கருப்பு சிறுத்தை போல மிரட்டும் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர்!!
பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமான எக்ஸ்டர் எஸ்யூவியைவிட தோற்றத்தில் சில குறிப்பிட்ட வசீகர அம்சங்களுடன் இந்த மாடல் வந்துள்ளது. ரூ.8.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிசன் (Knight Edition) என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நைட் எடிசன் மாடலானது நான்கு விதமான தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் மேனுவல், பெட்ரோல் ஏஎம்டி மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகளிலும் வாங்க முடியும். வேரியண்ட்டை பொறுத்து விலை ரூ.8.13 லட்சம் முதல் ரூ.9.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தை பொறுத்தவரையிலும் மேட் பிளாக் என்ற விசேஷ வண்ணத் தேர்வு கொடுக்கப்ப்டடுள்ளது. சாம்பல் வண்ணத்திலான அலங்காரத்துடன் பம்பர்கள் உள்ளன. மேலும், நைட் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 15 அங்குல அலாய் வீல்கள் இந்த காரின் வசீகரத்தை கூட்டுவதாக உள்ளது. சில வேரியண்ட்டுகளில் அடர் சாம்பல் வண்ண ஸ்டீல் சக்கரங்களும் தேர்வுக்கு உள்ளது. அதேபோன்று, முன்புற பிரேக் காலிபர்கள் சிவப்பு வண்ணத்தில் உள்ளது.
உட்புறத்திலும் கருப்பு வண்ண பாகங்களுடன் வசீகரிக்கிறது. டேஷ்போர்டு மற்றும் சில பாகங்கள் பித்தளை வண்ணத்திலான அலங்காரங்களுடன் வித்தியாசமாக உள்ளது. ஆம்பியன்ட் லைட்டிங், விசேஷ சீட் கவர்கள் ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் தட்டையான அடிப்பாகம் வடிவிலான ஸ்டீயரிங் வீல் அமைப்புடன் கிடைக்கிறது.

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் ஹை-சிஎன்ஜி டூவோ மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் Knight எடிசன் மாடல்கள் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையை பதிவு செய்துள்ளன. அதன்படி, பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை கூடுதல் சிறப்பம்சங்களுடன் கொண்டு வந்துள்ளது. தனித்துவமான கருப்பு வண்ணத் தேர்வு தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications