490 கிமீ ரேஞ்ச்... விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் நீரா 7 சீட்டர் EV கார்!
இந்தியாவில் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிக வரவேற்பு எழுந்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ், கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. விரைவில் இந்த சந்தையில் டாடா சஃபாரி எஸ்யூவியின் இவி மாடலும் வர இருக்கிறது.
இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஹூண்டாய் நிறுவனமும் தனது புதிய 7 சீட்டர் இவி காரை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு உள்ளது. கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி கார் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் காருக்கு ஹூண்டாய் நீரா இவி என்ற பெயரில் வர இருக்கிறது.

வரும் 20ந் தேதி இந்தோனேஷியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்த கார் இந்தியாவிலும் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் அடிப்படை கட்டமைப்பைப் பகிர்ந்து கொண்டாலும், நீரா காரின் வெளிப்புறத் தோற்றத்தில் ஹூண்டாய் சில மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, முன்பக்கத்தில் இரண்டு ஹெட்லைட்டுகளையும் இணைக்கும் வகையில் கருப்பு நிற மூடப்பட்ட கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பம்பர் இதன் தோற்றத்தை மேலும் வித்தியாசப்படுத்துகிறது.
புதிய வடிவமைப்பிலான அலாய் வீல்கள், சக்கரங்களைச் சுற்றியுள்ள கருப்பு நிற பாதுகாப்பு உறைகள், சில்வர் நிற அலங்காரப் பகுதிகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பின்பக்கத்திலும் பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கேரன்ஸ் கிளாவிஸ் இவியின் தோற்றத்தை நினைவுபடுத்தினாலும், ஹூண்டாய் கார்களுக்கே உரிய தனித்துவமான அடையாளத்தை வழங்க முயற்சி செய்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் எம்பிவியில் 42 kWh மற்றும் 51.4 kWh என இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில் சிறிய பேட்டரியைக் கொண்ட மாடல் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 404 கிமீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தினசரி நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் அடிப்படையில் வைத்து பார்த்தால், அதிக ரேஞ்சை விரும்புபவர்களுக்கு 51.4 kWh பேட்டரி தேர்வும் வழங்கப்படுகிறது. இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 490 கிமீ வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த இரண்டு பேட்டரி தேர்வுகளும் முன்பக்க மின்மோட்டார் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
செயல்திறனைப் பொறுத்தவரை, சிறிய பேட்டரி மாடலில் 132 எச்பி பவரும், பெரிய பேட்டரி மாடலில் 169 எச்பி பவரும் கிடைக்கும். இரண்டு மாடல்களிலும் 255என்எம் டார்க்கும் கிடைக்கும்.
வெளிப்புறத் தோற்றத்தைப் போலவே தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் கவனம் செலுத்துகிறது. 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் (ADAS), பிளைண்ட் ஸ்பாட் சிஸ்டம் மற்றும் ஹூண்டாய் புளூலிங்க் இணைப்பு வசதி ஆகியவை இடம்பெறும்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரில் இருப்பது போன்றே இரட்டை 12.3 அங்குல திரைகள், பனோரமிக் சன்ரூஃப், குளிரூட்டப்பட்ட முன்பக்க இருக்கைகள் மற்றும் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்தோனேசிய சந்தைக்காக உருவாக்கப்பட்டுள்ள நீரா எலெக்ட்ரிக் எம்பிவி, வரும் 2027ஆம் ஆண்டு இந்தியாவிலும் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தியாவுக்காக பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் இந்த மாடலை ஹூண்டாய் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications


