புதிய ஜீப் மெரிடியன் எஸ்யூவியின் சிறப்பு பதிப்பு இந்தியாவில் அறிமுகம்... 85 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு!!
ஜீப் எஸ்யூவி தயாரிப்பு நிறுவனத்தின் 85 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், மெரிடியன் எஸ்யூவியின் 85ம் ஆண்டு கொண்டாட்ட பதிப்பை அந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 85 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள இந்த சிறப்பு பதிப்பு, Meridian வரிசையில் அதிக வசதிகள் கொண்ட Overland வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.36.05 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சாகசப் பயணங்கள், ஆஃப்-ரோடு திறன் மற்றும் தனித்துவமான எஸ்யூவி ரக கார் பாரம்பரியத்தை உருவாக்கிய ஜீப் பிராண்டுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த சிறப்புப் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற அம்சங்கள்
இந்த புதிய சிறப்புப் பதிப்பு மாடலானது வெறும் 85 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த எஸ்யூவியில் சில முக்கிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டு தனித்துவமான மாடலாக மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் இந்த சிறப்பு பதிப்பை அடையாளம் காணும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Gloss Black 18 இன்ச் அலாய் வீல்கள், 85th Anniversary சிறப்பு பேட்ஜ்கள் மற்றும் பிரத்யேக டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழக்கமான Meridian Overland மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த மாற்றங்கள் Anniversary Edition-க்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.
இன்டீரியர் அம்சங்கள்
கேபினிலும் சில பிரத்யேக மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. முழுவதும் கருப்பு நிற இன்டீரியர், Mayan Gold நிற அலங்காரங்கள் மற்றும் Contrast டீட்டெய்லிங் ஆகியவை இந்த பதிப்புக்காகவே வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் 85th Anniversary AXS Package-ஐ தேர்வு செய்து, விசேஷமான தரைவிரிப்புகள், ஆம்பியன்ட் லைட்டிங், உட்புற கூரையில் தனித்துவமான ஒளிரும் விளக்குகள் மற்றும் பாடி டீக்கெல்களை பெற முடியும்.

புதிய CARA AI வாய்ஸ் கமாண்ட் வசதி
தவிரவும் Meridian வரிசை முழுவதிலும் புதிய CARA AI குரல் உதவியாளரையும் (Voice Assistant) அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. Stellantis நிறுவனம் உருவாக்கிய இந்த குரல் வழி கட்டளை வசதி இயல்பான குரல் கட்டளைகள் மூலம் நெவிகேஷன், வானிலை தகவல், தொலைபேசி அழைப்புகள், ஆடியோ சிஸ்டம் கன்ட்ரோல் உள்ளிட்ட சில வாகன செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், 52 மொழிகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதால், இந்தியாவின் முக்கிய மொழிகளிலும் இதைப் பயன்படுத்த முடியும்.
என்ஜின் விபரம்
என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சிறப்பு பதிப்பிலும் Meridian Overland மாடலில் வழங்கப்படும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தொடர்கிறது. இந்த இன்ஜின் 170 ஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்குவதுடன், 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டு தேர்வுகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
ஜீப் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் மற்றும் இயக்குனர் குமார் பிரியேஷ், "85 ஆண்டுகளாக ஜீப் என்பது வெறும் வாகன பிராண்டாக இல்லாமல், எஸ்யூவி பிரியர்கள் மற்றும் சாகசப் பிரியர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் சாகசத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த பாரம்பரியத்தை கொண்டாடும் வகையிலேயே இந்த வரையறுக்கப்பட்ட Anniversary Edition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்த Anniversary Edition மூலம் ஜீப் இந்தியா நிறுவனம் வெறும் புதிய வேரியண்டை மட்டுமல்ல, தனது 85 ஆண்டுகால பாரம்பரியத்தையும் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுகிறது. வெறும் 85 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படுவதால், இது ஜீப் எஸ்யூவி ரசிகர்கள் மற்றும் கார் சேகரிப்பில் ஆர்வம் காட்டுவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும். அதோடு, CARA AI போன்ற புதிய தொழில்நுட்பத்தை Meridian வரிசையில் சேர்த்திருப்பது, இந்த அறிமுகத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications