மிடில்-கிளாஸ் மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்! ஃபுல் சார்ஜில் 690கிமீ ஓடக்கூடியது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் (Ioniq 5 Facelift) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முன்னதாக விற்பனையில் இருந்த ஐயோனிக் 5 கார் ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்கிரேடின்படி ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் என்னென்ன புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வெளிப்புற தோற்றம்: ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் பம்பரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, காருக்குள் காற்று நுழைவதற்காக பம்பரில் வழங்கப்படும் காற்றுத்துளைகளின் இடம் மாற்றப்பட்டுள்ளது. புதிய ஐயோனிக் 5 காரிலும் வழக்கமான அதே ட்யூயல்-பேட் பிக்ஸல்-வடிவ எல்இடி ஹெட்லைட்கள் தான், U-வடிவ எல்இடி டிஆர்எல்-கள் உடன் இடம்பெற்றுள்ளன.

ஆனால், அவற்றிற்கு கீழே V-வடிவில் வழங்கப்படும் ஒளிரக்கூடிய லைட் பாரின் டிசைன் சற்று மாற்றப்பட்டுள்ளது. பக்கவாட்டில், மிகவும் கவனிக்கக்கூடிய அம்சமாக புதிய டிசைனிலான 20-இன்ச் ஏரோடைனாமிக் அலாய் சக்கரங்களை புதிய ஐயோனிக் 5 பெற்றுள்ளது. முன்பக்க பம்பரை போல, பின்பக்கத்திலும் பம்பரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதில் வழங்கப்படும் ஒளி பிரதிபலிப்பானும் இடமாற்றப்பட்டுள்ளது. மேற்கூரையில் ஸ்பாய்லர் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.
உட்புற தோற்றம்: புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் கார் முற்றிலும் கருப்பு நிறத்திலான கேபினை பெற்றுள்ளது. இது, முந்தைய ஐயோனிக் 5 காரின் கிரே & வெள்ளை நிற கேபினை விட எளிதாக பராமரிக்கக் கூடியது ஆகும். மற்றப்படி, டாஷ்போர்டின் வடிவமும் சரி, அதில் 12.3 இன்ச்சில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கான திரைகளின் அளவுகளிலும் சரி எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், அவை தற்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளன. சுற்றிலும் பளபளக்கும் கருப்பு நிறத்திலான சரவுண்டிங்க்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ள இந்த திரைகளின் கிராஃபிக்ஸ் (Graphics) மாற்றப்பட்டுள்ளதுடன், இன்-கார் பேமண்ட்ஸ் (In-car Payments) மற்றும் ரிமோட் இம்மொபிலிசர் (Remote Immobiliser) போன்ற கனெக்டட் கார் வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
கப் ஹோல்டர்கள் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜரை கொண்ட செண்டர் கன்சோல் பகுதி ஆனது தற்போது டாஷ்போர்டில் இருந்து சற்று தூரத்தில் வழங்கப்பட்டுள்ளது. செண்டர் கன்சோல் பகுதியில், இருக்கைகளை சூடாக்குவது மற்றும் காற்றோட்டமாக்குவதற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் சக்கரம் முன்பு 2-ஸ்போக் டிசைனில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அழுத்தக்கூடிய கூடுதல் பொத்தான்கள் உடன் 3-ஸ்போக் டிசைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர்த்து காரின் கேபினுள் வேறெந்த அப்டேட்களும் இல்லை.
பேட்டரி & இயக்க ஆற்றல்: ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரில் மிக முக்கிய அப்கிரேடாக பெரிய அளவிலான 84kWh திறன் கொண்ட பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு இது 72.6kWh பேட்டரியாக வழங்கப்பட்டது. இருப்பினும், ரியர்-வீல்-டிரைவ் (RWD) ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ளதை போல் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனில் ஐயோனிக் 5 அறிமுகம் செய்யப்படவில்லை.
பேட்டரியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப அது வழங்கும் ரேஞ்சும் 631கிமீ-இல் இருந்து 690கிமீ ஆகவும், இயக்க ஆற்றல் 217 எச்பி-இல் இருந்து 229 எச்பி ஆகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக வழங்கும் 350 என்.எம் டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேட்டரியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப ஐயோனிக் 5 காரின் ஆரம்ப விலையும் ரூ.46.30 லட்சத்தில் இருந்து ரூ.55.70 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து இந்த எலெக்ட்ரிக் காரை மேலும் பிரீமியம் தரத்திலானதாக, பவர்ஃபுல்லானதாக மாற்ற வேண்டும் என ஹூண்டாய் விரும்பியுள்ளது தெளிவாகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் புது, புது எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐயோனிக் 5 காரை மேலும் பிரீமியமானதாக ஹூண்டாய் மாற்ற முயற்சித்திருப்பது சற்று ஆச்சிரியத்தை தருகிறது.


Click it and Unblock the Notifications