இந்தியாவில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்! உற்பத்தி, புதிய தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்!
இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group) நடப்பு 2026ம் ஆண்டு முதல் 2032ம் ஆண்டு வரை 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.1.47 லட்சம் கோடியாக மதிப்பிடப்படுகிறது. கார் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்ளூர் உதிரிபாக உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் செயல் தலைவர் இய்சுன் சுங் (Euisun Chung) நேற்று சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் மற்றும் கியா (Kia) நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், இந்தியாவை அந்நிறுவனங்களின் உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக வலுப்படுத்தவும் இந்த முதலீடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய், கியா கார் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்
இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் கியா இந்தியா ஆகிய நிறுவனங்களின் கார் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த ஹூண்டாய் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கான வாகன ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும் என நிறுவனம் கருதுகிறது.
தற்போது இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இணைந்து ஆண்டுக்கு 14 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன. சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலைகளின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 8.24 லட்சம் கார்களாகவும், புனே ஆலையின் திறன் 1.70 லட்சம் கார்களாகவும் உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் உள்ள கியா ஆலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 4.31 லட்சம் கார்களாக உள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
இந்த முதலீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு பெரிய அளவில் முதலீடு செய்ய ஹூண்டாய் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை வலுப்படுத்தவும், புதிய தலைமுறை வாகனத் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இதில் வாகனங்களைச் சோதனை செய்வதற்கான பிரத்யேக சோதனை களங்களை உருவாக்குவதற்கும் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், எதிர்கால வாகனங்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு உதிரிபாகங்கள்
ஹூண்டாய் தனது முதலீட்டின் ஒரு பகுதியை இந்திய உதிரிபாக உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த உள்ளது. உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதுடன் விரைவாக பெறுவதற்கும் வழிவகை கிடைக்கும்.
இதனால் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான தேவையைக் குறைக்கவும், உள்நாட்டு வாகன உற்பத்திச் சங்கிலியை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும். மேலும், இந்திய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, வாகனத் துறையில் உள்ளூர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஆதரவளிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
கட்டமைப்பு விரிவாக்கம்
எதிர்கால வாகனச் சந்தையைக் கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றக் கட்டமைப்பு, வாகன மறுசுழற்சி மற்றும் வாகன நிதிச் சேவைகள் போன்ற புதிய தொழில் வாய்ப்புகளிலும் ஹூண்டாய் கவனம் செலுத்த உள்ளது. மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் புதிய போக்குவரத்துச் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்தும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்
இந்த முதலீட்டின் மூலம் வாகன உற்பத்தி, பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உதிரிபாக வினியோகம் உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஹூண்டாய் மோட்டார் குழுமம் எதிர்பார்க்கிறது. நிறுவனத்தின் நேரடி வேலைவாய்ப்புகளுடன், அதன் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டணி நிறுவனங்களுக்கும் இதன் மூலம் பலன் கிடைக்கும்.
தற்போது இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பல்வேறு செயல்பாடுகளில் 24,000-க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் தனது நீண்டகால இருப்பை வலுப்படுத்துவதுடன், நாட்டின் வாகன உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதே இந்த முதலீட்டின் நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி திட்டம்
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹூண்டாய், அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தனது அர்ப்பணிப்பை இந்த முதலீடு உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டுச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பிற நாடுகளுக்கான ஏற்றுமதியையும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2026 முதல் 2032ஆம் ஆண்டு வரையிலான இந்த முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவில் தனி முதலீட்டு நிறுவனத்தையும் ஹூண்டாய் மோட்டார் குழுமம் அமைக்க உள்ளது. இந்த நிறுவனம் முதலீடுகளை ஒருங்கிணைப்பதுடன், உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டணிகளை அமைக்கவும் உதவும். இதன் மூலம் இந்திய வாகனச் சந்தையில் ஹூண்டாய் மற்றும் கியாவின் எதிர்கால வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


