ஹூண்டாய் வென்யூ, பேயான், கிரெட்டா.. இதில் எதை வாங்கலாம்?

புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு எஸ்யூவி (SUV) மாடல்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எஸ்யூவி மார்க்கெட்டில் வலுவாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலை நேற்று களமிறக்கி உள்ளது. பேயான் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த எஸ்யூவி மாடர்னாகவும், சிறந்த தேர்வாகவும் இருக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, பேயான் மற்றும் கிரேட்டா ஆகிய மூன்று தேர்வுகள் இருக்கின்றன. இதில், எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்திற்கு விடை காணும் வகையில் சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Hyundai Venue Bayon Creta Comparison

இந்த மூன்று கார்களிலும் விலை மட்டுமின்றி, வெளிப்புற அளவுகள், எஞ்சின் தேர்வுகள், பின்புற இருக்கை வசதி, பூட் இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் எனப் பல வேறுபாடுகள் உள்ளன. எனவே, வென்யூவைவிட பெரியதாக இருக்கும் பேயான் உண்மையிலேயே சிறந்த தேர்வா, கூடுதல் பணம் செலவழித்து கிரெட்டாவை வாங்குவது பயனுள்ளதாக இருக்குமா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

அளவுகளில் என்ன வித்தியாசம்?

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி 3,995 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலமும், 1,665 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,520 மிமீ நீளமுடையது. மூன்று கார்களிலும் சிறிய மாடலாக இருப்பதால், நகரப் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கும் குறுகிய இடங்களில் காரை நிறுத்துவதற்கும் இது சாதகமாக இருக்கும். தினசரி அலுவலகப் பயணம், ஷாப்பிங் செல்வது மற்றும் எப்போதாவது நீண்ட தூரம் பயணம் போன்ற தேவைகளுக்கு பெரிய எஸ்யூவி அவசியமில்லை என்பவர்களுக்கு வென்யூ பொருத்தமான தேர்வாக அமையும்.

Hyundai Venue

ஹூண்டாய் பேயான் எஸ்யூவி 4,245 மிமீ நீளமும், 1,810 மிமீ அகலமும், 1,605 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,600 மிமீ நீளமுடையாதக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வென்யூவைவிட 250 மிமீ நீளமும் 80 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தையும் கொண்டுள்ளது. இதனால் கேபின் மற்றும் பூட் வசதியில் கூடுதல் இடம் கிடைக்கிறது. குறிப்பாக, 505 லிட்டர் பூட் வசதி குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது அதிகப் பயன் தரக்கூடியது. வென்யூவைவிடப் பெரிய கார் வேண்டும்; அதே நேரத்தில் கிரெட்டா அளவுக்கு பட்ஜெட் செல்ல வேண்டாம் என்பவர்களுக்கு பேயான் இடைப்பட்ட தேர்வாக இருக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா 4,330 மிமீ நீளமும், 1,790 மிமீ அகலமும், 1,635 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,610 மிமீ நீளமுடையது. வென்யூ மற்றும் பேயான் எஸ்யூவிகளை பரிமாணத்தில் பெரிய மாடலான கிரெட்டா ஒட்டுமொத்த கார் அனுபவத்தை சிறப்பான இடவசதியுடன் வழங்குகிறது. குடும்பத்தில் பெரியவர்கள் அதிகம் இருந்தாலோ, பின்புற இருக்கையில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இருந்தாலோ கிரெட்டாவையும் பரிசீலிப்பது நல்லது. இருப்பினும், வெளிப்புற அளவுகளை மட்டும் வைத்து பின்புற இடவசதியைத் தீர்மானிக்க முடியாது என்பதால், மூன்று கார்களிலும் அமர்ந்து பார்த்து முடிவு எடுங்கள். ஏனெனில், ஒவ்வொருவரின் உயரம், உருவ அமைப்பை பொறுத்து இந்த தேர்வு மாறுபடும்.

Hyundai Bayon

எஞ்சின் தேர்வுகள்

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியில் 83 எச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 120 எச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 116 எச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் தேர்வுகள் கிடைக்கின்றன. எஞ்சின் தேர்வை பொறுத்து மேனுவல், டிசிடி மற்றும் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. குறைந்த செலவில் நகரப் பயன்பாட்டுக்கான பெட்ரோல் கார் வேண்டும் என்பவர்களுக்கும், அதிக செயல்திறன் கொண்ட டீசல் கார் தேவைப்படுபவர்களுக்கும் வென்யூ வாய்ப்புகளை வழங்குகிறது.

