மஹிந்திராவுக்கு எதிரே யாரும் போய்டாதீங்க சார்... எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஜெட் வேகத்தில் உயருது!!
இந்தியாவில் 2026ஆம் ஆண்டின் தொடக்கம் எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicle) சந்தைக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையிலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது. மேம்பட்ட சார்ஜிங் கட்டமைப்பு, புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் தொடர்ச்சியான வருகை மற்றும் அரசின் தொடர் சலுகைகள் ஆகியவை எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள சில்லறை விற்பனைத் தரவுகளின்படி, 2026 ஜனவரியில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 18,470 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இது 2025 ஜனவரியில் விற்பனையான 11,935 எலெக்ட்ரிக் கார்களை விட 54.75% அதிகம் ஆகும். அதேபோல், மாதாந்திர அடிப்படையில் (MoM) 2025 டிசம்பர் மாதத்தின் 14,944 யூனிட்கள் விற்பனையுடன் ஒப்பிடுகையிலும் 23.59% வளர்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு தளத்தைக் கொண்ட டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்த சந்தையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8,007 எலெக்ட்ரிக் கார்களை விற்று, வழக்கம்போல் டாடா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது, 2025 ஜனவரியில் பதிவான 5,313 டாடா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையை விட 50.71% (YoY) வளர்ச்சி ஆகும்.
மேலும், 2025 டிசம்பரின் 6,460 யூனிட்கள் உடன் ஒப்பிடுகையிலும் 23.95% அதிகரித்து சாதகமான நிலையை எட்டியுள்ளது. டாடாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), தனது 'வின்ட்சர்' (Windsor) எலெக்ட்ரிக் காரின் சிறப்பான விற்பனை காரணமாக, கடந்த மாதம் 4,703 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

இது 2025 ஜனவரியில் விற்கப்பட்ட 4,530 எம்ஜி எலெக்ட்ரிக் கார்களை விட 3.82% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியாகும். அதேபோல் மாதாந்திர அடிப்படையில், டிசம்பர் மாதத்தின் 3,559 யூனிட்களை விடவும் 32.14% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா (Mahindra) நிறுவனம், கடந்த மாதம் 3,668 எலெக்ட்ரிக் கார்களை விற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதுவே, 2025 ஜனவரியில் மஹிந்திரா வெறும் 740 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் 395.68% என்கிற மிகப்பெரிய ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைக் கண்டுள்ளது. மாதாந்திர விற்பனையிலும் 18.98% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான, மூன்று-வரிசைகளில் ஏழு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S)-இன் சமீபத்திய அறிமுகத்துடன், மஹிந்திரா மேலும் அதிக விற்பனையை எதிர்பார்க்கிறது.

இந்திய சந்தையில் புதியதாக களமிறங்கிய வின்ஃபாஸ்ட் (Vinfast) நான்காவது இடத்தை பிடித்து, 2026 ஜனவரியில் 435 எலெக்ட்ரிக் கார்களை சில்லறை விற்பனை செய்து வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2025 ஜனவரியை விட 15.67% ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியாகும். ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 333 யூனிட்களாக மட்டுமே பதிவாகியுள்ளது.
இருப்பினும் இது முந்தைய 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 யூனிட்கள் அதிகம் என்பது மட்டுமின்றி, 2025 டிசம்பர் உடன் ஒப்பிடுகையிலும் 26.62% அதிகமாகும். பிஎம்டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 65.46% வளர்ச்சியைக் கண்டு 321 யூனிட்களை எட்டிப் பிடித்துள்ளது. அதே நேரத்தில், 2025 டிசம்பர் மாதத்துடனான இதன் மாதாந்திர விற்பனை 6.96% குறைந்துள்ளது.
| Electric Car Brands | Jan-26 | Jan-25 | Diff |
|---|---|---|---|
| Tata | 8,007 | 5,313 | 2,694 |
| JSW MG | 4,703 | 4,530 | 173 |
| Mahindra | 3,668 | 740 | 2,928 |
| Vinfast | 435 | 0 | 435 |
| Hyundai | 333 | 331 | 2 |
| BMW | 321 | 194 | 127 |
| Kia | 309 | 51 | 258 |
| BYD | 231 | 338 | -107 |
| Maruti | 215 | 0 | 215 |
| Mercedes | 70 | 104 | -34 |
| Citroen | 41 | 274 | -233 |
| Tesla | 37 | 0 | 37 |
| Volvo | 36 | 29 | 7 |
| Others | 64 | 31 | 33 |
| Total | 18,470 | 11,935 | 6,535 |
கியா இந்தியா (Kia India), கடந்த மாதம் 309 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து, 2025 ஜனவரியை விட 505.88% என்கிற சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்யும் பி.ஒய்.டி இந்தியா (BYD India) நிறுவனம், கடந்த 2026 ஜனவரியில் 231 யூனிட்களை விற்பனை செய்து, 2025 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் அதன் கார்கள் விற்பனையில் 31.66% சரிவையும், 2025 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 2.53% சரிவையும் சந்தித்துள்ளது.
இவற்றிற்கு அடுத்து, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி 215 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடனும், மெர்சிடிஸ், சிட்ரோன் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் முறையே 70, 41, 37 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
| Electric Car Brands | Jan-26 | Dec-25 | Diff |
|---|---|---|---|
| Tata | 8,007 | 6,460 | 1,547 |
| JSW MG | 4,703 | 3,559 | 1,144 |
| Mahindra | 3,668 | 3,083 | 585 |
| Vinfast | 435 | 376 | 59 |
| Hyundai | 333 | 263 | 70 |
| BMW | 321 | 345 | -24 |
| Kia | 309 | 313 | -4 |
| BYD | 231 | 237 | -6 |
| Maruti | 215 | 9 | 206 |
| Mercedes | 70 | 68 | 2 |
| Citroen | 41 | 45 | -4 |
| Tesla | 37 | 68 | -31 |
| Volvo | 36 | 37 | -1 |
| Others | 64 | 81 | -17 |
| Total | 18,470 | 14,944 | 3,526 |
Table Source: Rushlane
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஜனவரியில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2026 ஜனவரியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதில் இருந்து இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









