வாங்குனா இந்தக் காரைத் தான் வாங்கனும்.. ஏன் தெரியுமா.. கேட்டா வாயடைச்சுப் போயிடுவீங்க!
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு மிட்-சைஸ் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் டாப் 5 இடங்களுக்குள் இந்த எஸ்யூவி கார் வந்துவிடுகிறது. குறைவான விலை கொண்ட சிறிய கார்களே அதிகம் விற்பனையாகும் பட்டியலில் டாப் 10 இடங்களில் அதிகம் வரும் நிலையில், அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கிரெட்டாவும் அவற்றுக்கு இணையாக இந்திய சந்தையில் போட்டியிட்டு வருகிறது.
சரி, இந்த கார் மாடலை இப்போது நீங்கள் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் எந்த வேரியன்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பத்தைத் தீர்க்கவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. கிரெட்டா எத்தனை வேரியன்ட்களாக என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வேரியன்டிலும் என்னென்ன அம்சங்கள் உள்ளன, எந்த வேரியன்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே நாம் பார்க்கலாம்.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள்:
முதலில் இந்த எஸ்யூவி காரில் கொடுக்கப்பட்டிருக்கும் பவர்ட்ரெயின் விவரங்களைப் பார்த்துவிடலாம். இந்த கிரெட்டா எஸ்யூவியில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் (115 hp பவர், 144 Nm டார்க்), 1.5 லிட்டர் டீசல் (116 hp பவர், 250 Nm டார்க்) மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் (160 hp பவர், 253 Nm டார்க்) என மூன்று இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
NA பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர்பாக்ஸ்களில் ஒன்றை நாம் தேர்வு செய்யலாம். டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

வேரியன்ட்கள்:
அடுத்ததாக கிரெட்டா எஸ்யூவி எத்தனை வேரியன்ட்களாக தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதைப் பார்க்கலாம். இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை E, EX, EX(O), S(O), SX, SX ப்ரீமியம் மற்றும் கிங் என 7 வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இதில் சில வேரியன்ட்களை நைட் எடிஷன், டூயல் டோன் மற்றும் சம்மர் எடிஷன் ஆகிய சிறப்பு எடிஷன் மாடல்களாகவும் ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது.
டைட்டானியம் பிளாக், ரோபஸ்ட் எமரால்டு பியர்ல், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே, ஸ்டாரி நைட் ஆகிய நிறத் தேர்வுகளை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கொண்டுள்ளது. இதில் அட்லஸ் ஒயிட் நிறத்தை மட்டும் டூயல் டோனாக கருப்பு நிற ரூஃபுடனு்ம நாம் வாங்கலாம். டைட்டன் கிரே மற்றும் டைட்டானியம் பிளாக் ஆகியவை மேட் ஃபினிஷிலும் கிடைக்கின்றன. அடுத்ததாக வேரியன்ட் வாரியாக இந்த எஸ்யூவி என்னென்ன வசதிகளைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

கிரெட்டா E வேரியன்ட்:
கிரெட்டா எஸ்யூவியின் விலை குறைவான வேரியன்டை வாங்க வேண்டும் என்றால் இதனையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வேரியன்டை பவர்ட்ரெயின் தேர்வுக்கு ஏற்ப ரூ.10.79 லட்சம் முதல் ரூ.12.40 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் என இரண்டு பவர்ட்ரெயின் தேர்வுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த அடிப்படை வேரியன்டில் 6 ஏர்பேக்குகள், ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ச் அசிஸ்ட், ரியர் டிஸ்க் பிரேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய பாதுகாப்பு வசதிகளை ஹூண்டாய் வழங்கியிருக்கிறது. இதைத் தவிர கவர்களுடன் கூடிய 16 இன்ச் ஸ்டீல் வீல்கள், ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள், மேனுவல் IRVM, உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் டிரைவர் சீட், ஃபேப்ரிக் சீட்கள், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன், பின்பக்க AC வெண்ட்கள், USB சார்ஜிங் போர்ட்கள், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், பவர் விண்டோக்கள், ஐடியல் ஸ்டார் அண்டு கோ, கலர் TFT MID-யுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளும் இந்த அடிப்படை வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்பீக்கர்கள் ஆகிய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய சில வசதிகள் இந்த அடிப்படை வேரியன்டில் மிஸ்ஸிங்.
