கொரியன் கார் கம்பெனியை வெச்சு செய்யும் இந்திய கார் நிறுவனங்கள்! டாடா, மஹிந்திராவை தேடி செல்லும் மக்கள்!
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்கிவந்த ஹூண்டாய், நடந்து முடிந்த 2026 மே மாதத்தில் 47 ஆயிரத்து 837 கார்களை விற்பனை செய்துள்ளது. இருப்பினும், வழக்கத்தை காட்டிலும் இது அதிகமா அல்லது குறைவா? என்பதை பற்றியும், ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கார் மாடல்கள் என்னென்ன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் ஹூண்டாயின் நிலை தொடர்ந்து சரிந்துக் கொண்டே வருகிறது. முந்தைய வருடங்களில் மாருதி சுஸுகிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக 2வது இடம் பிடித்துவந்த ஹூண்டாய், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் ஆதிக்கத்தால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுதான் கடந்த சில மாதங்களாக தொடரும் நிலையில், கடந்த மே மாதத்திலும் 47 ஆயிரத்து 837 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 50 ஆயிரம் கார்களை இந்தியாவில் அசால்ட்டாக விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் விளங்கியது.
ஆனால், தற்போது இந்தியாவில் ஒரு மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்வதே அரிதாகி விட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 51 ஆயிரத்து 902 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இருப்பினும், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் வரிசையில் 4வது இடத்தையே ஹூண்டாய் பிடித்திருந்தது.

அப்படியிருக்க, 47 ஆயிரத்து 837 யூனிட் ஹூண்டாய் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள கடந்த மே மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் எந்த இடத்தை பிடிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த 47,837 கார்கள் மட்டுமின்றி, 13 ஆயிரத்து 300 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்தால், கடந்த மாதத்தில் மொத்தமாக 61 ஆயிரத்து 137 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் வெறும் 43 ஆயிரத்து 861 கார்களை உள்நாட்டிலும், 14 ஆயிரத்து 840 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் என மொத்தமாக 58 ஆயிரத்து 701 ஹூண்டாய் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை ஆனது 4.1% அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டும் 9.1% அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்கிய 2026-27ஆம் நிதியாண்டில் மொத்தம் 99 ஆயிரத்து 739 கார்களை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
இது 88,235 ஹூண்டாய் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த கடந்த 2025-26ஆம் நிதியாண்டின் இதே முதல் இரு மாதங்களை காட்டிலும் 13% அதிகமாகும். ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கிரெட்டா ஆனது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி ரக காராக விளங்குகிறது. மேலும், ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கிராண்ட் ஐ10 நியோஸ், வென்யூ, எக்ஸ்டர் போன்ற மற்ற பிரபலமான கார் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய காலங்களை காட்டிலும் கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து இருப்பினும், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தையே ஹூண்டாய் பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் இருந்து டாடா மற்றும் மஹிந்திரா கார்களின் விற்பனை எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், இந்திய கார்கள் மார்க்கெட் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதையும் அறியலாம்.


Click it and Unblock the Notifications