மாருதிக்கு போட்டியா ஹூண்டாய் வெளியிடும் புது கார்.. இவ்வளவு கம்மி விலையில எதிர்பார்க்கல!

ஹூண்டாயின் புதிய எஸ்யூவி கார் ஒன்று இந்திய சாலைகளிலே சோதனை செய்யப்பட்டு வருகிறது. முழுவதுமாக மறைக்கப்பட்ட வகையில் இந்தக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் போது ஸ்பை படங்களில் சிக்கியிருக்கிறது. அப்படி எந்தக் காரை ஹூண்டாய் சோதனை செய்து வருகிறது என்று கூர்ந்து கவனித்த போது அது எந்த மாடல் என்பது குறித்த தகவல்கள் நமக்குத் தெரிய வந்திருக்கிறது.

இப்போது ஹூண்டாய் சோதனை செய்து வருவது, சர்வதேச அளவில் அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் பேயான் (Bayon) கிராஸ்ஓவர் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்ட கார் தான். அடுத்த ஓராண்டிற்குள் இந்தியாவில் இரண்டு எஸ்யூவிக்களை ஹூண்டாய் வெளியிடவுள்ளது. அதில் ஒன்றாக இந்த பேயான் எஸ்யூவி இருக்கும். இந்தக் கார் குறித்த விரிவான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

Hyundai Bayon

மேலே கூறியது போல உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பேயான் என்ற கிராஸ்ஓவர் காரின் அடிப்படையில் BC4i என்ற குறியீட்டுப் பெயரில் இந்தியாவில் வெளியிடுவதற்காக புதிய எஸ்யூவி கார் ஒன்றை உருவாக்கி வருகிறது ஹூண்டாய். அதனையே இந்தியாவில் இப்போது சோதனை செய்து வருகிறது. பேயான் அடிப்படையிலான ஒரு கார் இந்தியாவிற்கு வரும் என்று முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அது தொடர்பான வேறு விதமான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்தக் காரானது சர்வதேச அளவில் 4.2 மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த நீளம் குறைக்கப்பட்டு 4 மீட்டர்களுக்கு உள்ளான அளவிலான சப்-காம்பேக்ட் காராக பேயான் அடிப்படையிலான ஹூண்டாய் கார் வெளியாகும் எனக் கூறப்பட்டது. அப்படியென்றால் மாருதி ஃபிராங்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக இது இருந்திருக்கும்.

Hyundai Bayon Crossover

ஆனால், இப்போது அதே 4.2 மீட்டர் அல்லது அதனை ஒற்ற அளவிலேயே மிட்-சைஸ் பிரிவில் இந்தக் காரை ஹூண்டாய் வெளியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மிட்-சைஸ் பிரிவில் கிரெட்டா என்ற ஒரேயொரு எஸ்யூவி மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த எஸ்யூவி தான் மற்ற மிட்-சைஸ் எஸ்யூவிக்களை விட அதிகம் விற்பனையாகும் ஒன்றாக இருக்கிறது.

மாருதி நிறுவனம் இந்த மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் பிரிவில் ப்ரீமியமான கிராண்டு விட்டாரா காரை விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அதனை விட சற்று குறைவான விலையில் விக்டோரிஸ் என்ற புதிய காரை வெளியிட்டது. தற்போது இந்த விக்டோரிஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எனவே ஏற்கனவே தாங்கள் வலுவாக இருக்கும் ஒரு கார் பிரிவில் மற்றொரு புதிய காரை வெளியிட ஹூண்டாய் ஆர்வம் காட்டுகிறது.

விரைவில் கிரெட்டாவை ஹூண்டாய் அப்டேட் செய்யவுள்ளது. தற்போது 4.33 மீட்டர் அளவில் இருக்கும் கிரெட்டா, அப்டேட்டிற்குப் பின்பு 4.45 மீட்டர் அளவை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரெட்டாவை விட சற்று சிறிய காராக, விலை குறைவான காராக பேயான் எஸ்யூவியை அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிடுகிறது. 4மீ நீளத்திற்கு உள்ளான வென்யூ மற்றும் 4.4மீ நீளம் கொண்ட கிரெட்டாவிற்கு இடைப்பட்ட காராக பேயான் அடிப்படையிலான கார் இருக்கும்.

சர்வதேச அளவில் பார்க்கப்படும் பேயான் மாடலில் இருந்து இந்தியாவிற்கு ஏற்ப புதிய டிசைன் மற்றும் வசதிகள் மாற்றத்தை இந்தப் புதிய ஹூண்டாய் கார் கொண்டிருக்கும். ஸ்பைஷாட்டில் கசிந்திருக்கும் புகைப்படங்களை வைத்தே இதனை ஓரளவிற்கு நாம் உறுதி செய்யவும் முடிகிறது. வென்யூவில் இருக்கும் 1.2 லிட்டர் NA (Naturally Aspirated) பெட்ரோல் இன்ஜின் புதிய பேயான் அடிப்படையிலான எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

இதனைத் தவிர்த்து ஹூண்டாய் சொந்தமாக உருவாக்கி வரும் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜினும் கொடுக்கப்படலாம். NA பெட்ரோல் இன்ஜினுடன் CNG பவர்ட்ரெயினும் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. கூடுதல் பூட் ஸ்பேஸ் வேண்டும் என்பதனால் CNG பவர்ட்ரெயினில் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டிருக்கும். 4 மீட்டர்களுக்கு மேலான ஹூண்டாய் கார்களில் CNG பவர்ட்ரெயினைப் பெறும் முதல் காரா இந்த பேயான் அடிப்படையிலான எஸ்யூவி இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே ஹூண்டாய் கிரெட்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் கடந்த பத்தாண்டுகளாக ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதன் அடுத்த மிட்-சைஸ் எஸ்யூவியைப் பார்க்க வாடிக்கையாளர்களுடன் நாங்களும் ஆர்வமாகவே இருக்கிறோம். சரியான இடைவெளியில் இந்தக் காரை பிளேஸ் செய்ய ஹூண்டாய் எடுத்திருக்கும் முடிவு சிறப்பானது தான். விலை மட்டும் சரியாக அமைந்துவிட்டால் ஹூண்டாயின் ஹிட்லிஸ்ட் பட்டியலில் பேயான் அடிப்படையிலான எஸ்யூவி தனி இடம் பிடிக்கும்.

Article Published On: Friday, May 15, 2026, 12:07 [IST]
English summary
Hyundai testing modified bayon crossover suv in india for launch soon
மேலும்... #hyundai #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+