கிரெட்டா EX மற்றும் EX(O) வேரியன்ட்கள்:
கிரெட்டாவின் இரண்டாவது தொடக்கநிலை வேரியன்டாக இருக்கும் EX வேரியன்டானது ரூ.12.05 லட்சம் முதல் ரூ.13.61 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலே நாம் பார்த்த அடிப்படை வேரியன்டைப் போலவே EX வேரியன்டிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி கிடையாது. 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் ஆகிய இரண்டு பவர்ட்ரெயின்களில் இருந்து ஒன்றையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடிப்படையான E வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளுக்கு மேலாக பின்வரும் வசதிகளை EX வேரியன்டில் நாம் பெறலாம். ஷார்க் ஃபின் ஆண்டனா, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ORVM-கள், சன்கிளாஸ் ஹோல்டர், 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 6 ஸ்பீக்கர்கள், வாய்ஸ் ரெகக்னிஷன் மற்றும் ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள் ஆகிய வசதிகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக EX(O) வேரியன்ட். EX வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளுடன் பனோரமிக் சன்ரூஃப் வசதி மட்டுமே இந்த EX(O) வேரியன்டில் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி வேண்டும் என்னும் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வேரியன்ட் இது தான். 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல்/ ஆட்டோமேட்டிக், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மேனுவல்/ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை இந்த வேரியன்டில் நாம் தேர்ந்தெடுக்கலாம்.
ஆட்டோமேட்டிக் வேரியன்ட் என்று சொல்லும் போது அதற்கேற்ப கூடுதல் விலையையும் நாம் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த EX(O) வேரியன்டை ரூ.13.13 லட்சம் முதல் ரூ.16.04 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். பனோரமிக் சன்ரூஃப் வசதியும் மற்ற நிறுவனங்களின் கார் மாடல்களுடன் ஒப்பிடும் போது குறைவான விலை கொண்ட இந்த கிரெட்டா வேரியன்டிலேயே ஹூண்டாய் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிரெட்டா S(O) வேரியன்ட்:
EX(O) வேரியன்ட் கொண்டிருப்பதைப் போலவேயான பவர்ட்ரெயின் காம்பினேஷன்களையே இந்த S(O) வேரியன்டும் கொண்டுள்ளது. இதனை ரூ.14.19 லட்சம் முதல் ரூ.17.25 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். EX(O) வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளுடன் சேர்த்து பல்வேறு மேம்பட்ட வசதிகளும் இந்த S(O) வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் பார்க்கலாம்.
ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், ரியர் வியூ கேமரா, 17 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், LED முகப்பு விளக்குகள் மற்றும் கனெக்டட் DRL-கள், ORVM-ல் இன்டிகேட்டர்கள், பின்பக்க இருக்கைகளுக்கு சன்ஷேடுகள், பார்சல் ட்ரேக்கள் மற்றும் ஹெட்ரெஸ்ட்கள், டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகள் இந்த வேரியன்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன் கீலெஸ் எண்ட்ரி, எலெக்ட்ரானிக்கலாக மடங்கிக் கொள்ளும் வகையில் ORVM-கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பூட் லேம்ப் மற்றும் கூல்டு கிளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளும் உண்டு. இந்த S(O) வேரியன்டின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் டிரைவ் மோடுகள், ட்ராக்ஷன் மோடுகள் மற்றும் பேடில் ஷிப்டர்கள் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
கிரெட்டா SX வேரியன்ட்:
1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் என்ற ஒரேயொரு பவர்ட்ரெயின் தேர்வுடன் மட்டுமே இந்த SX வேரியன்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ரூ.15.03 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். S(O) வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளும் மேலாக, கீழ்காணும் வசதிகள் இந்த SX வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவர் விண்டோ ஒன் டச் அப்/ டவுன், ஆட்டோ டிம்மிங் IRVM, டிரைவர் சீட் பக்க விளக்குகள், லெதரால் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், வாய்ஸ் அடிப்படையில் இயங்கும் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், OTA அப்டேட்கள் மற்றும் அமேஸான் அலெக்ஸா சப்போர்ட் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரெட்டா SX ப்ரீமியம் வேரியன்ட்:
ப்ரீமியமான வசதி வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வேரியன்ட் இது. இந்த SX ப்ரீமியம் வேரியன்டை ரூ.16.33 லட்சம் முதல் ரூ.17.88 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல்/ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் அல்லது 1.5 டீசல் இன்ஜின் மேனுவல் ஆகிய பவர்ட்ரெயின்களில் ஒன்றை இந்த வேரியன்டுடன் நாம் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த SX ப்ரீமியம் வேரியன்டில், டேஷ்கேம், லெதர் போன்ற ஃபினிஷ் கொண்ட சீட்கள், டோர் ஆர்ம்ரெஸ்ட்களுக்கு லெதர் பேடிங், 8 வே பவர்டு டிரைவர் சீட், முன்பக்கம் வென்டிலேஷன் செய்யப்பட்ட சீட்கள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்டு சிஸ்டம் ஆகிய அம்சங்களை இந்த வேரியன்டில் ஹூண்டாய் கொடுத்திருக்கிறது.
