விரைவில் அறிமுகமாகிறது ஹூண்டாயின் குட்டி எலெக்ட்ரிக் எஸ்யூவி! டாடா நெக்ஸான் EVக்கு புதிய போட்டி!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது சிறிய வகை ஸஎலெக்ட்ரிக் எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. ஏற்கனவே கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 ஆகிய கார்களை விற்பனை செய்து வரும் ஹூண்டாய், அதிகம் விற்பனையாகும் குறைவான விலை எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் களம் புகம் உள்ளது.
தற்போது HE1i என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் பி (Hyundai Ioniq P) என்ற பெயரில் வர இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஹூண்டாய் மேல்மட்ட நிர்வாகிகள் ஐயோனிக் பி என்ற பெயரை குறிப்பிட்டு கலந்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இன்னும் இந்த பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

(Hyundai EV Render Image Based On mrjain@X Spy Shot)
இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி வரும் 2027ம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதாவது வரும் ஜனவரி-மார்ச் இடையில் சந்தையில் களமிறக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் இந்த கார் தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மாடல் என்பதால் விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கிடைக்கும்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்
இந்த கார் ஹூண்டாயின் E-GMP (K) என்ற பிரத்யேக எலெக்ட்ரிக் கார் பிளாட்பாரத்தில் உருவாக்கப்படுகிறது. வெளிநாடுகளில் விற்பனையாகும் ஹூண்டாய் இன்ஸ்டர் (Inster EV) காரும் இதே பிளாட்பாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஐயோனிக் பி எலெக்ட்ரிக் காரில் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் விற்பனையாகும் இன்ஸ்டர் காரில் 42 kWh மற்றும் 49 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இதில் பெரிய பேட்டரி கொண்ட மாடல் 355 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் வாய்ப்பை தரும். அதேபோல், இந்தியாவில் அறிமுகமாகும் ஐயோனிக் பி காரிலும் வெவ்வேறு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின்படி, ஐயோனிக் பி எலெக்ட்ரிக் காரின் ஆரம்பகட்ட உற்பத்தி பணிகளின்போது, பேட்டரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் பேட்டரி தயாரிப்பை அதிகரிக்கும் நோக்கில் எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஹூண்டாய் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பேட்டரி செல்களின் சப்ளையானது வரும் 2027-ம் ஆண்டு பிற்பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகள்
இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியில் அடுத்த தலைமுறை பிளியோஸ் கனெக்ட் (Pleos Connect) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பமும் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், தானியங்கி அவசரகால பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
இதுதவிர, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஓடிஏ அப்டேட், ஆட்டோமேட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள் போன்ற வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO இவி (Mahindra XUV 3XO EV), கியா சைரோஸ் இவி (Kia Syros EV) உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக இருக்கும். குறிப்பாக, சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை இந்த கார் குறிவைத்து நிலைநிறுத்தப்படும்.
Source: ACI


Click it and Unblock the Notifications


