கிரெட்டா எஸ்யூவியை இப்போ 1 லட்சம் ரூபாய் சலுகை விலையில் விற்பனை
எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்து வரும் கிரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவிக்கு இந்த ஜூன் மாதம் 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிரெட்டா எஸ்யூவியை வாங்கத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பான நேரம். 1 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் இந்த எஸ்யூவியை வாங்கலாம். பல்வேறு வகைகளில் கிரெட்டாவிற்காக சலுகைகளை இந்த ஜூன் மாதம் வழங்குகிறது ஹூண்டாய்.
கிரெட்டாவின் பெட்ரோல் வேரியன்ட்களுக்கே அதிக சலுகைகளை இந்த ஜூன் மாதம் ஹூண்டாய் வழங்கியிருக்கிறது. 35,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி, 50,000 ரூபாய் வரையிலான ஸ்கிராப்பேஜ் அல்லது எக்ஸ்சேஞ்சு போனஸ் மற்றும் 15,000 ரூபாய் வரையிலான அப்கிரேடு சலுகை என சேர்த்து மொத்தமாக 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை கிரெட்டா எஸ்யூவிக்கு இந்த மாதம் மாதம் ஹூண்டாய் வழங்குகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இதுவரை கிரெட்டாவிற்கு இவ்வளவு சலுகைகளை ஹூண்டாய் அளித்ததே இல்லை. சலுகைகளை அளிக்க வேண்டிய தேவை வரவில்லை. பொதுவாக குறைவாக விற்பனை செய்யப்படும் கார் மாடல்களுக்கே அதன் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் சலுகைகளை அறிவிக்கும். கிரெட்டா எப்போதும் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு காராகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக அதன் விற்பனை சரிந்து வருகிறது. அதனை சரிக்கட்டவே இந்த சலுகைகளை கிரெட்டாவிற்கு வழங்கியிருக்கிறது ஹூண்டாய். கொஞ்சம் ஸூம் அவுட் செய்து பார்த்தால் இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கடந்தாண்டு மே மாதம் கிரெட்டாவிற்கு வெறும் 5,000 ரூபாய் வரையிலான சலுகைகளை மட்டுமே ஹூண்டாய் அளித்திருக்கிறது. அது இந்தாண்டு ஜனவரி மாதம் 40,000 ஆக உயர்ந்து, தற்போது 1 லட்சம் ஆகியிருக்கிறது.

மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் கிரெட்டா தான் இதுவரை அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இருந்து வந்தது. ஆனால் கடந்த மே மாதம் முதல் முறையாக கிரெட்டாவை விட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அதிகமாக விற்பனையாகியிருக்கிறது. கடந்த மே மாதம் கிரெட்டா 14,582 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், ஸ்கார்ப்பியோ 14,719 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
இது சிறிய அளவிலான மாற்றம் தான். ஆனால் இதுவரை கிரெட்டா சந்திக்காத ஒன்று. அப்படியென்றால் வரும் மாதங்களில் கிரெட்டாவின் விற்பனை இன்னும் குறையும் என்பதையே இது காட்டுகிறது. கிரெட்டாவின் இந்த விற்பனை வீழ்ச்சியை சரிசெய்வதற்காக தற்போது நிறைய சலுகைகளை அளிக்கத் தொடங்கியிருக்கிறது ஹூண்டாய். அடுத்ததாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய அம்சங்களுடன் இந்தக் காரை அந்நிறுவனம் அப்டேட் செய்யலாம்.
கிரெட்டாவை விட ஸ்கார்பியோ கொஞ்சம் அதிகமாக விற்பனையாகியிருப்பதால், இப்போது கிரெட்டாவைத் தவிர்த்து மக்கள் ஸ்கார்பியோ பக்கம் திரும்பி விட்டார்கள் என்பது அல்ல விஷயம், கிரெட்டாவிற்கு போட்டி கடினமாகியிருக்கிறது. ஸ்கார்பியோவின் விற்பனை அளவு அதே இடத்தில் இருக்கும் நிலையில், கிரெட்டாவின் விற்பனை சரியத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் கிரெட்டாவிற்குப் போட்டியாக, மாருதி விக்டோரிஸ், டாடா சியரா, ரெனோ டஸ்டர் என மூன்று புத்தம் புதிய எஸ்யூவிக்கள் வெளியாகியிருக்கின்றன. தொடர்ந்து கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகிய எஸ்யூவிக்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன. புதிதாக டெக்டான் என்ற மிட்-சைஸ் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் வெளியிடவுள்ளது நிஸான். கடைசியாக 2024 ஜனவரியில் தான் கிரெட்டாவை அப்டேட் செய்தது ஹூண்டாய்.
கிரெட்டாவிற்கு போட்டி கூடிக் கொண்டே வருகிறது. ஆனால் ஹூண்டாய் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் கிரெட்டாவிற்கான அப்டேட்டை ஏற்கனவே அந்நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது விரைவில் அதன் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. ஹைபிரிட் பவர்ட்ரெயின் மற்றும் இன்னும் எதிர்பாராத பல அம்சங்களை புதிய கிரெட்டாவில் ஹூண்டாய் கொடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன.
மேலும், தற்போதைய கிரெட்டாவை விட புதிய கிரெட்டா மாடலானது அளவில் இன்னும் சற்றே பெரிதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. புதிய கிரெட்டா வருவதனால் கூட தற்போது இருக்கும் மாடலின் விற்பனை குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் புதிய கிரெட்டாவை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போட்டி நிறுவனங்களின் மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்கு முன்னாள் தற்போதைய கிரெட்டா மாடல் கொஞ்சம் பழையதாகத் தெரியத் தொடங்கிவிட்டது. எனவே விரைவில் ஹூண்டாய் புதுமையைப் புகுத்தியே ஆக வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறது. ஏற்கனவே அதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதால் பெரிய பிரச்சினையில்லை. அப்டேட் செய்யப்படும் புதிய கிரெட்டா மாடலின் விற்பனை பழையபடி விற்பனையை மீட்டெடுக்கும் என்றே நாங்கள் நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications