ஓசூருக்கு அடுத்த ஜாக்பாட்... புதிய முதலீட்டால் ஹூண்டாய் - டிவிஎஸ் ஆட்டோரிக்ஷா திட்டம் வேகமெடுக்கிறது?
இந்தியாவில் தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group) மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. 2026 முதல் 2032-ம் ஆண்டு வரை இந்தியாவில் ரூ.1.47 லட்சம் கோடி முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கார் சந்தையில் மட்டுமல்லாமல், மின்சார வாகனங்கள் மற்றும் எதிர்கால போக்குவரத்துத் துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் (TVS Motor Company) இணைந்து ஹூண்டாய் உருவாக்கி வரும் மின்சார ஆட்டோ திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே இரு நிறுவனங்களும் மின்சார மூன்று சக்கர வாகனங்களையும், சிறிய வகை நான்கு சக்கர வாகனங்களையும் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில், ஹூண்டாயின் புதிய முதலீட்டுத் திட்டம் மூலமாக இந்த ஆட்டோரிக்ஷா திட்டம் வேகம் எடுக்கும் என தெரிகிறது.

ஹூண்டாய் மோட்டார் குழுமம் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்துள்ளது. புதிய கார் தொழிற்சாலை, ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்துவது, புதிய வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கான நிதி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படும்.
இந்த புதிய முதலீடு இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் கியா இந்தியா நிறுவனங்களின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தவும் குழுமம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை வலுப்படுத்துவதற்கும், வாகனச் சோதனைப் பாதை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் இந்தியாவை முக்கியமான வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றுவது நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, ஹூண்டாய் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்கள் இணைந்து மின்சார ஆட்டோவை உருவாக்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்தன. இதற்கான கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Joint Development Agreement) இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.
இந்தக் கூட்டணியில் ஹூண்டாய் தனது வடிவமைப்பு மற்றும் வாகனத் தொழில்நுட்ப அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உள்ளது. மறுபுறத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது மின்சார வாகனத் தளம், மூன்று சக்கர வாகனங்கள் தொடர்பான பொறியியல் திறன் மற்றும் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தி வசதிகளை வழங்க உள்ளது.
மேலும், இந்த மின்சார ஆட்டோரிக்ஷா வரும் 2027ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2028ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் புதிய முதலீட்டுத் திட்டமும், டிவிஎஸ் உடனான மின்சார ஆட்டோ கூட்டணியும் தமிழகத்தின் வாகனத் தொழில்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். குறிப்பாக, ஓசூரில் மின்சார ஆட்டோ உற்பத்தி தொடங்கும் பட்சத்தில், அதற்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.
மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொடர்பான பாகங்கள், மின்மோட்டார்கள், மின்னணுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் பிற உதிரிபாகங்களுக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் உற்பத்தி, பொறியியல், தரப் பரிசோதனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கணிசமாக உருவாகும்.
மேலும், இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான சந்தை வளர்ந்து வரும் நிலையில், ஹூண்டாயின் வடிவமைப்பு அனுபவமும் டிவிஎஸ் நிறுவனத்தின் உள்ளூர் உற்பத்தித் திறனும் இணைவது சிறந்த தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
ஹூண்டாயின் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமும் டிவிஎஸ் உடனான மின்சார ஆட்டோ முயற்சியும் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஓசூரில் உற்பத்தி திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தின் மின்சார வாகன உற்பத்தித் துறைக்கு அது கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கக்கூடும் என்பதுடன், புதிய நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்புகளையும் வழங்கும்.


Click it and Unblock the Notifications


