ஆந்திராவுக்கு சென்ற ஹூண்டாய், கியா உதிரிபாக சப்ளையர்கள்... தமிழகத்திற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி!!
இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. கார் உற்பத்தி மட்டுமின்றி, உதிரிபாகங்கள் தயாரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு எனப் பல துறைகளிலும் தமிழகத்தின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் மூன்று தென்கொரிய நிறுவனங்கள் தங்களது புதிய முதலீடுகளுக்கு தமிழகத்தைத் தவிர்த்து ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.
ஹ்வாஷின் (Hwashin), சியோன் (Seoyon), இவாமெட் (Iwamet) ஆகிய நிறுவனங்கள் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 1,418 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்த இந்த தென்கொரிய நிறுவனங்கள் வேறு மாநிலத்திற்குச் சென்றிருப்பது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

எவ்வளவு முதலீடு?
ஹ்வாஷின் நிறுவனம் ரூ.850 கோடியும், சியோன் நிறுவனம் ரூ.514 கோடியும், இவாமெட் நிறுவனம் ரூ.250 கோடியும் முதலீடு செய்யவுள்ளன. இதில் சியோன் நிறுவனம் அதிகபட்சமாக 918 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. இந்த முதலீடுகள் அனந்தபூர் பகுதியில் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியை வலுப்படுத்துவதுடன், அங்கு புதிய தொழில்துறை கட்டமைப்பையும் உருவாக்கும்.
தமிழக வளர்ச்சியில் ஹூண்டாய் பங்களிப்பு
ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அதன் தொழிற்சாலை நேரடியாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான உதிரிபாக நிறுவனங்களுக்கும் தொடர்ந்து தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அந்த நிறுவனத்தின் வருவாயுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், தொழில்நுட்ப சேவைகள், தொழிற்சாலை பணியாளர்கள் எனப் பல தரப்பினரின் வாழ்வாதாரமும் இதனுடன் இணைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2026 முதலீட்டுத் திட்டங்களின்படி, தமிழகத்தில் உள்ள உதிரிபாக நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்கள் கொள்முதலை ரூ.4,000 கோடி அதிகரிக்கவும், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 2,000 கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திற்கு பெரும் இழப்பு
இந்த மூன்று நிறுவனங்களின் முதலீடு ஆந்திராவுக்குச் சென்றிருப்பது வெறும் ரூ.1,614 கோடி இழப்பு என்று மட்டும் பார்க்க முடியாது. எதிர்காலத்தில் ஹூண்டாய், கியா நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும்போது, அவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அருகிலேயே விரிவடையும் வாய்ப்பு உள்ளது. அந்த வளர்ச்சியின் ஒரு பகுதி தற்போது ஆந்திராவுக்குச் சென்றுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த நிறுவனங்கள் இங்கேயே விரிவாக்கம் செய்திருந்தால், கூடுதல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள், அரசுக்கு வரி வருவாய் எனப் பல்வேறு பலன்கள் கிடைத்திருக்கலாம். குறிப்பாக, தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தில் இதுபோன்ற முதலீடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை
ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் தென்கொரியா சென்று நேரடியாக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து அதிகாரிகள் மூலம் முதலீடுகளை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகத்திலும் தென்கொரிய நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக கொரியா டெஸ்க் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றிருப்பது முதலீட்டாளர்களைத் தொடர்ந்து அணுகுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தமிழகம் தனது வலுவான தொழில்துறை கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள், துறைமுக வசதிகள் ஆகியவற்றை நம்பி மட்டும் இருக்க முடியாது. போட்டி மாநிலங்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கத்தைத் தக்கவைப்பதும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் அவசியமாகிறது.
தமிழகத்தின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி என்பது தொழிற்சாலைகளின் வளர்ச்சி மட்டுமல்ல; லட்சக்கணக்கான தமிழர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் அதனுடன் இணைந்துள்ளது. எனவே, இந்த முதலீட்டு நிகழ்வு தமிழகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது இரண்டாவது ஆலையை மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் அண்மையில் திறந்த ஹூண்டாய் மூன்றாவது கார் ஆலையையும், மஹாராஷ்டிர மாநிலம் அல்லது குஜராத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


