இனி உங்க காரின் மைலேஜ் குறையலாம்.. ஜாக்கிரதை!
இந்தியர்கள் ஒரு காரை வாங்கும் போது எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதனை கண்டிப்பாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுகிறது என்ற அளவு நிறைய குடும்பங்களில் காரின் மைலேஜைக் பொறுத்தும் இருக்கிறது. இந்த நிலையில் இனி ஒரு காரினை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் குறைவான மைலேஜ் கொண்டாகவே அது இருக்கும். ஏன் தெரியுமா?
இந்தியாவில் கார்களின் மைலேஜை பெரும்பாலும் ARAI (Automotive Research Association of India) அமைப்பே சோதனை செய்து வெளியிடுகிறது. அதனையே நிறுவனங்கள் தங்களுடைய காரின் மைலேஜாக அனைத்து இடங்களிலும் குறிப்பிடுகின்றன. இந்த மைலேஜ் அளவில் ஒரு பிரச்சினை என்னவென்றால், ARAI குறிப்பிடும் அளவிற்கு, தினசரிப் பயன்பாட்டின் போது நமக்குக் கிடைக்கும் உண்மையான மைலேஜுக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் அதிகமாக இருப்பது தான்.

உதராணத்திற்கு மாருதியின் டிசையர் செடான் மாடலானது லிட்டருக்கு 25.71 கிமீ வரையிலான மைலேஜ் கொடுப்பதாக ARAI அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் தினசரிப் பயன்பாட்டில் சராசரியாக லிட்டருக்கு 15 கிமீ வரையிலான மைலேஜையே இந்தக் கார் கொடுக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ARAI குறிப்பிடும் மைலேஜ் அளவை பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நிலையே இருந்து வருகிறது.
ஏன் இந்த வேறுபாடு?
கார்களின் மைலேஜை சோதனை செய்வதற்கு MIDC (Modified Indian Driving Cycle) என்ற முறையை ARAI அமைப்பு பின்பற்றி வருகிறது. இந்த சோதனை முறையானது நிஜ உலக வாகனப் பயன்பாட்டை ஒற்றதாக இல்லை. குறைவான வேகத்தில், குறைவான நேரத்தில், குறைவான தூரத்திற்கு மட்டுமே MIDC முறையில் சோதனைக் கூடத்தில் காரின் மைலேஜ் சோதனை செய்யப்படுகிறது.

இந்த சோதனை முறையின் கீழ் காரை இயக்க மட்டும் தான் செய்கிறார்களே தவிர, நிஜமாக ஒரு சாலையில் ஓட்டும் போது எப்படி ஓட்டுதல் இருக்கும் என்பது போல் சோதனை செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக MIDC சோதனையின் முடிவில் ஒரு கார் குறைவான எரிபொருளையே செலவழித்திருக்கிறது. இது நிஜ உலகில் அதே காரை நாம் ஓட்டும் போது மைலேஜ் குறைவாகக் கொடுக்கிறது.
வருகிறது புதிய சோதனை முறை:
இதனால் தான் WLTP (Worldwide Harmonized Light Duty Test Procedure) அடிப்படையில் AIS:175 என்ற புதிய சோதனை முறை இந்தியாவில் 2027 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவிருப்போதோடு, இனி இதுவே கட்டாயமாக்கப்படவும் இருக்கிறது. இது ஏற்கனவே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமலில் இருக்கும் கார் எரிபொருள் பயன்பாட்டு சோதனை முறையாகும். இதனை அடுத்தாண்டில் இருந்து இந்தியாவும் கடைப்பிடிக்கவிருக்கிறது.
WLTP முறையின் கீழ் நிஜ உலகப் பயன்பாட்டில் ஒரு கார் எப்படிப் பயன்படுத்தப்படுமோ அது போலவே சோதனை சூழலிலும் சோதனை செய்யப்படவிருக்கிறது. இதன் காரணமாக நிஜ உலகில் ஒரு கார் எவ்வளவு மைலேஜ் கொடுக்குமோ, கிட்டத்த அதனை ஒட்டிய அளவை இந்த சோதனை முறை மூலம் நாம் பெற முடியும். எரிபொருள் கார்கள் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்களுக்கும் இதே நடைமுறை தான்.
MIDC மற்றும் WLTP சோதனை முறைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்:
MIDC சோதனை முறை அர்பன், எக்ஸ்ட்ரா அர்பன் என இரண்டு கட்டங்களாக 20 நிமிடங்களுக்கு நடத்தப்படும். 10 கிமீ தூரத்திற்கு மணிக்கு 90 கிமீ என்ற வேகத்தில் கார் இயக்கப்படும். சோதனைக்கூட ஆய்வு என்பதால், ஸ்பீடு பிரேக்கரோ, வாகன நெரிசலோ எதுவும் இருக்காது. எனவே மிகவும் ஜெண்டிலாக கார் இயக்கப்படும். இதனால் தான் இந்த சோதனையில் கார் அதிக மைலேஜ் கொடுக்கிறது.
WLTP சோதனை முறையானது, லோ, மீடியம், ஹை மற்றும் எக்ஸ்ட்ரா ஹை ஸ்பீடு என நான்கு கட்டங்களாக 30 நிமிடங்களுக்கு நடத்தப்படும். கார் 25 கிமீ வரை, அதிகட்சமாக மணிக்கு 131 கிமீ வரையிலான வேகத்தில் இயக்கப்படும். நிஜ உலகில் பயன்படுத்தும் போது எப்படி வேகமாக ஆக்சிலரேட் செய்வோம், அடிக்கடி பிரேக் பிடிப்போம், அக்ரஸிவ்வாக கியர் மாற்றுவோமோ அதே போல் சோதனையிலும் டிரைவிங் முறை கடைப்பிடிக்கப்படும்.
இதன் காரணமாக தினசரிப் பயன்பாட்டின் போது கிடைக்கும் உண்மையான மைலேஜ் அளவிற்கு நிகராக WLTP சோதனை முறையின் கீழ் மைலேஜ் அளவை பெற முடியும். 2027 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ARAI அமைப்பால் சோதனை செய்யப்படும் கார்கள் அனைத்தும் இந்த முறையின் கீழே சோதனை செய்யப்படும்.
ஏற்கனவே இந்த புதிய முறையின் கீழ் லெக்சஸ் LM 350h என்ற சொகுசு எம்பிவி காரை ARAI அமைப்பு சோதனை செய்து அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் WLTP முறையில் சோதனை செய்யப்பட்ட முதல் கார் என்ற பெருமையை இந்த லெக்சஸ் கார் பெற்றிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இந்த புதிய மாற்றத்தின் காரணமாக அடுத்த ஆண்டிலிருந்து நீங்கள் கார் வாங்கச் சென்றால் காரின் மைலேஜை குறைவாகவே கூறுவார்கள். அச்சச்சோ மைலேஜ் குறைவாக இருக்கிறதே என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அதே அளவு மைலேஜே தினசரிப் பயன்பாட்டிலும் நமக்குக் கிடைக்கலாம். இந்த வாகன சந்தையில் இது ஒரு முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. நாங்களும் இந்தப் புதிய மாற்றத்தை வரவேற்கிறோம்.


Click it and Unblock the Notifications