இந்த மாருதி கார் விற்பனை நிறுத்தம்.. அதுக்கு பதிலா டாடா பன்ச்சுக்கு போட்டியா வருது புத்தம் புது எஸ்யூவி
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் குறைவான விலை கொண்ட கார் மாடல் ஒன்றின் தயாரிப்பை சத்தமில்லாமல் மாருதி சுஸூகி நிறுவனம் நிறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விலை குறைவான பட்ஜெட் கார்களுக்குப் பெயர் போன நிறுவனம் மாருதி. இந்தியாவில் பல்வேறு பட்ஜெட் கார்களை, குறிப்பாக ஹேட்ச்பேக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதில் 'இக்னிஸ்' (Ignis) என்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தவுள்ளதாகத் தகவல்.
பெரிதாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் தயாரிப்பை நிறுத்தி வருகிறதாம். டீலர்ஷிப்களும் தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளை விரைவாக விற்பனை செய்து வருகின்றன. தயாரிப்பு நிறுத்தப்பட்டு வரும் காரணத்தால் நிறைய மாருதி டீலர்ஷிப்கள் இந்த இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளையும் நிறுத்தியிருக்கின்றன. ஆனால் இது குறித்து மாருதி தரப்பிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5.35 லட்சம் முதல் ரூ.7.55 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இக்னிஸ். பெலினோ, ஸ்விஃப்ட் உள்ளிட்ட மற்ற மாருதி ஹேட்ச்பேக்குகள் எல்லாம் அரீனா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்ட, இந்த இக்னிஸ் மட்டும் ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு காரணமும் இருக்கிறது. மாருதியின் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களிலேயே 4 சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருக்கும் ஒரே கார் இக்னிஸ் தான். ஸ்விஃப்ட் உட்பட மற்ற மாருதி ஹேட்ச்பேக்குகளில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்க, இக்னிஸில் மட்டுமே 1.2 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜினை மாருதி பயன்படுத்தியிருக்கிறது.

நல்ல கார் தான், ஆனாலும் லுக் அனைவரும் பிடிக்கும்படியாக இருக்கிறதா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே சிறிய காராக இருக்கும் இக்னிஸை அதன் மேலும் சிறிய காராக காட்டும். இப்போதும் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கும் வேகன் ஆரின் பிளஸ் பாயிண்ட் தான், இக்னிஸின் மைனஸ் பாயிண்ட் என்று கூட சொல்லலாம்.
காரின் உள்ளே இடவசதியை அதிகரிக்க வேகன் ஆரை டால் பாய் டிசைனில் மாருதி வடிவமைத்திருக்கும். கிட்டத்தட்ட வேகன் ஆரின் அளவுகளே இருக்கும் இக்னிஸ் அப்படியே அதற்கு மாற்றாக உள்ளே குறைவான இடவசதியைக் கொண்டிருப்பதைப் போல இருக்கும். ஒட்டுமொத்தமாக இதன் டிசைனை இதனை வழக்கமான காராக் காட்டாமல், 'மினி' கார் என்ற தோற்றத்தையே உருவாக்குவதாக இருக்கிறது.
இது காரின் விற்பனையிலும் எதிரொலிக்க, மற்ற மாருதி ஹேட்ச்பேக்குகள் அடைந்த விற்பனை அளவை இக்னிஸால் எட்ட முடியவே இல்லை. 2017ல் வெளியிடப்பட்ட இந்தக் கார், 2022ம் ஆண்டு தான் அதிகபட்சமாக 51,176 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. அதே ஆண்டு 1.76 லட்சம் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார்களை மாருதி விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இக்னிஸ் ஹேட்ச்பேக் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை என்பதை மாருதியும் உணர்ந்ததோ என்னவோ அதனை பெரிதாக அந்நிறுவனம் அப்டேட் செய்யவேயில்லை. 2020ல் தான் கடைசியாக இந்தக் காரை முறையாக அப்டேட் செய்தது மாருதி. கடந்த சில ஆண்டுகளில் இந்தக் காரின் விற்பனை வெகுவாகவே குறைந்தும் விட்டது. 2025-ல் 27,900 இக்னிஸ் கார்களையே அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
வரும் ஆண்டுகளில் இதன் விற்பனை மேலும் குறையவே வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இந்த ஹேட்ச்பேக் மாடலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான ஒரு மாடலை களமிறக்க மாருதி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதே இக்னிஸின் விலை அளவில், டாடா நிறுவனமானது பன்ச் என்ற மைக்ரோ எஸ்யூவி மாடலையும், ஹூண்டாய் நிறுவனமானது எக்ஸ்டர் என்ற மாடலையும் விற்பனை செய்து வருகின்றன.
பட்ஜெட் கார்களின் கிங்கான மாருதி இதுவரை இந்த மைக்ரோ எஸ்யூவி பிரிவில் கால் பதிக்காமல் இருந்தது. ஆனால் விரைவில் புதிய எஸ்யூவி ஒன்றை பன்ச் மாடலுக்கு மாற்றாக அந்நிறுவனம் களமிறக்கலாம் எனத் தெரிகிறது. இக்னிஸின் தயாரிப்பு நிறுத்தமும் அதனையே சுட்டிக்காடுகின்றன. Y43 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை மாருதி உருவாக்கி வருவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியாகின.
அப்போதே, 2026ன் இறுதியில் இந்தப் புதிய கார் மாடலை மாருதி இந்தியாவில் வெளியிடலாம் என்றும் கூறப்பட்டது. அதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், மாருதி அதற்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் மனநிலையும் தற்போது ஹேட்ச்பேக்கில் இருந்து எஸ்யூவிக்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. மாருதியும் அதற்கேற்ற வகையில் தயாராகி வருகிறது. விரைவில் இந்த மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மாருதியிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் ஹேட்ச்பேக் செக்மெண்டை தூக்கிப்பிடிக்கும் முக்கிய நிறுவனமாக மாருதி இருக்கிறது. ஒரு காலத்தில் மாருதிக்கு மிக அதிக விற்பனையைக் கொடுத்தது இந்தப் பிரிவு தான். இப்போதும் வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய மாடல்கள் மாருதிக்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன. எனினும் டாடா நிறுவனம் பன்ச் மூலம் மாருதியுடன் விளையாடி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் பலமுறை மாருதியின் தொடக்கநிலை கார்களை விட டாடாவின் பன்ச் அதிகம் விற்பனையாகியிருக்கிறது. ஆனால் அப்படி அதிகம் விற்பனையாகும் ஒரு காரின் பிரிவில் மாருதி இல்லவே இல்லை. அந்தக் குறையைப் போக்கவே புதிய காரைக கொண்டு வருவதாக நாங்கள் நினைக்கிறோம். அதற்கு இடம் விடும் வகையிலேயே இக்னிஸின் தயாரிப்பையும் அந்நிறுவனம் நிறுத்தியிருப்பதாகக் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








