மாத விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹூண்டாய்... ஏற்றுமதியிலும் அசத்தல்!!
மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். உள்நாட்டு விற்பனையும், ஏற்றுமதியும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு அந்நிறுவனத்திற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் உள்நாடு மற்றும் ஏற்றுமதி என மொத்தமாக 75,360 வாகனங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூலையில் இந்தியாவில் மட்டும் 54,210 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 43,958 கார்களை விற்பனை செய்தது. இதன்மூலமாக கடந்த ஜூலையில் உள்நாட்டு விற்பனை 23.3 சதவீதம் அதிகிரித்துள்ளது.

அதேபோன்று, கடந்த மாதம் 21,150 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 16,100 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்த நிலையில், 31.4 சதவீத வளர்ச்சியை பெற்றிருக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கடந்த மாதம் புதிய கார்களுக்கான டிமான்ட் நன்கு அதிகரித்த நிலையில், தனது மாத விற்பனை வரலாற்றில் புதிய உச்சத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொட்டுள்ளது.
மற்றொரு விஷயமும் கவனிக்க வேண்டி இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் 39,635 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. சப்ளையர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விற்பனையில் சரிவு ஏற்பட்டது. ஆனால், கடந்த மாதம் உற்பத்தி சீரடைந்து விற்பனையும் மிகச் சிறப்பான உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஜூனுடன் ஒப்பிடும்போது, ஜூலையில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை 36.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் க்ரெட்டா எஸ்யூவி முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளது. மொத்தம் 18,088 க்ரெட்டா கார்கள் கடந்த மாதம் விற்பனையாகி உள்ளது. அதேபோன்று, 6,738 ஐ20 கார்கள் விற்பனையாகி சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளது.
ஜூலை விற்பனை வளர்ச்சி குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தருண் கார்க் கூறுகையில்,"இந்த புதிய காலாண்டை மிக வலுவான விற்பனையுடன் துவங்கி இருக்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு 75,360 கார்களை விற்பனை செய்து எங்களது அதிகபட்சமான மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளோம். எங்களது நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை இது பரைசாற்றுவதாக அமைந்துள்ளது. ஏற்றுமதியும் கடந்த 100 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விற்பனை வளர்ச்சியை தக்க வைக்கும் விதமாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்த நிதி ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பேயான் எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக இது எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி விக்டோரிஸ் காருக்கு எதிராக நிலைநிறுத்தப்படும். பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகைகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர்த்து, 4 மீட்டரில் வடிவமைக்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலையும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படும். தவிரவும், க்ரெட்டா எஸ்யூவின் புதிய தலைுறை மாடலும் நடப்பு நிதி ஆண்டுக்குள் கொண்டு வரும் திட்டத்தில் ஹூண்டாய் உள்ளது.


Click it and Unblock the Notifications