டாடா, மஹிந்திராவை வீழ்த்த ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு... ஹூண்டாயின் மெகாத் திட்டம்!

இந்திய கார் சந்தையில் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் இலக்குடன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. புதிய கார் ஆலை,ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டம், அடுத்த சில ஆண்டுகளில் 26 புதிய மாடல்கள் என அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா நிறுவனங்களுக்குப் போட்டியாக தனது சந்தைப் பங்கை அதிகரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group), 2026 முதல் 2032 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்திய மதிப்பில் சுமார்ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்கள், உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் வளர்ச்சியும் அடங்கும்.

Hyundai Car

புனேவில் புதிய கார் ஆலை

ஹூண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள தலேகான் கார் ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆலையை நிறுவனம் கடந்த 14ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. தற்போது ஆண்டுக்கு 1.70 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ள இந்த ஆலையின் உற்பத்தித் திறனை, 2030ம் ஆண்டுக்குள் 3.20 லட்சமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read

இந்த ஆலைக்காக மகாராஷ்டிராவில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் இந்தியா உறுதியளித்துள்ளது. சென்னையில் உள்ள உற்பத்தி ஆலைகளுடன் புனே ஆலையும் இணைந்து செயல்படுவதால், புதிய கார்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்து விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். மேலும், புனே ஆலையில் தயாரிக்கப்படும் புதிய வென்யூ உள்ளிட்ட கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

Pune Hyundai Plant

3வது ஆலை திட்டம்

புனே ஆலையின் விரிவாக்கத்துடன், இந்தியாவில் மூன்றாவது உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஹூண்டாய் குழுமம் ஆராய்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் ஆகிய இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஆலை அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் அதிகரிக்கும் கார் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியையும் விரிவுபடுத்த முடியும். இருப்பினும், மூன்றாவது ஆலைக்கான இடம், முதலீடு மற்றும் உற்பத்தித் திறன் குறித்த தகவல்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Also Read

தமிழகத்தின் பாதிப்பு?

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தில் மகாராஷ்டிராவுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தின் பங்கும் கவனிக்கத்தக்கது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் ஆலை, கடந்த 1998ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரண்டு ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ள நிறுவனம், சென்னையை தனது முக்கியமான கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

மேலும், தமிழகத்தை இந்தியாவுக்கான தனது முக்கிய மின்சார வாகன உற்பத்தி மையமாக உருவாக்கப்போவதாக ஹூண்டாய் அண்மையில் அறிவித்தது மேலும், தமிழக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, புனேவில் உற்பத்தியை விரிவுபடுத்துவது தமிழகத்தின் முக்கியத்துவம் குறையும் என்று கூற முடியாது.

மாறாக, சென்னையில் மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் தயாரிப்பதிலும், புனேவில் கூடுதல் உற்பத்தித் திறனை உருவாக்குவதிலும் ஹூண்டாய் கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கலாம்.

Hyundai Car

26 புதிய மாடல்கள்

உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், வெவ்வேறு ரகத்தில் புதிய கார்களையும் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. 2029ம் ஆண்டுக்குள் 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மின்சார கார்கள் மற்றும் ஹைபிரிட் மாடல்களும் இடம்பெறலாம். குறிப்பாக, 2029ம் ஆண்டுக்குள் நான்கு மின்சார கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றக் கட்டமைப்பு, மின்கலத் தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களை உள்ளூர் சப்ளையர்களிடம் பெறுவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் வாகனங்களின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தி, விரைவாக பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

Hyundai Car

டாடா, மஹிந்திராவை முந்துமா?

இந்திய கார் சந்தையில் நீண்ட காலமாக விற்பனையில் ஹூண்டாய்தான் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. ஆனால், இந்திய கார் சந்தையில் ஹூண்டாய் தற்போது டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. டாடா நிறுவனம் பாதுகாப்பு மற்றும் மின்சார கார் பிரிவுகளில் வலுவாக உள்ளது. மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி மாடல்களின் வளர்ச்சியால் விற்பனையை அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், 2028-29 நிதியாண்டுக்குள் இந்தியாவின் இரண்டாவது பெரிய பயணிகள் வாகனத் தயாரிப்பு நிறுவனமாக மீண்டும் உருவெடுக்க முடியும் என ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் ஜோஸ் முனோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், புதிய ஆலைகள் மற்றும் முதலீடுகள் மட்டுமே இந்த இலக்கை அடையப் போதுமானதாக இருக்காது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற கார்கள், சரியான விலை நிர்ணயம், பாதுகாப்பு, மைலேஜ் மற்றும் மின்சார வாகனங்களுக்கான போட்டித்தன்மை ஆகியவையும் முக்கியம்.

மொத்தத்தில், ஹூண்டாயின் புதிய முதலீட்டுத் திட்டம் இந்திய கார் சந்தையில் மீண்டும் வளர்ச்சியைப் பெறுவதற்கான முக்கிய முயற்சியாகும். அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகமாகும் புதிய மாடல்களுக்கும், அதிகரிக்கும் உற்பத்தித் திறனுக்கும் கிடைக்கும் வரவேற்பே டாடா மற்றும் மஹிந்திராவை ஹூண்டாய் முந்துமா என்பதைத் தீர்மானிக்கும்.

Article Published On: Friday, October 16, 2026, 11:03 [IST]
English summary
Hyundai investment plan india 1 5 lakh crore new plants 26 models
மேலும்... #mahindra #tata motors #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X