இந்தக் காரை பெருசா அப்டேட் செய்யும் ஹூண்டாய்.. மாருதிக்கு இப்போவே அல்லு விட்ருக்கும்!
எத்தனை புதிய கார்கள் வந்தாலும் தன்னுடைய இடத்தில் இருந்து நகராமல் அதிக யூனிட்டுகள் விற்பனையாகும் கார் மாடல்கள் சில தான். அதில் ஒன்று ஹூண்டாயின் கிரெட்டா. மிட்-சைஸ் எஸ்யூவி காராக விற்பனை செய்யப்பட்டு வரும் இது, விலை குறைவான சப்-காம்பேக்ட் மற்றும் சிறிய ரக கார்களுக்குப் போட்டியாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காராக இருக்கிறது. இதனை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது ஹூண்டாய்.
கிரெட்டாவை ஹூண்டாய் அப்டேட் செய்யவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெளிநாடுகளில் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா மாடலை தொடர்ந்து சோதனை செய்தும் வருகிறது ஹூண்டாய். அப்படி இந்தக் கார் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட போது, புதிய கார் எப்படி இருக்கலாம், என்னென்ன மாற்றங்களைக் கொண்டிருக்கலாம் என்பது குறித்த சில முக்கியத் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அது குறித்து இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புதிய கிரெட்டாவை ஒரு ஃபேஸ்லிப்ட் அப்டேட்டாக மட்டும் இல்லாமல் புதிய தலைமுறை அப்டேட்டாக உருவாக்கி வருகிறது ஹூண்டாய். இதனால் முற்றிலும் புதிய வடிவிலான, மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு காராக புதிய கிரெட்டாவை ஹூண்டாயிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக தற்போது இருப்பதை விட அளவில் சற்று பெரிய காராக புதிய ஹூண்டாய் கிரெட்டா இருக்கும் எனத் தெரிகிறது. சோதனை செய்யப்பட்டு வரும் கார்கள் தற்போது விற்பனையில் இருப்பதை விட அளவில் சற்று பெரிதாகவே இருக்கின்றன.
கிரெட்டா மற்றும் செல்டோஸ் ஆகிய இரண்டும் அண்ணன் தம்பி மாடல் போலத்தானே. இரண்டும் அடிப்படையில் ஒரே பிளாட்ஃபார்மையே பயன்படுத்துகின்றன. இந்தாண்டு ஜனவரி மாதம் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலை கியா இந்தியாவில் வெளியிட்டது. முந்தைய செல்டோஸ் மாடலை விட இந்தப் புதிய செல்டோஸ் அளவில் பெரிதாக இருந்தது.

இதற்கு முக்கியக் காரணம், முந்தைய தலைமுறை செல்டோஸ் மாடலானது K2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. புதிய செல்டோஸ் மாடலானது மேம்பட்ட K3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா மாடலும் K2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், புதிய கிரெட்டா மாடலானது K3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் புதிய செல்டோஸைப் போலவே புதிய தலைமுறை கிரெட்டாவும் அளவில் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது. முந்தைய தலைமுறை செல்டோஸ் மாடலானது 4,315 மிமீ நீளம், 1800 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புதிய செல்டோஸ் மாடலானது 4,460 மிமீ நீளம், 1,830 மிமீ அகலம் மற்றும் 1,635 மிமீ உயரத்தைக் கொண்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் கிரெட்டா மாடலானது 4,330 மிமீ நீளம், 1,790 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரம் என முந்தைய தலைமுறை செல்டோஸ் மாடலின் அளவுகளை ஒற்றிருக்கிறது. புதிய கிரெட்டா மாடலானது புதிய செல்டோஸைப் போலவே 4,500 மிமீ-ஐ ஒட்டி நீளம் மற்றும் கூடுதல் அகலம் மற்றும் உயரத்தைக் கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் முன்பை விட நல்ல இடவசதி கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி காராக புதிய ஹூண்டாய் கிரெட்டா இருக்கும்.
புதிய K3 பிளாட்ஃபார்மில் உருவாகும் கிரெட்டா மாடலானது உறுதியான கட்டமைப்பைக் கொண்டு, கடினமாக இருப்பதுடன் குறைவான NVH அளவுகளையும் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. காரின் உள்ளே இடவசதி கூடுதவதோடு, தற்போதிருப்பதை விட அதிக பூட் ஸ்பேஸும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது. தற்போதைய கிரெட்டா மாடலில் 433 லிட்டர் பூட் ஸ்பேஸே உள்ளது. ஆனால் போட்டியாளர்களான டாடா சியரா மற்றும் ரெனோ டஸ்டர் ஆகிய கார்கள் முறையே 622 லிட்டர் மற்றும் 700 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளன.
தற்போது கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகளவு வெளியூர் பயணம் செல்ல அல்லது சுற்றுலா பயணம் செல்ல விரும்புவதால் பெரிய பூட் ஸ்பேஸ் இருக்கும் கார்களையே வாங்க விரும்புகிறார்கள். தற்போதைய வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான அளவுகோளாக பூட் ஸ்பேஸ் மாறியிருக்கிறது.
காரின் உள்ளே குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம். பல்வேறு புதிய வசதிகளும் கூட எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக புதிய ஸ்டீயரிங் வீல், பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், புதிய UI, அனைத்து பயணிகளுக்கும் ஹெட்ரெஸ்ட், பாஸ் மோடு, புதிய ADAS பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகிய வசதிகள் புதிய தலைமுறை கிரெட்டாவில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.
மெக்கானிக்கலாக புதிய கிரெட்டாவில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளே புதிய கிரெட்டாவிலும் கொடுக்கப்பட்டிருக்கும். கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது. இந்த புதிய தலைமுறை மாடலுடன் இல்லை என்றாலும், அதற்கு அடுத்ததாக இந்த கிரெட்டா எஸ்யூவியில் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயினைக் கொடுத்து ஹூண்டாய் அப்டேட் செய்யலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த 2026ன் இறுதியில் அல்லது 2027-ன் தொடக்கத்தில் இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவியின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்களான டாடா சியா, கியா செல்டோஸ், ரெனோ டஸ்டர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மாருதி கிராண்டு விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகவுள்ளது புதிய ஹூண்டாய் கிரெட்டா.
டிரைவஸ்பார்க் கருத்து: கடந்த ஆறு மாத காலத்தில் இந்திய மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவு நிறையவே மாறிவிட்டது. சியரா, டஸ்டர் உள்ளிட்ட புதிய கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. குஷாக் மற்றும் டைகூன் உள்ளிட்ட கார்கள் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. எனவே ஹூண்டாயும் தங்களுடைய காரை விரைவில் அப்டேட் செய்ய வேண்டிய கட்டயாத்தில் உள்ளது. புதிய கார் தற்போதைய மாடலை விட அதிகம் விற்பனையாகும் என்பதில் மட்டும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications