யார் மோதினாலும், மோதுறவங்களுக்கு தான் பாதிப்பு! எமனே எதிர்ல வந்தாலும் கல்லு மாதிரி நிற்கும் ஹூண்டாய் கார்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 நவம்பர் மாதத்தில் புதிய 2ஆம் தலைமுறை வென்யூ (Venue) மற்றும் வென்யூ என்-லைன் (N-Line) கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், புதிய வென்யூ மற்றும் வென்யூ என்-லைன் கார்கள் இரண்டும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஹூண்டாய் நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக காராக விற்பனை செய்யப்படும் வென்யூவுக்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு, இந்த ஹூண்டாய் கார் ஒவ்வொரு மாதமும் பெற்றுவரும் கஸ்டமர்களின் எண்ணிக்கை தான் சாட்சியாகும். வென்யூவின் செயல்திறன்மிக்க வெர்சனாக வென்யூ என்-லைன் சற்று கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2025 நவம்பர் மாதத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை வென்யூ மற்றும் வென்யூ என்-லைன் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை இரண்டையும் சோதனை செய்த பாரத் என்சிஏபி அமைப்பு இரண்டிற்கும் 5 ஸ்டார் ரேட்டிங்கை வழங்கி பாதுகாப்பான காராக அங்கீகரித்துள்ளது. இந்த இரு வென்யூ கார்களுக்கும் செயல்படுதிறனில் சில வேறுப்பாடுகள் இருந்தாலும், இரண்டும் இந்த கிராஷ் டெஸ்ட்டில் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றுள்ளன.
பெரியவர்கள் பாதுகாப்பில் புதிய இரண்டாம் தலைமுறை வென்யூ கார் 32க்கு 31.15 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதுவே, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பில் 49க்கு 44.46 மதிப்பெண்களை புதிய வென்யூ பதிவு செய்துள்ளது. காரை முன்பக்கமாக மோதவிட்டு பார்த்ததில் முன் இருக்கைகளில் அமரும் பெரியவர்களின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கு இந்த எஸ்யூவி சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

டிரைவருக்கு அருகே அமர்பவரின் மார்பு பகுதிக்கும் சிறந்த பாதுகாப்பு கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், டிரைவரின் மார்பு பகுதிக்கு இந்த கார் போதுமான பாதுகாப்பையே வழங்குவதாக டம்மிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முன் இருக்கைகளில் அமர்பவர்களின் கால்களுக்கும் போதுமான பாதுகாப்பே கிடைக்கிறது. முன்பக்க மோதலில் பெரியவர்களின் பாதுகாப்பில் 16க்கு 15.15 மதிப்பெண்களை புதிய வென்யூ பெற்றுள்ளது.
அதுவே, நகரக்கூடிய பொருளின் மீது காரின் பக்கவாட்டை மோதவிட்டு பார்த்ததில் 16க்கு முழு 16 மதிப்பெண்களையும் இந்த கார் பதிவு செய்துள்ளது. நகரும் பொருளின் மீது காரின் பக்கவாட்டை மோதவிட்டு பார்த்ததில் டிரைவரின் தலை மற்றும் மார்பு பகுதிக்கு சிறந்த பாதுகாப்பு கிடைப்பதாக பாரத் என்சிஏபி குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை பொறுத்தவரையில், டைனமிக் பெர்ஃபார்மன்ஸில் புதிய வென்யூ 24க்கு 23.46 மதிப்பெண்களையும், குழந்தை கட்டுப்பாட்டு சிஸ்டம் (CRS)-ஐ பொருத்துவதற்கான மதிப்பெண்ணாக 12க்கு முழு 12 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. வாகன பகுப்பாய்வு மதிப்பெண்ணாக 13க்கு 9 மதிப்பெண்கள் இந்த ஹூண்டாய் காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய வென்யூ காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார் அசிஸ்ட் மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றை விட முக்கியமாக, லெவல்-2 அடாஸ் (ADAS) இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் கிடைக்கிறது. வென்யூ என்-லைன் காரில் பிரத்யேகமாக பின்பக்கத்தில் ரேடார் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் தரத்தை மதிப்பிடுவதற்காகவே மத்திய அரசு பிரத்யேகமாக பாரத் என்சிஏபி-ஐ அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த என்சிஏபி அமைப்பால் புதிய ஹூண்டாய் வென்யூ காருக்கு வழங்கப்பட்டுள்ள 5-ஸ்டார் ரேட்டிங் ஆனது அதன் பெட்ரோல் மற்றும் டீசல் என அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications








