ஒரு சமயத்தில் எப்படி இருந்த ஹூண்டாய் கம்பெனி... கார் விற்பனையில் இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு!!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 58,702 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024 டிசம்பரில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில், விற்பனையில் 6.6% வளர்ச்சி ஆகும். கடந்த டிசம்பரில், ஹூண்டாயின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் இந்த வளர்ச்சி வெளிப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ஹூண்டாய் நிறுவனத்திற்கு இது, நேர்மறையான 2025ஆம் ஆண்டின் இறுதி மாதமாக அமைந்தது. இருப்பினும், 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஹூண்டாயின் கடந்த மாத விற்பனையில் சரிவு காணப்படுகிறது. 2025 நவம்பரில் 66,840 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் 8,138 கார்கள் குறைவாக (12.2%) விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரை, 2025 டிசம்பரில் 42,416 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 நவம்பர் மாதத்தின் 50,340 யூனிட் ஹூண்டாய் கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில் 7,924 யூனிட்கள் குறைவாகும். இது ஹூண்டாய் கார்களின் உள்நாட்டு விற்பனையில் 15.7% சரிவைக் காட்டுகிறது.
அதேநேரம், ஹூண்டாயின் கடந்த டிசம்பர் மாத உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை ஆனது கடந்த ஆண்டின் டிசம்பருடன் (42,208 யூனிட்கள்) ஒப்பிடுகையில் 0.5% எனும் சிறிய வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. ஹூண்டாயின் ஏற்றுமதி எண்ணிக்கைகள் கடந்த டிசம்பர் மாதத்தில் சற்றே நிலையாக இருந்தன. கடந்த மாதத்தில் 16,286 ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், முந்தைய நவம்பர் மாதத்தில் 16,500 யூனிட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி ஆனது 214 யூனிட்கள் அல்லது 1.3% என்கிற சிறிய சரிவைக் குறிக்கிறது. இருப்பினும், 2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பரில் ஹூண்டாயின் ஏற்றுமதி 26.5% அதிகரித்துள்ளது. ஹூண்டாய் கார்களின் ஏற்றுமதி எண்ணிக்கைகள் 12,870 யூனிட்களில் இருந்து 16,286 யூனிட்களாக உயர்ந்துள்ளன.
கடந்த மாதத்தில் ஹூண்டாய் கார்களின் ஏற்றுமதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) சீர்திருத்தங்கள் முக்கிய காரணம் என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களின் நேர்மறையான உத்வேகம் கார்கள் ஏற்றுமதியையும், 'மேட்-இன்-இந்தியா, மேட்-ஃபார்-தி-வேர்ல்ட்' (இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்திற்காக தயாரிக்கப்பட்டது) எனும் ஹூண்டாய் நிறுவனத்தின் தத்துவத்தையும் ஆதரிக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு.தருண் கார்க், கடந்த டிசம்பர் மாத விற்பனை குறித்து கருத்து கூறுகையில், "ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் ஏற்பட்ட நேர்மறையான உத்வேகத்தால், 2025 டிசம்பரில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா மொத்தம் 6.6% என்கிற வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ (VENUE) வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே 55,000 முன்பதிவுகளை புதிய வென்யூ எட்டியுள்ளது. மேலும், எங்கள் 'மேட்-இன்-இந்தியா, மேட்-ஃபார்-தி-வேர்ல்ட்' இலக்கை உறுதிப்படுத்தும் வகையில், டிசம்பரில் ஏற்றுமதியில் 26.5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சமயத்தில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு அடுத்து ஹூண்டாய் இருந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை மஹிந்திராவும், டாடா மோட்டார்ஸும் போட்டிப் போட்டுக் கொண்டு முந்திக்கொண்டு வருகின்றன. அது கடந்த டிசம்பர் மாத விற்பனையிலும் பிரதிபலித்துள்ளது.


Click it and Unblock the Notifications









