500 கிமீ ரேஞ்சுடன் ஹூண்டாய் அறிமுகப்படுத்திய எலெக்ட்ரிக் கார்.. வசதிகள் எல்லாம் தாறுமாறா இருக்கு!
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கான்செப்ட் த்ரீ என்ற புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். காம்பேக்டான இந்தக் கார் எப்படிப்பட்டதாக இருக்கும் என அப்போதே கார் வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது அதனை அயானிக் 3 (Ioniq 3) என்ற பெயரில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.
பார்த்தவுடன் இது வகையான எலெக்ட்ரிக் கார் என்பதை யாராலும் சொல்ல முடியாது. இதனை ஹேட்ச்பேக் என்றே ஹூண்டாய் சொல்கிறது. ஆனால் பார்ப்பதற்கு, கூபே, ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி என எல்லாம் கலந்த கலவையைப் போல் வித்தியாசமாக, அதே நேரம் தனித்துவனமான டிசைனைக் கொண்டுள்ளது புதிய அயானிக் 3 எலெக்ட்ரிக் கார்.

400V எலெக்ட்ரிக் குளோபல் மாடுலார் பிளாட்ஃபார்மில் இந்தக் காரை ஹூண்டாய் உருவாக்கியிருக்கிறது. இதில் 42.2 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது. சிறிய பேட்டரி பேக்கானது 344 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது அதிகபட்சமாக 496 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொண்டுள்ளது.
இந்த பேட்டரி பேக்குகளை சார்ஜ் செய்ய 11 kW AC சார்ஜரை ஸ்டாண்டர்டாகக் கொடுக்கவுள்ளது ஹூண்டாய். விரைவாக சார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 22 kW AC சார்ஜரை தனியாகவும் விற்பனை செய்யவுள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜ் மூலமாக இதன் பேட்டரி பேக்கை 10-80% வரை 29 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக மாடலில் ஒரேயொரு எலெக்ட்ரிக் மோட்டாரை காரின் முன்பக்கம் ஹூண்டாய் கொடுத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார், இரண்டு விதமான ட்யூனிங்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை வேரியன்டில் இருக்கும் மோட்டாரானது 135 hp வரையிலான பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. 'N லைன்' வேரியன்ட் மோட்டாரானது 147 hp பவரை வெளிப்படுத்துகிறது. டார்க்கின் அளவு இரண்டிலுமே 250 Nm தான்.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் செட்டப்புடன் அதிகபட்சமாக மணிக்கு 170 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது இந்த ஹூண்டாய் அயானிக் 3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல். மேலும், மணிக்கு 0-100 கிமீ வேகத்தையும் 9 நொடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலே கூறியது போல ஹேட்ச்பேக், கூபே மற்றும் எஸ்யூவி என அனைத்தையும் கலந்து கட்டியதைப் போல இருக்கிறது அயானிக் 3 மாடலின் டிசைன். ஆனால் பார்ப்பதற்கு ஸ்டைலாகத் தான் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பின்பக்கம் இருக்கும் பார்க்கும் போது கண்டிப்பாக ஹேட்ச்பேக் என்ற சொல்ல முடியாத வகையிலான டிசைனையே கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் கார் என்றாலே, சாஃப்டான, ஸ்மூத்தான மற்றும் மினிமலிஸ்டிக்கான டிசைனைக் கொண்டிருக்கும் காரே நம் மனக்கண்ணில் தோன்றும். ஆனால் இந்த அயானிக் 3 எலெக்ட்ரிக் காரானது சற்று ரக்கடான, எரிபொருள் கார் போலான டிசைனைக் கொண்டுள்ளது. முன்பக்கம் H என்ற ஆங்கில எழுத்திற்கான மோர்ஸ் கோடை சிறிய LED பிக்சல் விளக்குகளாக ஹூண்டாய் லோகோவிற்கு கீழே கொடுத்திருப்பது ஸ்டைலாக இருக்கிறது.
4,170 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம், 1,505 மிமீ உயரம் மற்றும் 2,680 மிமீ நீள வீல்பேஸைக் கொண்டுள்ளது புதிய எலெக்ட்ரிக் கார். இதனை இந்திய ஆட்டோமொபைல் சந்தை வழியாகப் பார்த்தால் சப்-காம்பேக்ட் பிரிவிலும் சேர்க்க முடியாது, மிட்-சைஸ் பிரிவிலும் சேர்க்க முடியாது. ஐந்து பேர் சொகுசாக அமரும் வகையிலான இடவசதி கொண்ட இந்தக் கார் 441 லிட்டர் பூட்ஸ்பேஸையும் கொண்டுள்ளது.
காரின் உள்ளே மிகச் சிறிய அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் ஆடியோ சிஸ்டம், ஹீட் மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஹூண்டாய் டிஜிட்டல் கீ அம்சத்தையும் இந்த அயானிக் 3 கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள், ஆட்டோ எமர்ஜென்ஸி பிரேக், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், சரவுண்டு வியூ கேமரா, அடாப்டிவ் முகப்பு விளக்குகள் ஆகியவை அடங்கிய ADAS சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை ஹூண்டாய் அயானிக் 3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் கொடுத்திருக்கிறது.
பிரதானமாக ஐரோப்பாவில் விற்பனை செய்வதற்காகவே இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இதன் சர்வதேச வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியீடு குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. இந்தியாவில் வெளியிடுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு காராக இது இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. மஹிந்திராவின் BE 6 எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நல்ல போட்டியாக இருக்கும். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்குகளின் வெளியீடு குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவிற்கென தனி சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஹூண்டாய் உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை இந்திய சாலைகளிலும் அந்நிறுவனம் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறதாம். டாடாவின் நெக்ஸான் EV மற்றும் பன்ச் EV கார்களுக்குப் போட்டியாக இந்தப் புதிய கார் இருக்கும். சப்-காம்பேக்ட் என்பதால் விலையும் ரூ.10 லட்சத்தை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அயானிக் 3 சர்வதேச கார் மாடலானது சிறப்பாகவும், இந்தியாவிற்கு ஏற்றதாகவும் இருந்தாலும், இந்தியாவிலேயே இதனை தயாரிக்க வழிவகை இல்லையென்றால் வெளியிடுவது கடினம் தான். மேலும், இந்தியா பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சந்தை என்பதால் பெரும்பாலும் ஐரோப்பாவிற்காக உருவாக்கப்படும் கார் மாடல்கள் இந்தியாவை அடைவதில்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் பயன்பாடு குறைவுதான் என்னும் போது அயானிக் 3-யும் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.


Click it and Unblock the Notifications








