பேயான், கிரெட்டா இடையே பங்காளி சண்டை... சொந்த காசில் சூன்யம் வைத்ததா ஹூண்டாய்?

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த புதிய காரின் விலை மற்றும் வசதிகளைப் பார்க்கும்போது, ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் கிரெட்டாவுக்கே பேயான் போட்டியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக, பேயான் மற்றும் கிரெட்டா ஆகிய இரண்டு கார்களும் ஒரே விலை வரம்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரே நிறுவனத்தின் இரண்டு கார்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதால், ஹூண்டாய் தனது விற்பனையை அதிகரிக்கிறதா அல்லது சொந்த தயாரிப்புகளுக்கு இடையே போட்டியை உருவாக்குகிறதா என்பதை பார்க்கலாம்.

Hyundai Bayon Vs Creta

ஹூண்டாய் பேயான் கார் ரூ.10 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதன் HX2 அடிப்படை வேரியண்ட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நவீன எஸ்யூவி அனுபவத்தை வழங்குகிறது. இதற்கு அடுத்த HX3 வேரியண்ட் ரூ.10.90 லட்சத்திலும், HX3+ வேரியண்ட் ரூ.11.80 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

பேயான் HX5 மேனுவல் வேரியண்ட் ரூ.12.45 லட்சத்திலும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.13.85 லட்சத்திலும் கிடைக்கிறது. HX6 மேனுவல் ரூ.13.57 லட்சம், ஆட்டோமேட்டிக் ரூ.14.97 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் உயர்நிலை HX8 மற்றும் HX10 வேரியண்ட்டுகளும் கிரெட்டா விலை வரம்பிற்குள் வருகின்றன. அதாவது, ரூ.18.15 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் டாப் வேரியண்ட் கிடைக்கிறது.

Also Read

ஹூண்டாய் கிரெட்டா காரின் பெட்ரோல் வேரியண்ட்டுகள் பேயான் காருடன் போட்டி போடுகிறது. கிரெட்டா காரின் ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.06 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதன் அடிப்படை E வேரியண்ட்டை தொடர்ந்து EX, EX(O), S(O) உள்ளிட்ட வேரியண்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெட்ரோல், டீசல், மேனுவல், ஆட்டோமேட்டிக் என பல்வேறு தேர்வுகள் இருப்பது கிரெட்டாவின் முக்கிய பலமாக உள்ளது.

இரண்டு கார்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 115 எச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனால், எஞ்சின் செயல்திறனை மட்டுமே அடிப்படையாக வைத்து கார்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது.

Also Read

ஆனால், பேயான் காரில் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இரட்டை 12.3 அங்குல திரைகள், மேம்பட்ட இணைப்பு வசதிகள், ஜெனரேட்டிவ் ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் லெவல் 2 ப்ரோ ஏடிஏஎஸ் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

கிரெட்டா ஏற்கெனவே இந்திய வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை பெற்றுள்ள மாடலாக இருக்கிறது. விசாலமான இடவசதி, டீசல் எஞ்சின் தேர்வு, டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதற்கு சாதகமாக உள்ளன. குறிப்பாக, குடும்பத்துடன் பயணிப்பவர்களுக்கு கிரெட்டா தொடர்ந்து வலுவான தேர்வாக இருக்கிறது.

இருப்பினும், கிரெட்டாவின் ஆரம்ப வேரியண்ட்டை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், சற்று கூடுதல் தொகையை செலுத்தி பேயான் HX3 அல்லது HX3+ வேரியண்ட்டுகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கிரெட்டாவின் நடுத்தர வேரியண்ட்களை வாங்குபவர்களும் பேயானின் உயர்நிலை வேரியண்ட்டுகளை பரிசீலிக்கலாம்.

இதனால், பேயான் அறிமுகம் கிரெட்டாவின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஒரே நிறுவனத்தின் இரண்டு கார்களும் ஒரே வாடிக்கையாளர்களை குறிவைக்கும்போது, ஒரு காரின் விற்பனை அதிகரிப்பது மற்றொரு காரின் விற்பனையை குறைக்கக்கூடும். இதனை ஆட்டோமொபைல் துறையில் தயாரிப்புகளுக்கு இடையேயான விற்பனை போட்டி என குறிப்பிடுகின்றனர்.

ஆனால், ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வுகளை விருப்பப்படி வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாடல்கள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. சற்றே குறைந்த விலை பட்ஜெட் எஸ்யூவி வாங்க விரும்புபவர்களை பேயான் ஈர்க்கும் நிலையில், அதிக இடவசதி மற்றும் பல எஞ்சின் தேர்வுகளை விரும்புபவர்களுக்கு கிரெட்டா தொடர்ந்து விற்பனை செய்யப்படலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை நிறுவனத்திற்குள் கொண்டுவர முடியும்.

பேயான் அறிமுகம் ஹூண்டாய்க்கு சாதகமாக அமையுமா அல்லது கிரெட்டாவின் விற்பனையையே பாதிக்குமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரியவரும். விலை நிர்ணயம், வாடிக்கையாளர்களின் தேர்வு மற்றும் விற்பனை புள்ளிவிவரங்கள் இதற்கு பதிலளிக்கும். ஹூண்டாய் தனது சொந்த தயாரிப்புகளுக்கு இடையே உருவாக்கியுள்ள இந்த போட்டி சுவாரஸ்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

எனினும், அடுத்த சில மாதங்களில் ஹூண்டாய் கிரெட்டாவின் புதிய மாடல் சந்தைக்கு வர இருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள் என அடுத்த லெவலுக்கு இந்த மாடல் கொண்டு செல்லப்படும். அது நிச்சயமாக அதிக விலை வித்தியாசத்தில் நிலைநிறுத்தப்படும் என்பதால் வெவ்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமையும் என்று கூறலாம்.

Article Published On: Tuesday, November 3, 2026, 9:51 [IST]
English summary
Hyundai bayon vs creta price variants competing each other india
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out