ஹூண்டாய் பேயான் கார் தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 113 எச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஐவிடி (iVT) தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இந்த காரில் டீசல் அல்லது டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் இல்லை. எனவே, நவீன வடிவமைப்பு, கூடுதல் பூட்ரூம் வசதி, சீரான பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு பேயான் பொருத்தமாக இருக்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியில் 113 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 114 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 158 எச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று எஞ்சின் தேர்வுகள் உள்ளன. மேலும், மேனுவல், ஐவிடி, டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் எஞ்சினை பொறுத்துக் கிடைக்கின்றன. நீண்ட தூரப் பயணங்கள், அதிக திறன் வாய்ந்த டீசல் எஞ்சின் மற்றும் அதிக ஆற்றல் கொண்ட டர்போ பெட்ரோல் எஞ்சின் என தேவைகளை பொறுத்து தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

Hyundai Creta

இடவசதி மற்றும் பயன்பாடு

தினசரி அலுவலகப் பயணம், நகர்ப்புற பயன்பாட்டுக்கு சிறப்பான மாடலாக ஹூண்டாய் வென்யூ கார் உள்ளது. இரண்டு பெரியவர்கள், இரண்டு சிறியவர்கள் கொண்ட குடும்பத்தினருக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கும் ஏற்றதாகவே இருக்கிறது. ஆனால், பின்புற இருக்கையில் 3 பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். நான்கு பேர் செல்வதற்கான வாய்ப்பை இந்த கார் வழங்குகிறது. அதேநேரத்தில், பேயான் கார் 4 பேர் செல்வதற்கான போதுமான இடவசதியையும் பொருட்கள் வைப்பதற்கு அதிக பூட்ரூம் இடவசதியையும் பெற்றிருப்பது மிகப்பெரிய பலமாக உள்ளது.

பேயான் எஸ்யூவியின் 2,600 மிமீ வீல்பேஸ் மற்றும் 505 லிட்டர் பூட் வசதி அதன் முக்கிய பலமாக உள்ளன. வென்யூவைவிட நீளமான உடல் அமைப்பும் அதிகப் பூட் இடமும் இருப்பதால், குடும்பப் பயணங்களுக்கு இது வசதியாக இருக்கலாம். குறிப்பாக, குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் அல்லது அடிக்கடி வெளியூர் செல்லும்போது அதிகப் பைகள் எடுத்துச் செல்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ளலாம்.

அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக கிரெட்டா இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,610 மிமீ நீளம் இருப்பதால் 4 பெரியவர்கள் அமர்ந்து செல்வதற்கும், அதேநேரத்தில் பின்புற இருக்கையில் மூன்று பேர் செல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். ஆனால், கிரெட்டா பெரிய கார் என்பதற்காக எல்லா வகையிலும் பேயானைவிடச் சிறந்தது என்று கூற முடியாது. பூட் இடவசதியில் பேயான் முன்னிலையில் இருப்பதால், உங்கள் பயன்பாட்டுக்கு எது முக்கியம் என்பதைப் பொறுத்தே முடிவெடுக்க வேண்டும்.

Also Read

நவீன அம்சங்கள்

ஹூண்டாய் வென்யூ காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, சன்ரூஃப், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, முன்புற காற்றோட்ட இருக்கைகள் போன்ற அம்சங்கள் வேரியண்ட்டுகளைப் பொறுத்துக் கிடைக்கின்றன. எனவே, குறைந்த விலையில் கார் வாங்கினாலும் நவீன வசதிகளைப் பெற முடியும். குறிப்பாக, உயர் வேரியண்ட்டுகளைத் தேர்வு செய்யும்போது அவற்றின் விலையும், வசதிகளும் பேயான் எஸ்யூவியின் நடுத்தர வேரியண்ட்டுகளுடன் ஒத்துப்போகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேயான் எஸ்யூவியின் புதிய தலைமுறை கேபின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் கவரும் வகையில் உள்ளன. உயர் வேரியண்ட்டுகளில் இரண்டு 12.3 அங்குலத் திரைகள், குரல் உதவியாளர், போஸ் ஒலி அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், முன்புறத்தில் வென்ட்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுநர் இருக்கை போன்ற வசதிகள் கிடைக்கின்றன. நவீன தோற்றத்துடன் கூடிய டிஜிட்டல் கேபின் அனுபவம் வேண்டும் என்பவர்களுக்கு பேயான் கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கலாம். இருப்பினும், எல்லா அம்சங்களும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும் என்று கருதாமல், குறிப்பிட்ட வேரியண்ட்டின் வசதிகளைச் சரிபார்க்க வேண்டும்.

