செப்டம்பர் முதல் ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது: ரூ.20,000 வரை அதிகரிக்க வாய்ப்பு!
மாருதி, டாடா கார் நிறுவனங்களை போன்று ஹூண்டாய் நிறுவனமும் விலை உயர்வை கையில் எடுத்துள்ளது. வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலை 1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளை பொறுத்து ரூ.20,000 வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்து ரக கார்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், அனைத்து கார்களுக்கும் ஒரே அளவில் விலை உயர்வு இருக்காது. ஒவ்வொரு மாடலுக்கும், அதன் வேரியண்ட்டுகளுக்கும் இந்த விலை உயர்வு வேறுபடும். இதுகுறித்து மாடல் வாரியான விலை விவரங்கள் வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களாக க்ரெட்டா, வென்யூ, எக்ஸ்டர், வெர்னா, அல்கஸார், ஐ20, க்ராண்ட் i10 நியோஸ், ஆரா மற்றும் க்ரெட்டா எலெக்ட்ரிக் ஆகியவை விற்பனையில் உள்ளன. இதில், ஐ10 க்ராண்ட் நியோஸ் காருக்கு ரூ.7,000 முதல் அதிகபட்சமாக க்ரெட்டா எலெக்ட்ரிக் மாடலுக்கு ரூ.20,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.
கார் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உலக அளவில் நிலவும் அரசியல் பிரச்னைகள், போர் உள்ளிட்டவற்றால் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் செலவுகளை அதிகரிப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்னைகளால் அதிகரித்து வரும் செலவுகளில் ஒரு பகுதியை நிறுவனம் இதுவரை தானே ஏற்றுக்கொண்டதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க தொடர்ந்து செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது. அதேநேரத்தில், நிறுவனத்தின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறிய சுமையை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நடப்பு 2026ம் ஆண்டில் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் இத்துடன் மூன்றாவது முறையாக தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 0.6 சதவீதம் வரையிலும், அதன் பிறகு ஜூன் மாதத்தில் மாடல் மற்றும் வேரியண்டைப் பொறுத்து ரூ.12,800 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக செப்டம்பர் முதல் மீண்டும் கார்களின் விலையை உயர்த்துவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, பண்டிகை காலத்தில் புதிய ஹூண்டாய் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு கூடுதல் சுமையை வழங்கும். அதேபோன்று, ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள், செப்டம்பரில் டெலிவிரி எடுக்கும் நிலை இருந்தால் இந்த விலை உயர்வு உங்களது டீலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியமாகிறது. புதிதாக முன்பதிவு செய்பவர்களும் இந்த விலை உயர்வு குறித்து தெரிந்துகொண்டு முன்பதிவு செய்தால் தேவையற்ற விஷயங்களை தவிர்க்க முடியும்.
ஏற்கனவே மாருதி சுஸுகி கார்களின் விலையை உயர்த்திய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் செப்டம்பர் முதல் கார் விலையை ரூ.25,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மேலும், மாதத் தவணைகளும் சிறிதளவு அதிகரிக்கும். எனவே, புதிய கார் வாங்குவோர் சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்களின் டீலர்களிடம் விசாரணையை போட்டு அதற்கு பிறகு முடிவு செய்வது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications

