டாடா பண்ணீருச்சு... நாங்களும் பண்ணியே ஆகணும்... சபதம் எடுத்த ஹூண்டாய்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஹூண்டாய் நிறுவனமும் எக்ஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர்தான் (Hyundai Exter), இந்திய சந்தையில் டாடா பன்ச் காரின் நேரடி போட்டி மாடலாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Exter Facelift) மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி முன் பகுதியில் ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முன் மற்றும் பின் பகுதி பம்பர்களும் மாற்றி அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்பிளிட் ஸ்டைல் ஹெட்லைட்கள் மற்றும் 'ஹெச்' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற அம்சங்களையும், ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நம்மால் எதிர்பார்க்க முடியும்.

பின் பகுதியை பொறுத்தவரையில், ரீ-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம். டிசைன் மட்டுமல்லாது, வசதிகளிலும் (Features) நம்மால் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இதன்படி தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 5,73,500 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9,61,098 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இதன் மூலம் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை ஹூண்டாய் எக்ஸடர் கொண்டுள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அந்த பெருமையை தக்க வைத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிறைய அப்டேட்கள் செய்யப்பட்டாலும் கூட, பெரிய அளவில் விலை உயர்த்தப்படாது என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