கிரெட்டாவிலும் இரண்டு பெரிய திரைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் உயர் வேரியண்ட்டுகளில் கிடைக்கின்றன. எனவே, விலையை வைத்து ஒப்பிட்டு பார்ப்பதுடன் உங்களது அன்றாட பயன்பாட்டு அம்சங்களையும் மனதில் வைக்க வைத்து பேயான் எஸ்யூவியா அல்லது கிரெட்டாவா என்பதை தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.

Also Read

பாதுகாப்பு அம்சங்கள்

வென்யூவில் ஆறு ஏர்பேக்குகள், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் அழுத்தக் கண்காணிப்பு போன்ற வசதிகளுடன், உயர் வேரியண்ட்டுகளில் ஓட்டுனர் உதவி பாதுகாப்பு அமைப்புகளும் கிடைக்கின்றன. பேயான் காரில் ஆறு ஏர்பேக்குகள், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் அழுத்தக் கண்காணிப்பு போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. உயர் வேரியண்ட்டுகளில் லெவல் 2 அடாஸ் புரோ (ADAS Pro) வசதியும், பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு, சுற்றுப்புறக் காட்சி கேமரா போன்ற கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. நவீன ஓட்டுனர் உதவி தொழில்நுட்பத்தை விரும்புபவர்களுக்கு பேயான் எஸ்யூவி முக்கிய தேர்வாக இருக்கிறது.

கிரெட்டாவிலும் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் மின்னணு பாதுகாப்பு வசதிகளுடன், உயர் வேரியண்ட்டுகளில் லேன் கீப்பிங் அசிஸ்ட், தானியங்கி அவசர பிரேக்கிங் உள்ளிட்ட ஓட்டுனர் உதவி அம்சங்கள் கிடைக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களில் மூன்று கார்களிலுமே சிறப்பான தொழில்நுட்பங்கள் இருந்தாலும், பேயான் கார் சற்று முன்னிலை பெறுகிறது.

விலை ஒப்பீடு

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவிக்கு ரூ.8 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் பேயான் கார் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் ஆரம்ப விலை சுமார் ரூ.10.91 லட்சமாக உள்ளது. வசதிகள், எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகளை பொறுத்து பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மேலும், பதிவுக் கட்டணம், காப்பீடு உள்ளிட்டவற்றுடன் ஆன்ரோடு விலை கூடுதலாக இருக்கும்.

பேயான் ஆரம்ப விலை வென்யூவைவிட அதிகமாக இருந்தாலும், அதன் கூடுதல் நீளம், அதிகப் பூட் வசதி மற்றும் நவீன கேபின் அம்சங்கள் சிலருக்கு அந்த விலை நியாயமான மதிப்பை தரும். அதே நேரத்தில், பேயான் காரின் உயர் வேரியண்ட்டை வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இருந்தால், கிரெட்டாவின் மிட் வேரியண்ட்டுகளை பரிசீலிக்கலாம். விலையை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், உங்களுக்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கு எவ்வளவு செலவாகிறது என்பதுதான் முக்கியம்.

எது சிறந்தது?

இங்கு பட்ஜெட், வசதிகளை தாண்டி கார் எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம் என்பதே இங்கு இறுதி தேர்வு செய்வதற்கு முக்கிய விஷயமாக இருக்கும். சிறிய குடும்பத்தினர் நகர்ப்புறத்தில் அதிக பயன்படுத்துபவர்களுக்கு வென்யூ சிறந்த தேர்வாக இருக்கும். அதேநேரத்தில், போதுமான இடவசதியுடன் அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செய்வோருக்கு ஒரு மாடர்ன் கார் வேண்டும் என்றால் பேயான் சிறந்த தேர்வாக இருக்கும். அதிகமாக நெடுஞ்சாலை பயணம், பெரியவர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் கிரெட்டாதான் இன்னமும் சிறந்த தேர்வாக இருக்கும்.

பட்ஜெட் பிரச்னை இல்லாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கிரெட்டாவை தேர்வு செய்யலாம். இந்த நிலையில், புதிய கிரெட்டா கார் சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் சந்தைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதனையும் மனதில் வைத்து கார் வாங்கும் முடிவு எடுப்பது அவசியம். இவை எல்லாவற்றையும் விட உங்களது குடும்பத்தினருடன் சென்று மூன்று கார்களையும் ஓட்டிப்பார்த்து, பயணித்து அந்த அனுபவத்தில் சிறந்ததை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

Article Published On: Tuesday, October 27, 2026, 12:39 [IST]
English summary
Hyundai venue vs bayon vs creta price features space engine comparison
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X