கிரெட்டா கிங் வேரியன்ட்:
கிரெட்டா லைன்-அப்பில் டாப் எண்டு வேரியன்ட் இது தான். கிரெட்டா எஸ்யூவியில் ஹூண்டாய் கொடுக்கும் எந்த வசதியையும் மிஸ் செய்யக் கூடாது என நினைக்கும் வாடிக்கையாளர்கள், பட்ஜெட் பெரிய பிரச்சினையில்லை என நினைக்கு வாடிக்கையாளர்கள் இந்த வேரியன்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த டாப் எண்டு வேரியன்டை ரூ.17.27 லட்சம் முதல் ரூ.19.86 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
இந்த கிரெட்டா எஸ்யூவிக்கு ஹூண்டாய் வழங்கும் அனைத்து பவர்ட்ரெயின் தேர்வுகளுடனும் இந்த டாப் எண்டு வேரியன்டை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். மேலும், டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு இந்த வேரியன்டில் மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த வேரியன்டிலும் அது கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேரியன்டில் ஹூண்டாய் வழங்கும் கூடுதல் வசதிகளைப் பார்க்கலாம்.
லெவல் 2 ADAS, 360 டிகிர கேமரா, சரவுண்டு வியூ மானிட்டர், பிளைண்டு ஸ்பாட் மானிட்டர், 18 இன்ச் அலாய் வீல்கள், பின்பக்க இருக்கை ஹெட்ரெஸ்ட் குஷன், டிரைவர் சீட் மெமரி ஃபங்ஷன், 8 வே பவர்டு முன்பக்க பயணிகள் இருக்கை, ஸ்லைடிங் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், பின்பக்க டைப்-C போர்ட்கள், பின்பக்க வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ரெயின் சென்சிங் வைப்பர்கள், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே ஆகிய உயர்நிலை வசதிகளை இந்த டாப் எண்டு கிரெட்டா வேரியன்டில் ஹூண்டாய் கொடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த தகவல்களைத் தவிர ஹூண்டாய் கிரெட்டா காரில் குறிப்பிடுவதற்கு என ஏதும் இல்லை. கிரெட்டா காரின் பயன்பாட்டு அனுபவம் எப்படி இருக்கும் என்பதை நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை. அது சிறப்பாக இருப்பதினாலேயே பல ஆண்டுகளாக இந்தியாவில அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு கார் மாடலாக இருந்து வருகிறது.
வசதிகளின் அடிப்படையிலேயே நிறைய வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வேரியன்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதாலேயே ஒவ்வொரு வேரியன்டிலும் என்னென்ன வசதிகளை ஹூண்டாய் கொடுத்துள்ளது என இங்கே தெளிவாக வேரியன்ட் வாரியாக குறிப்பிட்டிருக்கிறோம். அடிப்படையான வசதிகளே போதும், ஜம்பமான வசதிகள் எல்லாம் வேண்டும் என்று கூறும் வாடிக்கையாளர்கள் இரண்டாவது தொடக்க நிலை வேரியன்டாக இருக்கும் EX-ஐ தேர்வு செய்யலாம். விலை சற்று குறைவாக இருப்பதோடு, நாம் எதிர்பார்க்கும் பெரும்பாலான வசதிகள் இந்த வேரியன்டிலேயே வந்துவிடும்.
இன்னும் கொஞ்சம் ப்ரீமியமான வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கேட்கும் வாடிக்கையாளர்கள் S(O) வேரியன்டைத் தேர்வு செய்யலாம். அடிப்படை வசதிகளைக் கடந்து ப்ரீமியம் அடிப்படை வசதிகள் எல்லாம் இந்த S(O) வேரியன்டில் வந்துவிடும். பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட சொகுசு வசதிகளையும் இந்த இடைநிலை வேரியன்டில நாம் பெற்றுவிடலாம். மேலும் பவர்ட்ரெயினும் அனைத்து வகையான காம்பினேஷன்களும் இந்த வேரியன்டில் உண்டு.
காரை நிறைய நேரம் நகரச் சாலைகளிலும் வாகன நெரிசல்களுக்கிடையிலும் தான் ஓட்டுவேன் என்று கூறும் வாடிக்கையாளர்கள் NA பெட்ரோல் இன்ஜினுடன் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டை தேர்வு செய்யலாம். அதிகம் நெடுஞ்சாலைகள் தான் என்றும் கூறும் வாடிக்கையாளர்கள் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்டைத் தேர்வு செய்யலாம். பவர்ஃபுல்லான கார் வேண்டும் என்பவர்கள் டாப் எண்டில் டர்போ பெட்ரோல் இன்ஜினையே தேர்வு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications
