கார்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!
கார்களின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய கார்களில் தானியங்கி அவசர பிரேக்கிங் தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
தற்போதைய முன்மொழிவின்படி, வரும் 2030 அக்டோபர் 1 முதல் அறிமுகமாகும் புதிய கார் மாடல்களில் இந்த வசதி கட்டாயமாக்கப்படும். ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2032 அக்டோபர் 1 முதல் அனைத்து கார் மாடல்களிலும் இந்தத் தொழில்நுட்பம் இடம்பெற வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.

தானியங்கி பிரேக் சிஸ்டம்
மேம்பட்ட தானியங்கி அவசர பிரேக்கிங் அமைப்பு (Advanced Emergency Braking System - AEBS) என்ற அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பமானது, காரின் முன்புறம் ஏற்படக்கூடிய மோதல் அபாயத்தைக் கண்டறிந்து, ஓட்டுனர் சரியான நேரத்தில் செயல்படாவிட்டால் தானாகவே பிரேக்கைச் செயல்படுத்தும். இந்த அமைப்பு பொதுவாக முன்புறக் கேமராக்கள், ரேடார் உள்ளிட்ட உணரிகளின் உதவியுடன் செயல்படும்.
சாலையில் முன்னால் செல்லும் வாகனம் திடீரென வேகத்தைக் குறைத்தாலோ, வாகனங்களுக்கு இடையிலான இடைவெளி ஆபத்தான அளவுக்கு இருந்தால், மோதல் ஏற்படும் வாய்ப்பை இது கணித்து ஓட்டுனரை எச்சரிக்கும். முதலில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை வழங்குவது, தேவைப்பட்டால் தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும். ஓட்டுநர் கவனக்குறைவாக இருக்கும் சூழ்நிலைகளிலும், திடீர் போக்குவரத்து நெரிசலிலும் இந்த வசதி உதவும்.
வரைவு அறிவிப்பு
அரசின் வரைவு அறிவிப்பில், பயணிகள் வாகனங்களுக்கான M1 வகையைச் சேர்ந்த கார்களுக்கு இந்த விதிமுறை முன்மொழியப்பட்டுள்ளது. ஓட்டுனரை தவிர அதிகபட்சம் எட்டு பயணிகள் அமரக்கூடிய வாகனங்கள் பொதுவாக இந்த வகையில் அடங்கும். எனவே, வழக்கமான ஹேட்ச்பேக் கார்கள், செடான்கள், எஸ்யூவிகள் உள்ளிட்ட மாடல்கள் இதன் வரம்புக்குள் வரும்.
மேலும், 2030 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் புதிய M1 கார் மாடல்களில் AEBS வசதி கட்டாயமாக்கப்படும். இதற்குப் பிறகு அறிமுகமாகும் புதிய மாடல்களை வடிவமைக்கும்போதே இந்தத் தொழில்நுட்பத்தைச் சேர்க்க நிறுவனங்கள் திட்டமிட வேண்டியிருக்கும். இதற்கான பொறியியல் அம்சங்கள் மற்றும் சோதனைகளுக்கு நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராக வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு 2030-க்கு பிறகும் தொடர்ந்து உற்பத்தியில் இருக்கும் மாடல்களுக்கு 2032 அக்டோபர் 1 வரை அவகாசம் வழங்கப்படும் என்று முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அனைத்து மாடல்களிலும் இந்த வசதியை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய அழுத்தம் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருக்காது.
AIS-185 தரநிலை முக்கியத்துவம்
இந்தத் தொழில்நுட்பம் வாகனத் துறைக்கான இந்திய தரநிலையான AIS-185-க்கு இணங்க இருத்தல் வேண்டும் என்றும் வரைவு குறிப்பிடுகிறது. இந்தத் தரநிலை AEBS அமைப்பின் செயல்பாடு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை வரையறுக்கிறது. குறிப்பிட்ட தேதிகளுக்குள் தயாரிக்கப்படும் வாகனங்கள், அப்போது நடைமுறையில் இருக்கும் திருத்தங்களுடன் கூடிய தரநிலையைப் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மேலும், 2028 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் M1 மற்றும் N1 வகை வாகனங்களில் AEBS வசதி வழங்கப்பட்டிருந்தால், அது AIS-185 தரநிலைக்கு இணங்க வேண்டும் என்றும் வரைவு கூறுகிறது. N1 என்பது இலகுரக சரக்கு வாகன வகையாக குறிப்பிடப்படுகிறது.
கார் விலை உயரும்?
இந்த புதிய AEBS பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கார்களில் பொருத்துவதால், வாகனத்தின் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். கேமராக்கள், ரேடார், சென்சார்கள், மின்னணுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் அவற்றுக்கான சோதனைகள் ஆகியவை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தற்போது வரைவு நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகளிடமிருந்து கருத்துகள், ஆட்சேபனைகளைப் பெறுவதற்கான நடைமுறையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசம் முடிந்த பிறகு கருத்துகள் பரிசீலிக்கப்படும். அதன்பிறகே இறுதி விதிமுறைகள் குறித்த தெளிவு கிடைக்கும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் புதிய கார்கள் அறிமுகமாகும் விதத்திலும் பாதுகாப்பு வசதிகளின் முக்கியத்துவத்திலும் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, ஓட்டுனரின் எதிர்வினை தாமதமாகும் சூழ்நிலைகளில் உதவும் தொழில்நுட்பங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications


