போற போக்கை பாத்தா இந்தியால ஒரு பெட்ரோல் பங்க் கூட இருக்காதாட்ட இருக்கு! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு பெட்ரோல் (Petrol) உடன் 1.5 சதவீதம் எத்தனால் (Ethanol) கலக்கப்பட்டது. அது தற்போது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 302 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதி குறைந்துள்ளது. அத்துடன் இந்தியாவின் அந்நிய செலாவணியில் (Forex) 1.84 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
எனவே பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் ஏராளமான ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் (Flex Fuel) அறிமுகமாகி வருகின்றன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Splendor Plus) மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் (HF Deluxe) பைக்குகளின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இவை 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்க கூடிய தன்மை வாய்ந்தவை. அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக தனது அனைத்து டூவீலர்களின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மறுபக்கம் எத்தனால் ஸ்டேஷன்களை (Ethanol Station) அதிகளவில் திறக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், புனே, மும்பை மற்றும் நாக்பூர் போன்ற பகுதிகளில் கூடிய விரைவில் 50-100 எத்தனால் ஸ்டேஷன்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக எத்தனால் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை மிக வேகமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தியாவில் 500 எத்தனால் ஸ்டேஷன்கள் இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2027) இறுதிக்குள்ளாக 5,000 எத்தனால் ஸ்டேஷன்கள் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) இந்த தகவலை தெரிவித்ததாக ஹெச்டி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது புதியதாக விற்பனைக்கு வரும் டூவீலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பாதி வாகனங்கள் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களாக இருந்தால் 311.8 கோடி லிட்டர் எத்தனால் தேவையை இந்தியாவால் உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு கூடுதலாக 12,403 கோடி ரூபாய் வருமானத்தை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மக்காச்சோளம் மற்றும் கரும்பு போன்ற விவசாய பொருட்களில் இருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வரும் நிலையில், எத்தனாலை போலவே விவசாய பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஐசோப்யூட்டனாலை (Isobutanol) டீசல் உடன் கலந்து பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்த நடவடிக்கை உண்மையிலேயே வரவேற்க கூடிய ஒன்றுதான்!


Click it and Unblock the Notifications