1 மணிநேர சார்ஜிங் கூட ரொம்ப அதிகம்... ஓட்டலில் சாப்பிடும் நேரத்தில் 80% சார்ஜ் நிரப்பிடலாம்!
ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) எஸ்யூவி கார் தற்போது 100 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) வசதியைப் பெற்றுள்ளது. இது பொது சார்ஜிங் நிலையங்களில் பயனர்களின் நேரத்தை கணிசமாகக் குறைக்கும். இதற்கு முன், 50 kW DC சார்ஜிங் சப்போர்ட் இருந்தது. இதன் மூலம் 10% முதல் 80% பேட்டரி சார்ஜ் செய்ய சுமார் 58 நிமிடங்கள் ஆனது.
ஒரு மென்பொருள் (Software) மேம்படுத்தலின் வழியாக, இந்த சார்ஜிங் நேரம் வெறும் 39 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தல், ஏற்கனவே க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ஒடிஏ (Over The Air) அப்டேட் வழியாக படிப்படியாக வழங்கப்படும். இதற்கு எந்தவொரு ஹார்டுவேர் மாற்றங்களும் தேவையில்லை.

வேகமான சார்ஜிங்கைத் தவிர, கிரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரி ஆப்ஷன்கள், ஹார்டுவேர் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலைப் பிரிவில் புதியது புதியதாக பல எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் க்ரெட்டா கார்கள் விற்பனையில் க்ரெட்டாவின் பெட்ரோல்/ டீசல் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், சற்று கூடுதல் விலையில் வரும் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு சற்று குறைவாகவே உள்ளது. மேலும், பெரிய பேட்டரிகள் மற்றும் கூடுதல் இடவசதியுடன் மார்க்கெட்டிற்கு வரும் புதிய எலெக்ட்ரிக் கார்களால் போட்டி அதிகமாகி வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில் 42 kWh பேக் கொண்ட மாடல் 390 கி.மீ. ரேஞ்ச் உடன் 133bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. பெரிய 51.4 kWh பேட்டரி கொண்ட மாடல் 473 கி.மீ. ரேஞ்சை வழங்குகிறது, இது 169bhp திறனை கொண்டுள்ளது. காரின் அடிப்பகுதியில் பேட்டரி நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
க்ரெட்டா எலெக்ட்ரிக் பல வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேற்கூறப்பட்ட இரண்டு பேட்டரி ஆப்ஷன்களும் எக்ஸிக்யூட்டிவ் (Executive), ஸ்மார்ட் (Smart) மற்றும் எக்ஸ்செலன்ஸ் (Excellence) என்ற மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய 42kWh பேட்டரி உடன், 'பிரீமியம்' (Premium) என்ற ஒரு கூடுதல் வேரியண்ட்டும் உள்ளது.
க்ரெட்டா எலெக்ட்ரிக் கார், வழக்கமான க்ரெட்டாவின் தோற்றத்தை அதிகமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூடிய முன்பக்க கிரில், ஆக்டிவ் ஏர் ஃப்ளாப்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் மூலம் தனித்து தெரிகிறது. இதன் பக்கவாட்டு வடிவமைப்பு கருப்பு நிற மேற்கூரை மற்றும் பில்லர்களுடன் பரிட்ச்சையமானதாக உள்ளது.
17-இன்ச் ஏரோ-ஸ்டைல் அலாய் சக்கரங்கள் புதிய, ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கின்றன. பின் பகுதியில், டிசைன் மாற்றப்பட்ட பம்பர் வடிவத்தில் நுட்பமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இ-எஸ்யூவி 2610mm வீல்பேஸ், 22-லிட்டர் ஃபிரங்க் மற்றும் 433-லிட்டர் பூட் உடன் விசாலமான கேபினைக் கொண்டுள்ளது. உட்புற வடிவமைப்பு கிரே மற்றும் நேவி-ப்ளூ கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா எலெக்ட்ரிக் காரை கடந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஹூண்டாய் அறிமுகம் செய்தது. அந்த அளவிற்கு மாடர்ன் எலெக்ட்ரிக் காராக விளங்கும் இதில் புதிய 100 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது அதனை பயன்படுத்துவதை எளிதாக்குவது மட்டுமின்றி, அதன் விற்பனையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








