ஆக்சிலரேட்டரை தொட்டால் சிட்டாய் பறக்கும்... ஜாகுவாரின் பவர்ஃபுல் EV கார் அறிமுகம்!
டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் இங்கிலாந்து நாட்டு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார், தனது புதிய டைப் 01 (Type 01) மின்சார கிராண்ட் டூரர் காரை நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்வில் மூலமாக உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. நான்கு கதவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் ஆரம்ப விலை 1,30,000 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.1.66 கோடியாகும்.
டைப் 01 காருக்கான முன்பதிவு வரும் ஆண்டு துவக்கத்தில் தொடங்கும் என ஜாகுவார் தெரிவித்துள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள சோலிஹல் ஆலையில் இதன் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இது அந்நிறுவனத்தின் புதிய தலைமுறை மின்சார கார் திட்டத்தில் முக்கியமான மாடலாக பார்க்கப்படுகிறது.

புதிய தளத்தில் உருவான முதல் கார்
ஜாகுவார் டைப் 01, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ஜாகுவார் எலெக்ட்ரிக் ஆர்க்கிடெக்ச்சர் (JEA) தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் ஜாகுவார் நிறுவனத்திற்கு மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் எலெக்ட்ரிக் மாடல்களில் பயன்படுத்தப்படும் தளத்துடன் இதற்கு நேரடி தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டைப் 01 என்ற பெயரிலும் ஜாகுவாரின் வரலாறு பிரதிபலிக்கிறது. நிறுவனத்தின் புகழ்பெற்ற டைப் டி மற்றும் டைப் இ மாடல்களின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் 'டைப்' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் '0' என்பது பூஜ்ய மாசு உமிழ்வு அம்சத்தையும், '1' என்பது புதிய கட்டமைப்பு தளத்தின் முதல் மாடல் என்பதையும் குறிக்கிறது.

பவர்ஃபுல் EV மாடல்
செயல்திறனைப் பொறுத்தவரை டைப் 01 மிகவும் சக்திவாய்ந்த மின்சார காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இணைந்து அதிகபட்சமாக 1,030 எச்பி பவரையும், 1,365 என்எம் டார்க்கையும் வழங்குகின்றன. இந்த கார் பூஜ்ய நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. வளைவுகளில் காரின் கட்டுப்பாட்டை மேம்படுத்த டார்க் வெக்டரிங் மற்றும் ரியர்வீல் ஸ்டீயரிங் தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.
ரேஞ்ச்
ஜாகுவார் டைப் 01 காரில் 850V மின்சார கட்டமைப்பு மற்றும் 120 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதில் 118 kWh பயன்படுத்தக்கூடிய திறனாக இருக்கிறது. WLTP சோதனை முறையின்படி, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 720 கிமீ வரை பயணிக்க முடியும் என ஜாகுவார் தெரிவித்துள்ளது.
சார்ஜிங் வேகத்திலும் இந்த கார் கவனம் பெறுகிறது. 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 13 நிமிடங்களில் சுமார் 321 கிமீ பயணிப்பதற்கான ரேஞ்சை பெற முடியும். அதேபோல், பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 22 நிமிடங்கள் போதுமானது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உட்புற அம்சங்கள்
காரின் உட்புறத்திலும் ஜாகுவார் தனக்கென புதிய வடிவமைப்பு மொழியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக காட்சிப்படுத்தப்பட்ட டைப் 00 கான்செப்ட் மாடலைப் போலவே, கேபினின் மையப்பகுதியில் பித்தளை வண்ணத்திலான ஃபினிஷ் கொண்ட முதுகெலும்பு போன்ற'ஸ்பைன்' என்ற தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது முன்புறத்திலிருந்து பின்புறம் வரை கேபினை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது.
டிரைவருக்கு முன்பாக பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. டைப் 00 கான்செப்ட்டில் இருந்த பயணிகள் பக்கம் கொடுக்கப்பட்ட திரை அமைப்பானது இந்த தயாரிப்பு மாடலில் இடம்பெறவில்லை. ஏசி மற்றும் மீடியா உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுக்கு சென்டர் கன்சோலில் சிறிய டேப்ளட் சாதனம் இடம்பெற்றுள்ளது.
உற்பத்தி
ஜாகுவார் டைப் 01 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி 2027ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள சோலிஹல் ஆலையில் தொடங்க உள்ளது. இதற்கான எலெக்ட்ரிக் டிரைவ் யூனிட்டுகள் மற்றும் பேட்டரிகள் வோல்வர்ஹேம்ப்டன் ஆலையில் தயாரிக்கப்படும். காருக்கான பாடி பேனல்கள் ஹேல்வுட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. அடுத்த ஆண்டு இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



