இப்படி ஒரு விசித்திரமான வசதியை எந்த கார்லயும் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க
பயணிகள் கார்கள் அல்லது வாகனங்களில் அவ்வப்போது சில வித்தியாசமான அம்சங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும். பின்னாட்களில் அதுவே மிகவும் முக்கியமான அம்சமாக மாறிப்போகும். அப்படியான ஒரு வசதியை உலகளவில் தாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் பயன்படுத்துதற்காக உருவாக்கி வருகிறது ஹூண்டாய். இதுவும் பின்னாட்களில் முக்கியமான ஒரு வசதியாக மாறிப் போக வாய்ப்பிருக்கிறது.
விலை உயர்ந்த கார்களில் அல்லது மாஸ் மார்க்கெட் கார்களின் டாப் எண்டு வேரியன்ட்களில் ஏர் ப்யூரிஃபையர்கள் இருக்கும், காற்றை சுத்தப்படுத்துவதற்காக இந்த வசதியை நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், வாகனத்தின் உள்ளே கிருமிகளை மொத்தமாக அழிக்கும் வகையில் 'பிளாஸ்மா கேர் UVC' (Plasma Care UVC) என்ற வசதியினை உருவாக்கி வருகிறது ஹூண்டாய்.

நாம் புற ஊதாக் கதிர்கள் (UV Radiation) என சொல்வோம் இல்லையா. அதனைக் கொண்டு தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கும் வகையிலான ஒரு அம்சம் தான் இது. இங்கே புற ஊதா ஒளி (UV Light) என்ற பதத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். புற ஊதாக் கதிர்கள் என்றாலே தீங்கு விளைவிப்பவை தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், புற ஊதாக் கதிர்களின் அலைநீளம் (Wavelength) தான் அவை நமக்கு தீங்கு விளைவிப்பவையா இல்லையா என்பதனை தீர்மானிக்கிறது.
100 முதல் 400 நானோமீட்டர்கள் (nm) வரையிலான அலைவரிசையில் புற ஊதாக் கதிர்கள் இருக்கின்றன. இதில் 100 முதல் 280 நாமீ வரையில் அலைவரிசை கொண்ட கதிர்களே மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான உயிரினங்களுக்கும் தான். அதில் நோய்க்கிருமிகள் மற்றும் வைரஸ்களும் அடங்கும்.

ஸ்டாண்டர்டு UVC எனக் குறிப்பிடப்படும் 254 நாமீ அலைவரிசை கொண்ட புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் தீங்கானவை. ஆனால் இதுவே 207 முதல் 222 நாமீ வரையிலான அலைவரிசை கொண்ட புற ஊதாக் கதிர்களால் மனிதர்களுக்குப் பிரச்சினையில்லை. காரணம் இந்த அலைவரிசை கொண்ட கதிர்களால் மனிதர்களின் தோல் பகுதியினை ஊடுருவிச் செல்ல முடியாது. இதனால் உடலுக்குள்ளும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. ஆனால் கிருமிகள் மற்றும் வைரஸ்களுககு இந்த அலைவரிசை தீங்கானது தான்.
எனவே தான் இந்த அலைவரிசை புற ஊதாக் கதிர்கள் தங்களுடைய கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பயன்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏற்கனவே மேம்பட்ட கட்டத்தினை இந்தத் தொழில்நுட்பம் எட்டியிருக்கிறது.
மேற்கூறிய அலைவரிசை அளவிலான புற ஊதாக் கதிர்கள் Far-UVC என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வாகனங்களின் உள்ளே காற்றின் மூலம் பரவும் வைரஸ்களை 30 நிமிடக்களில் 96.8 சதவீதம் வரை அழித்திருக்கிறது. மேலும், பாக்டீரியாக்களை 30 நொடிகளிலேயே 99.9 சதவீதம் வரை இந்த Far-UVC அழித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது ஹூண்டாய். E-கொல்லி உள்ளிட்ட கிருமிகளுக்கு எதிராகவும் மிகவும் நல்ல முடிவுகளையே இது கொடுத்துள்ளது.
ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பலிசாடே மற்றும் சான்டே ஃபீ உள்ளிட்ட கார்களில் எக்குளோஸ்டு UVC என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருகிறது ஹூண்டாய். அதாவது காரின் முன்பக்க ஆர்ம்ரெஸ்டில் இருக்கும் சிறிய. கம்பார்ட்மென்டில் மட்டும் ஸ்டாண்டர்டு UVC-யைக் கொண்டு கிருமிகளை அழிக்கும் அம்சத்தைக் கொடுத்துள்ளது.
நம்முடைய மொபைல் போன், கார் சாவி அல்லது பிற சிறிய பொருட்களை இந்த கம்பார்ட்மென்டில் வைத்து மூடிவிட்டு பின்னர் ஒரு பட்டனை அழுத்தி UVC பட்டனை ஆன் செய்தால் 10 நிமிடங்களில் நமது பொருட்களை கிளீன் செய்துவிடும். இந்த ஸ்டாண்டர்டு UVC மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்று தான் என்பதால் பார்த்துத் தான் கையாள வேண்டும்.
ஆனால், ஹூண்டாய் தற்போது புதிதாக உருவாக்கவரும் Far-UVC தொழில்நுட்பத்தினை பொறுத்தவரை அவ்வளவு பயம் தேவையில்லை என்றே கூறப்பட்டிருக்கிறது. டெலிவரி வேன்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கியாவின் PV5 உள்ளிட்ட அடுத்து வெளியாகவிருக்கும் வாகனங்களில் இந்த தொழில்நுட்பம் முதற்கட்டமாக கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஒரு நல்ல அம்சம் தான் என்றாலும், இதனால் பயணிகளுக்கு எந்த விதமான தீங்கும் வந்துவிடக் கூடாது என்பதனை ஹூண்டாய் மிகவும் தீவிரமாக உறுதி செய்ய வேண்டும். அனைத்து விதமான அறிவியல் பூர்வமான விளக்கங்களைக் கொடுத்தாலும், வாடிக்கையாளர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் போது தான் தெரியும்.


Click it and Unblock the Notifications