எலெக்ட்ரிக் கார்-ன்னா அது டாடா மோட்டார்ஸ் தான்! மாருதியே 4வது இடத்தில் தான்!
இந்திய எலெக்ட்ரிக் கார்கள் சந்தை இதுவரை இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 ஜூனில் வெளியான சமீபத்திய விற்பனை எண்ணிக்கைகள் எலெக்ட்ரிக் வாகன உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை 30,000 யூனிட்களைக் கடந்து, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சரியாகச் சொன்னால், மொத்தம் 30 ஆயிரத்து 592 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது எலெக்ட்ரிக் வாகனப் புரட்சி இந்தியாவில் முழு வீச்சில் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் வெறும் 14,902 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் தற்போது 105.3 சதவீதம் என்கிற அசாத்தியமான ஆண்டு வளர்ச்சியை (YoY) பதிவு செய்துள்ளது. 2026 மே மாதத்துடன் ஒப்பிடும்போதும் கூட, எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை சுமார் 11.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பந்தயத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) 12,077 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் 39.5 சதவீத சந்தைப் பங்கீட்டைப் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு எலெக்ட்ரிக் கார் ஆனது டாடா நிறுவனத்துடையது ஆகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 5,375 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த டாடாவிற்கு, இது 124.7 சதவீத அசுர வளர்ச்சியாகும். இதற்கு அடுத்தபடியாக, 7,683 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் 25.1 சதவீத சந்தைப் பங்கீட்டைப் பெற்று மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 3,513 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையை மட்டுமே பதிவு செய்திருந்த மஹிந்திரா, தற்போது 118.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோல், முந்தைய மே மாதத்தை விட 17.3 சதவீத மாதாந்திர வளர்ச்சியை எட்டி, டாடா மற்றும் எம்ஜி போன்ற முன்னணி நிறுவனங்களையே இந்த விஷயத்தில் பின்னுக்குத் தள்ளி ஆச்சரியப்படுத்தியுள்ளது மஹிந்திரா.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் 5,811 எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உடன் மூன்றாவது இடத்தில் மிக வலுவாகக் கால்பதித்துள்ளது. இதன் விற்பனை கடந்த ஆண்டை விட 23.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2026 மே மாதத்தில் 5,269 யூனிட்களாக இருந்த இதன் விற்பனை தற்போது 10.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
நான்காவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,902 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் 6.2 சதவீத பங்கைப் பெற்றுள்ளது. வியட்நாமிய நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), கடந்த மே மாதத்தை காட்டிலும் 9.5 சதவீத வளர்ச்சியுடன் 1,398 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையை பதிவு செய்து, 4.6 சதவீத சந்தைப் பங்குடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
சீன எலக்ட்ரிக் கார் ஜாம்பவானான BYD 868 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50.4 சதவீத வளர்ச்சியாகும். இதனை காட்டிலும் நாம் உற்றுநோக்க வேண்டிய ஒரு பெரிய விந்தை என்னவென்றால், கியா இந்தியா (Kia India) நிறுவனம் அடைந்த இமாலய வளர்ச்சி தான்.
| நிறுவனம் (OEM Name) | வாகனப் பதிவுகள் - ஜூன் 2026 (Registrations) | சந்தைப் பங்கு (Market Share %) |
| டாடா மோட்டார்ஸ் (Tata Motors) | 12,077 | 39.48 |
| மஹிந்திரா (Mahindra) | 7,683 | 25.11 |
| ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) | 5,811 | 19.00 |
| மாருதி சுசுகி (Maruti Suzuki) | 1,902 | 6.22 |
| வின்ஃபாஸ்ட் (VinFast) | 1,398 | 4.57 |
| பிஒய்டி (BYD) | 868 | 2.84 |
| கியா இந்தியா (Kia India) | 449 | 1.47 |
| ஹூண்டாய் (Hyundai) | 348 | 1.14 |
| டொயோட்டா (Toyota) | 32 | 0.10 |
| சிட்ரோயன் (Citroen) | 24 | 0.08 |
| மொத்தம் (Total EV Sector) | 30,592 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் எம்ஜி ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் 83.6 சதவீதப் பங்கைக் கையில் வைத்துள்ளன. அதே சமயம் புதிய வரவுகளான மாருதி சுசுகி மற்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனங்கள் அடுத்த கட்டத்திற்கு நகரத் தயாராகி வருகின்றன. இந்த அசுர வேகப் போட்டி இன்னும் என்னென்ன சாதனைகளை படைக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!


Click it and Unblock the Notifications