துவங்கப்பட்ட நிலையில், தற்போது காரின் டெலிவிரிப் பணிகளும் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பு
ஹூண்டாய் பேயான் எஸ்யூவியின் முன்புறத்தில் பிரிக்கப்பட்ட ஹெட்லைட் ஹவுசிங் இடம்பெற்றுள்ளது. காரின் பானெட் பகுதியின் அகலத்துக்கு ஏற்ப அமைந்துள்ள பகல்நேர விளக்குகளும், பம்பரில் பொருத்தப்பட்டுள்ள பிரதான விளக்குகளும் இதற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. பக்கவாட்டில் தடிமனான வீல் ஆர்ச் கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.
பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், பம்பரில் பொருத்தப்பட்டுள்ள இண்டிகேட்டர்கள் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்ற எஸ்யூவியாக பேயான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புற வடிவமைப்பு மற்றும் வசதிகள்
காரின் உட்புறத்தில் ஓட்டுனருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வசதிக்காக இரண்டு 12.3 அங்குல திரைகள் வளைந்த அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டு மற்றும் கதவுப் பகுதிகளில் மென்மையான தொடு உணர்வு கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏசி கட்டுப்பாடுகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பனோரமிக் சன்ரூஃப், இரட்டை வண்ணத்திலான செயற்கை லெதர் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், குளிர்ச்சியை தரும் வசதியுடன் முன் இருக்கைகள் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன. பின்புறப் பயணிகளுக்கான சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் மற்றும் தானியங்கி முறையில் ஒளியைக் குறைக்கும் இன்சைடு ரியர் வியூ மிரரும் வழங்கப்பட்டுள்ளன.
ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் கனெக்டெட் கார் வசதிகள்
புதிய பேயான் காரில் முதல்முறையாக ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஜெனரேட்டிவ் ஏஐ என்ற குரல் உதவியாளர் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பெர்ப்ளெக்சிட்டி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும், சவுண்ட்ஹவுண்ட் நிறுவனத்தின் குரல் தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இயல்பான உரையாடல் முறையில் தகவல்களைக் கேட்பதற்கும், பயணத்தின்போது தேவையான உதவிகளைப் பெறுவதற்கும் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்விடியா தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட் அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. ஹூண்டாய் புளூலிங்க் மூலம் 70-க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கார் வசதிகள் கிடைக்கின்றன. மேலும், 19 வாகனக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நேரடியாக இணையவழி முலமாக அப்டேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரைகளில் 10 இந்தியப் பிராந்திய மொழிகள் மற்றும் இரண்டு சர்வதேச மொழிகளுக்கான ஆதரவும் உள்ளது. மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட குரல் கட்டளைகளைப் பயன்படுத்த முடியும்.

எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்
ஹூண்டாய் பேயான் காரில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக சுமார் 113 எச்பி திறனையும் 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி (IVT) தானியங்கி கியர்பாக்ஸ் என இரண்டு தேர்வுகள் உள்ளன.
தானியங்கி கியர்பாக்ஸுடன் டாஷ் பூஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. முந்திச் செல்லும்போது விரைவான முடுக்கத்தைப் பெற இது உதவும். ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்டர் வசதியும், எக்கோ, நார்மல், ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் தரும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
இந்த காரில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா ஆகியவையும் இடம்பெறுகின்றன.
ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் லெவல் 2 ப்ரோ அடாஸ் (ADAS) அமைப்பில் முன்புற மோதல் எச்சரிக்கை, மோதலைத் தவிர்க்கும் உதவி, தடம் மாறுதல் எச்சரிக்கை, தடம் மாறாமல் வாகனத்தை செல்ல உதவும் வசதி மற்றும் பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை உள்ளிட்ட ஓட்டுனர் உதவி அம்சங்கள் உள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹைவே டிரைவிங் அசிஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கார் குளோபல் கே என்ற புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வலுவூட்டப்பட்ட உடல் கட்டமைப்பு மற்றும் அதிக வலிமை கொண்ட எஃகு பயன்பாடு மூலம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ஹூண்டாய் முயன்றுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ விபத்து சோதனை மதிப்பீடு வெளியாகும் வரை இதன் பாதுகாப்புத் தரவரிசையை உறுதியாகக் குறிப்பிட முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஹூண்டாய் பேயான் கார் மாடலானது நவீன வடிவமைப்பு, பெரிய டிஜிட்டல் திரைகள், ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளை ஒரே தொகுப்பில் வழங்குகிறது. குறிப்பாக, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் ஓட்டுநர் உதவி வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது கவனிக்கத்தக்க தேர்வாக அமைகிறது. வென்யூ காரைவிட அதிக இடவசதி, மேம்பட்ட ஓட்டுதல் தரத்தை பெற விரும்புவோருக்கும், கிரெட்டா எஸ்யூவியை விட விலை குறைவான தேர்வாகவும் இது வந்துள்ளது.


Click it and Unblock the Notifications



