500 கிமீ ரேஞ்சு கொண்ட விலை குறைவான எலெக்ட்ரிக் கார்.. தமிழ்நாட்ல தான் தயாரிக்கப் போறாங்களாம்!
ஹூண்டாய் நிறுவனமானது இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியிடவிருப்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். HE1i என்ற குறியீட்டுப் பெயரில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது அந்த தென்கொரிய நிறுவனம். இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரானது தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும் போது ஸ்பைஷாட்டிலும் சிக்கியிருக்கிறது.
மற்ற நிறுவனங்களைப் போலவே தங்களுடைய முதல் மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் காராக ஒரு மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியையே ஹூண்டாயும் வெளியிட்டது. இந்தியாவில் ஹூண்டாய் அதிகம் விற்பனை செய்யும் கிரெட்டாவின் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வடிவம் தான் அது. கிரெட்டா ஏற்கனவே நன்றாக விற்பனையாகி வருகிறது, மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்கு இந்திய சந்தையில் கொஞ்சம் டிமாண்டு இருக்கிறது என்ற கணக்கிட்டுத் தான் தங்களது முதல் மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் காராக 'கிரெட்டா எலெக்ட்ரிக்'கை வெளியிட்டது.

ஆனால் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. கிரெட்டா எலெக்ட்ரிக் இந்தியாவில் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் 500 யூனிட்டுகள் என்ற அளவிலேயே ஹூண்டாயின் எலெக்ட்ரிக் கார் விற்பனை இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கிரெட்டா எலெக்ட்ரிக்கை விட சற்று விலை குறைவான சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக துரிதமாக செயல்பட்டு வருகிறது அந்நிறுவனம்.
இந்தப் புதிய சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரை தமிழ்நாட்டில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி இந்தப் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரானது, கியாவின் சிராஸ் EV-க்கு இணையான ஒன்றாக இருக்கும் எனத் தெரிகிறது. அப்படியென்றால் சர்வதேச அளவில் ஹூண்டாய் விற்பனை செய்து வரும் இன்ஸ்டரின் சிறப்பம்சங்களை புதிய காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

இன்ஸ்டர் என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இந்தக் காரில் 42 kWh மற்றும் 49 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறிய பேட்டரி பேக்குடன் 95 hp பவர் மற்றும் 147 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும், பெரிய பேட்டரி பேக்குடன் 113 hp பவர் மற்றும் 147 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே பேட்டரி பேக் மற்றும் பவர்ட்ரெயின் செட்டப்புகளையே இந்தியாவில் ஹூண்டாய் வெளியிடவிருக்கும் புதிய சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம். 500 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய காராக இது இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் 90 சதவீதம் வரை இந்த எலெக்ட்ரிக் காரின் பாகங்களை உள்ளூர்மயமாக்கத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய்.
சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்பதால் 12 லட்சம் ரூபாய் முதல் 16 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்தப் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் EV, டாடா பன்ச் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகிய சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்தப் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். விலையில் அடிப்படையில் சிட்ரன் eC3 ஹேட்ச்பேக்கையும் கூட இந்தப் புதிய காருக்குப் போட்டியாகக் கூறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் பிரிவிலேயே போட்டி எக்கச்சக்கமாக இருக்கிறது. குறைவான விலை கொண்ட சிறிய ரக கார்கள் எலெக்ட்ரிக் கார்கள் அல்லது சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் பெரிய அளவில் போட்டி இல்லை. எனவே அந்தப் பிரிவில் புதிய காரை வெளியிடுவதன் மூலம் சில ஆயிரங்கள் கார் விற்பனையை உயர்த்த முடியுமா எனத் திட்டமிடுகிறது ஹூண்டாய். அந்நிறுவனம் என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications