ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார், பைக்குகளுக்கான 100% எத்தனால் (E100) எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி
பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, 100 சதவீத எத்தனால் கொண்ட E100 எரிபொருளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எரிபொருள் பயன்படுத்தும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களுக்கு ஏற்றவாறு மோட்டார் வாகன விதிமுறைகளும் திருத்தப்பட்டுள்ளன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், E100 எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பான விதிமுறைகளும் இடம்பெற்றுள்ளன. இது புதிய வாகனங்களைத் தயாரிப்பதற்கும், அவற்றுக்கான சான்றிதழ் பெறுவதற்கும் முக்கியமானதாக இருக்கும்.

E100 எரிபொருள்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் தற்போது எத்தனால் கலந்து வினியோகிக்கப்படுகிறது. தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள E20 பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலும், 80 சதவீத பெட்ரோலும் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், E85 எரிபொருளில் 85 சதவீத எத்தனாலும், 15 சதவீதம் பெட்ரோலும் கலந்து இருக்கும். ஆனால், E100 என்பது முழுமையாக எத்தனாலை மட்டுமே எரிபொருளாக வாகனங்களில் பயன்படுத்த முடியும். இதைப் பயன்படுத்துவதற்கு வாகனத்தின் எஞ்சின், எரிபொருள் அமைப்பும் அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஃப்ளெக்ஸ் ஃபியூவல் வாகனங்கள்
E100 எரிபொருளை வாகனங்களை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் ஃப்ளெக்ஸ் ஃபியூவல் (Flex Fuel) என்று குறிப்பிடப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள், அவற்றின் வடிவமைப்பைப் பொறுத்து வெவ்வேறு விகிதங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை அல்லது வெறும் எத்தனால் எரிபொருளை பயன்படுத்தும் திறன் கொண்டிருக்கும். புதிய விதிமுறைகளின்படி, E85 அல்லது E100 எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பொருந்தும்.
பெட்ரோல் வாகனங்களில் பயன்படுத்த முடியுமா?
தற்போது பயன்பாட்டில் இருக்கும் சாதாரண பெட்ரோல் வாகனங்களில் E100 எரிபொருளை பயன்படுத்த முடியாது. அதிக எத்தனால் செறிவு கொண்ட எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் எஞ்சின், எரிபொருள் செலுத்தும் அமைப்பு மற்றும் தொடர்புடைய பாகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல், E20 பெட்ரோலைப் பயன்படுத்தும் திறன் கொண்ட வாகனங்களிலும் E100 எரிபொருளை பயன்படுத்த முடியாது. எனவே, வாகன உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள எரிபொருள் பரிந்துரைகளைப் பின்பற்றுவது அவசியம். இந்த புதிய விதிமுறையால் ஏற்கனவே உள்ள வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. எனினும், இதற்காக பிரத்யேக தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களில் இந்த E100 எரிபொருளை பயன்படுத்த இயலும்.
பெட்ரோல் விலை குறையுமா?
எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதன் முக்கிய நோக்கமே, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து எரிபொருளுக்காக வெளிநாடுகளின் சார்பை குறைப்பதாகவே உள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட உயிரி மூலப்பொருட்களிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியையும் ஊக்குவிக்க முடியும். இருப்பினும், E100 பயன்பாடு அதிகரித்தால் பெட்ரோல் விலை குறையும் என்று உறுதியாகக் கூற முடியாது.
வாகன ஓட்டிகளுக்கு உண்மையான பலன் கிடைக்கிறதா என்பதை எரிபொருளின் விலை, வாகனத்தின் மைலேஜ், புதிய வாகனங்களின் விலை மற்றும் எத்தனால் கிடைக்கும் கட்டமைப்பு வசதி ஆகியவையே தீர்மானிக்கும். பெட்ரோலைவிட எத்தனால் எரிபொருளின் ஒரு லிட்டருக்கான விலை குறைவாக இருந்தாலும், வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.
E100 எரிபொருளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டு இருப்பதால், அதற்கேற்ற வாகனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், வாகன உற்பத்தியாளர்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதுடன், எத்தனால் எரிபொருளை விற்பனை செய்யும் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
எத்தனால் பயன்பாடு அதிகரிப்பதன் மூலமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாற்று எரிபொருள் என்ற பெயரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டும் போதாது. வாகனத்தின் விலை, மைலேஜ், எரிபொருள் கிடைக்கும் கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் மக்களுக்குச் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் E100 எரிபொருள் நடைமுறையில் பயனுள்ளதாக மாறும் வாய்ப்பை பெற முடியும்.
The article title has been corrected and updated.


Click it and Unblock the Notifications

