டிஃபென்டரை நினைவூட்டும் ஹூண்டாய் Boulder எஸ்யூவி... இந்தியாவில் டிசைன் காப்புரிமை பதிவு!
இந்திய சந்தையில் தொடர்ந்து எஸ்யூவி வரிசையை விரிவுபடுத்தி வரும் ஹூண்டாய், தற்போது முழுமையான ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது. ஜீப் ரேங்க்லர், லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்ற முரட்டுத்தனமான ஆஃப்ரோடு SUV-களை நினைவூட்டும் வகையில் புதிய மாடலை உருவாக்கி வருகிறது. அந்த அளவுக்கு மிக முரட்டுத்தனமான தோற்றமும், ஆஃப்ரோடு அம்சங்களையும் இந்த கான்செப்ட் மாடல் கொண்டுள்ளது.
போல்டர் (Boulder) என்ற பெயரிலான இந்த புதிய மாடலின் தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்களை கொண்ட கான்செப்ட் மாடலின் டிசைனுக்கு ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பம் பதிவு செய்துள்ளது. இந்த மாடலை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ஹூண்டாய் பரிசீலிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த Boulder காரின் Concept-ஐ கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2026 நியூயார்க் சர்வதேச ஆட்டோ ஷோவில் உலகிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. வழக்கமான நகர்ப்புற எஸ்யூவிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, கடினமான ஆஃப்-ரோடு பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கான்செப்ட் மாடலாக இது கவனம் ஈர்த்தது.
முரட்டுத்தனமான தோற்றம்
ஹூண்டாய் போல்டரின் மிகவும் முரட்டுத்தனமான வடிவமைப்பே இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உள்ளது. பார்த்தவுடனே ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்டக வடிவிலான (Boxy) உடல் அமைப்பு, உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், சதுர வடிவிலான எல்இடி லைட்டுகள், அகலமான வீல் ஆர்ச்சுகள், வலுவான முன்புற பம்பர், பெரிய ஸ்கிட் பிளேட்கள், கூரையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ரூஃப் கேரியர் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட முழு அளவிலான ஸ்பேர் வீல் ஆகியவை இதை ஒரு உண்மையான ஆஃப்-ரோடராக காட்டுகின்றன. கான்செப்டில் காணப்பட்ட மிகப்பெரிய ஆல்-டெரெயின் டயர்களின் தோற்றமும் காப்புரிமை படங்களிலும் பெரும்பாலும் தொடர்கிறது.
இந்த கான்செப்டில் ஹூண்டாய் தனது புதிய "Art of Steel" என்ற புதிய வடிவமைப்பு மொழியை பயன்படுத்தியுள்ளது. வலிமை மற்றும் பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டிசைன், ஜீப் ரேங்க்லர், ஃபோர்டு பிராங்கோ, லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்ற மாடல்களை நினைவூட்டுகிறது.

புதிய பிளாட்ஃபார்ம்
இந்த Boulder Concept-ன் முக்கியத்துவம் அதன் தோற்றத்தில் மட்டுமல்ல. இது ஹூண்டாயின் முதல் லேடர்-ஃபிரேம் (Body-on-Frame) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட கான்செப்ட் மாடலாகும். இந்த பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு வட அமெரிக்க சந்தைக்காக 2030-க்குள் ஒரு மிட்சைஸ் பிக்கப் டிரக் தயாரிக்கப்படும் என்று ஹூண்டாய் ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதே அடிப்படையில் ஒரு SUV-யும் உருவாக வாய்ப்புள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் சாத்தியமா?
தற்போதைக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா, Boulder-ஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், டிசைன் காப்புரிமை பதிவு செய்வது மட்டுமே அந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தாது. பல நிறுவனங்கள் எதிர்கால திட்டங்களுக்காக அல்லது வடிவமைப்பை பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற காப்புரிமைகளை பதிவு செய்வது வழக்கமான நடைமுறைதான் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

என்னென்ன இன்ஜின் தேர்வுகள் வரலாம்?
Boulder-ன் தயாரிப்பு பதிப்புக்கான இன்ஜின் அல்லது தொழில்நுட்ப விவரங்களை ஹூண்டாய் இதுவரை வெளியிடவில்லை.புதிய லேடர்-ஃபிரேம் கட்டமைப்பு பல்வேறு வகையான பவர்டிரெயின்களை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்படலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் கருதுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து
இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகிந்திரா தார், மாருதி ஜிம்னி, ஜீப் ரேங்க்லர் போன்ற மாடல்கள் இந்த பிரிவில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் ஹூண்டாய் Boulder-ஐ தயாரிப்பு மாடலாக இந்தியாவிற்கும் கொண்டு வந்தால், பிரீமியம் ஆஃப்-ரோடு எஸ்யூவி பிரிவில் புதிய போட்டியை உருவாக்கும் திறன் அதற்கு உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில், இந்தியாவில் காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டிருப்பது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; அறிமுகம், விலை மற்றும் வெளியீட்டு காலம் குறித்து ஹூண்டாய் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications
