இந்தியாவுக்காக பல கார்களை அறிமுகம் செய்த ஹூண்டாயின் தற்போதைய நிலைமை! டாடா, மஹிந்திராவை முந்த முடியல
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 52 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. இருப்பினும், கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் முந்தி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துவந்தது. ஆனால், கடந்த ஒரு வருடமாக 2வது இடத்தை மஹிந்திரா அல்லது டாடா நிறுவனங்கள் சொந்தமாக்கி வருகின்றன.

இடையில் ஹூண்டாய் நிறுவனமும் 2வது இடத்தை சிலமுறை பிடித்தது எனினும், பெரும்பாலும் 2வது இடம் மஹிந்திரா அல்லது டாடாவுக்கே சொந்தமாகியது. கடந்த 2026 ஏப்ரல் மாத கார்கள் விற்பனையிலும் ஹூண்டாயை மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் முந்தியுள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 51 ஆயிரத்து 902 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
இந்த எண்ணிக்கை மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களை காட்டிலும் குறைவு என்றாலும், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 17% அதிகம் ஆகும். அதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையையும் சேர்த்து பார்த்தால், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களை காட்டிலும் ஹூண்டாய் அதிக கார்களை விற்பனை செய்துள்ளது.

ஏனெனில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 51,902 கார்கள் இல்லாமல், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 708 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஹூண்டாய் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து பார்த்தால் ஹூண்டாய் கார்களின் விற்பனை ஆனது 17% அதிகரித்துள்ளது.
இந்த 17% விற்பனை அதிகரிப்புக்கு காரணம், கடந்த சில மாதங்களில் ஹூண்டாய் அறிமுகம் செய்த புதிய கார்கள் ஆகும். ஹூண்டாயில் இருந்து சமீப காலத்தில் புதிய எக்ஸ்டர் (Exter), வெர்னா (Verna) கார்கள் உள்பட ஐயோனிக் 5 (Ioniq 5) எலெக்ட்ரிக் காரும் மெருக்கேற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றுடன், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) காரின் புதிய சம்மர் எடிஷன் (Summer Edition) மற்றும் வென்யூ (Venue) காரின் புதிய வைப் எடிஷன் (Vibe Edition) உள்ளிட்ட ஸ்பெஷல் எடிஷன் கார்களும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது இல்லாமல், ஹூண்டாய் வென்யூ மற்றும் வென்யூ என் லைன் கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Bharat NCAP Crash Test)-இல் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன.
இதன் மூலமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12,420 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் இத்தனை அதிகமான வென்யூ கார்கள் இதற்குமுன் விற்பனை செய்யப்பட்டது இல்லை. அதேநேரம், வென்யூவை காட்டிலும் பெரிய அளவிலான எஸ்யூவி (SUV) வகை காரை வாங்க திட்டமிடுபவர்களின் சாய்ஸ் எப்போதும்போல் ஹூண்டாய் கிரெட்டா (Creta) ஆக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிட்டத்தட்ட 52 ஆயிரம் கார்களை விற்பனை செய்த போதிலும் ஹூண்டாய் நிறுவனத்தால் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடிக்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சில வருடங்களுக்கு முன்பு வரையில் 45,000- 50,000 கார்களை விற்பனை செய்தே பல மாதங்களில் ஹூண்டாய் 2வது இடத்தை வகித்துள்ளது. இதில் இருந்து இந்திய கார்கள் சந்தை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதையும், அதற்கேற்ப மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் தங்களை எந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டுள்ளன என்பதையும் அறியலாம்.


Click it and Unblock the Notifications