மிக மிகக் கம்மி விலையில் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் கார்.. டாடா பன்ச் EV எல்லாம் இனி ஓரமா போக வேண்டியது தான்
ஹூண்டாய் நிறுவனமானது இந்தியாவில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை வெளியிடவிருப்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இந்த நிலையில் இந்தப் புதிய கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது ஸ்பைஷாட்களில் சிக்கியருக்கிறது. அதனைக் கொண்டு புதிய எலெக்ட்ரிக் காரில் என்ன வகையான அம்சங்களை ஹூண்டாய் கொடுக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. வாங்க அதைப் பத்திப் பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் சந்தையில் கிரெட்டா எலெக்ட்ரிக் என்ற ஒரேயொரு மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். அயானிக் 5 என்ற மற்றொரு எலெக்ட்ரிக் கார் மாடலும் விற்பனையில் இருக்கிறது. ஆனால் அது விலை கூடுதலான ப்ரீமியம் பிரிவைச் சேர்ந்தது.

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் கார் மாடலாக கிரெட்டாவே இருந்து வருகிறது. ரூ.10 லட்சத்திற்கும் கீழான விலை கொண்ட கார் மாடல்களுக்கு இணையாக, சற்று விலை அதிகமாக கிரெட்டாவும் விற்பனையாகி வருகிறது. இதனால் கிரெட்டாவைப் போலவே கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிகளவில் இல்லையென்றாலும், ஓரளவிற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவான அளவே விற்பனையாகி வருகிறது அந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் கார்.
அதிக விலையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ரூ.18.02 லட்சம் முதல் ரூ.24.70 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்தக் கார். இந்த நிலையில் தான் கிரெட்டா எலெக்ட்ரிக்குக்கு கீழாக பிளேஸ் செய்யும் வகையில் இன்னும் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை உருவாக்கி வருகிறது ஹூண்டாய்.

சர்வதேச அளவில் இன்ஸ்டர் EV என்ற குட்டி எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். அதன் மற்றொரு வெர்ஷனாக ஹூண்டாயின் இந்தப் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இருக்கலாம் எனத் தெரிகிறது. மற்றொரு வெர்ஷன் என்னும் போது அப்படியே காப்பி என நினைக்க வேண்டாம். பிளாட்ஃபார்ம், எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் மற்றும் பேட்டரி ஆகிய அம்சங்களை இன்ஸ்டர் EV-யில் இருந்து ஹூண்டாய் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
சமீபத்தில் அதன் ஸ்பைஷாட் புகைப்படங்களைப் பார்த்த போது இன்ஸ்டர் EV-யின் மற்றொரு வடிவமாக புதிய எலெக்ட்ரிக் இருக்கலாம் என்ற அனுமானம் அதிகமாகவே எழுந்திருக்கிறது. குட்டியான கார் என்பதால், உள்ளே இடவசதியை அதிகப்படுத்த டால் பாய் மற்றும் பாக்ஸியான டிசைனைப் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். கீழே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் LED முகப்பு விளக்குகள், ரக்கடான ரூஃப் ரெயில்கள், ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள் ஆகிய டிசைன் அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
காரின் பின்பக்க விளக்குகள், கடந்தாண்டு மேம்படுத்தப்பட்ட வென்யூ ஃபேஸ்லிப்ட் மாடலில் கொடுக்கப்பட்டைப் போல இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி தான் என்றாலும் வென்யூ அளவிற்கு 3,995 மிமீ அளவிற்கான நீளத்தை இந்தப் புதிய எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது இன்ஸ்டர் அளவிற்கு 3,800 முதல் 3,900 மிமீ அளவிற்கான நீளத்தைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
இதனால் டாடாவின் நெக்ஸான் EV-யை விட, பன்ச் EV-க்கான போட்டியாளராக இந்தப் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடலைக் கூற முடியும். இந்தக் காரில் 400 கிமீ முதல் 500 கிமீ ரேஞ்சு கொடுக்கக்கூடிய 42 kWh முதல் 49 kWh பேட்டரி பேக்கை ஹூண்டாய் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், ப்ரீமியமான சவுண்டு சிஸ்டம், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை ஹூண்டாய் இந்தக் காரில் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
விலை குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், எலெக்ட்ரிக் கார் என்பதால் அடிமாட்டு விலையில் நாம் எதிர்பார்க்க முடியாது. இதுவே எரிபொருள் கார் என்றால் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சத்திற்கான விலையில் என கண்டிப்பாக சொல்ல முடியும். அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எலெக்ட்ரிக் என்பதால் ரூ.9 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான தொடக்க விலையில் இந்த புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.
டாடா பன்ச் ரூ.9.69 லட்சம் என்ற தொடக்க விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பன்ச் EV மாடலுக்கான நேரடிப் போட்டியாளர் என்றாலும், மஹிந்திரா XUV 400, மஹிந்திரா XUV 3XO EV, டாடா நெக்ஸான் EV உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான போட்டியாகவும் ஹூண்டாயின் புதிய எலெக்ட்ரிக் கார் இருக்கும். 2027ம் ஆண்டு இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 லட்சம் விலையில் மற்றொரு எலெக்ட்ரிக் எஸ்யூவி தேர்வு இதன் மூலம் நமக்குக் கிடைக்கலாம் என்றே நாங்கள் கருதுகிறோம். விலை கூடுதல் என்றாலும் அதற்கேற்ற வசதிகளும் நமக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் கூடுதல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் விரும்புகிறது. ரூ.10 லட்சத்திற்கும் கீழான விலையில் இந்த எலெக்ட்ரிக் கார் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான், அதுவும் பேட்டரியின் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது.


Click it and Unblock the Notifications








