விலை குறைவான ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம்... டாடா பன்ச் போட்டியாளர்!!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் குறைவான விலை கொண்ட காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது HE1i என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு கீழான ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். இந்த புதிய மாடல் இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் இன்ஸ்டர் என்ற சிறிய வகை எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்ட அதே E-GMP (K) என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் இந்த காரும் உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், டிசைன் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்கானதாக மாற்றப்படும்.
வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் இன்ஸ்டர் எலெக்ட்ரிக் காரில் 42kWh மற்றும் 49kWh பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே பேட்டரி ஆப்ஷன்கள்தான் இந்தியாவிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இதன்படி, சோதனைகளில் 300 கிமீ முதல் 355 கிமீ ஆகிய ரேஞ்ச் கொண்ட வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரில் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக இருக்கும். இதனால், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தடம் மாறுதலை எச்சரிக்கும் நுட்பம் உள்ளிட்டவற்றை பெற முடியும். நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். ஓடிஏ அப்டேடுகளும் இடம்பெறும்.
எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், அதிக இடவசதி கொண்ட கேபின், நகர்ப்புறத்தில் எளிதாக பயன்படுத்துவதற்கான ஏற்ற அம்சங்களுடன் இந்த கார் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட எக்ஸ்டெர் காரின் டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், இந்த கார் சைரோஸ் இவி காரின் அடிப்படையிலான சில அம்சங்களுடன் வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நடப்பு நிதி ஆண்டு காலக்கட்டத்திலேய இந்த புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறினாலும், வரும் மார்ச் மாதத்திற்குள் வந்துவிடும் என்பது உறுதியானத் தகவலாகவே உள்ளது.
டாடா பன்ச், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களைவிட இந்த கார் டிசைனிலும், வசதிகளிலும் பிரிமீயமாக இருக்கும். அதேநேரத்தில், விலையையும் சவாலாக நிர்ணயிக்கும் முனைப்பில் ஹூண்டாய் இருப்பதாக தெரிகிறது. அப்போதுதான் பன்ச், நெக்ஸான் இவி கார்களின் விற்பனையை மடைமாற்றி தனது சந்தையை வலுப்படுத்த முடியும் என்பதை ஹூண்டாய் உணர்ந்து செயல்படும்.


Click it and Unblock the Notifications

