டாடாவுடன் கூட்டணி அமைத்து வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் புதிய எஸ்யூவி.. மஹிந்திராவ காலி பண்ண ஆள் வந்தாச்சு!
நீண்ட காலமாக தன்னிச்சையாகப் போராடிவிட்டு தற்போது கூட்டணி அமைத்து இந்திய சந்தையை எதிர்கொள்ளவிருக்கிறது ஸ்டெல்லான்டிஸ் (Stellantis). சர்வதேச அளவில் மிகப் பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஸ்டெல்லான்டிஸ். பல நாடுகளில் முன்னணியில் இருக்கும் ஆட்டோமொபைல் பிராண்டுகள் பலவும் ஸ்டெல்லான்டிஸுடையதாகவே இருக்கும். இந்தியாவில் இதன் பல பிராண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றாக ஃபியட்டைக் (Fiat) கூறலாம். தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டெல்லான்டிஸ் பிராண்டுகள் என்றால் அது சிட்ரனும், ஜீப்பும் தான்.
ஃபியர் வெற்றிகரமாக இருந்தது என்றாலும், அது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்ட சமயத்தில் ஸ்டெல்லான்டிஸ்ஸின் கீழ் இல்லை. 2021லேயே அதனுடன் இணைந்தது. சரி விஷயத்திற்கு வருவோம். ஜீப் மற்றும் சிட்ரன் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில்ல நல்ல பெயர் இருந்தாலும், இந்தியாவில் இரண்டுமே கத்துக்குட்டிகளாகத் தான் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் எஸ்யூவி அலை அடித்து வரும் நிலையில், வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக ஜீப் இருந்திருக்க வேண்டும், ஆனால் இல்லை.

இந்தியாவில் தற்போது இரண்டாவது முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான இருக்கும் மஹிந்திராவிற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது ஜீப் தான். 1950-களில் ஜீப்பிற்காக எஸ்யூவிக்களை தயாரித்துக் கொடுக்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு இன்று தனியொரு எஸ்யூவி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது மஹிந்திரா. ஆனால் சர்வதேச அளவில் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஜீப்பால் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.
இந்த நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய காரை ஜீப் காரை வெளியிட முடிவெடுத்திருக்கிறது ஸ்டெல்லான்டிஸ். ஜீப்பின் புதிய காருக்கான பிளாட்ஃபார்மை டாடா மோட்டார்ஸ் வழங்க, அதனைக் கொண்டு சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான புதிய எஸ்யூவி ஒன்றை அடிப்படையில் இருந்து உருவாக்கவிருக்கிறது ஜீப். இந்தப் புதிய காரை இரண்டு நிறுவனங்களுக்கும் சொந்தமான புனேயின் ரஞ்சன்கவோனில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஸ்டெல்லான்டிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் புதிய கூட்டணி என நினைக்க வேண்டாம், ஏற்கனவே சில பரிமாற்றங்கள் இந்தக் கூட்டணிக்கிடையே உண்டு. ஆம், ஜீப்பின் டீசல் இன்ஜின் ஒன்றை பல காலமாகவே டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தி வருகிறது. அது எது தெரியுமா? வேறெதுவும் இல்லை, டாடாவின் ஹேரியர் மற்றும் சஃபாரி கார்களில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தான்.
இதே இன்ஜின் தான் இந்தியாவில் ஜீப் விற்பனை செய்து வரும் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய எஸ்யூவிக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜீப்பின் இந்த டீசல் இன்ஜின் இல்லையென்றால் டாடாவின் ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்கள் இல்லை என்று கூட கூறலாம்.
டாடாவின் பிளாட்ஃபார்ம் ஒன்றை ஜீப் பயன்படுத்தும் என்றாலும் அது எந்த பிளாட்ஃபார்ம் என்பது குறித்த தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப்படவில்லை. எனினும் சியரா எஸ்யூவிக்கு டாடா பயன்படுத்தும் ARGOS பிளாட்ஃபார்மாக அது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் வீல் டிரைவ் வசதியை கொடுக்கும் வகையிலான பிளாட்ஃபார்மாக இந்த ARGOS இருப்பதுடன், எலெக்ட்ரிக் காருக்குப் பயன்படுத்தப்படும் வகையிலும் இருக்கிறது.
எதிர்காலத் தேவைக்கும் சேர்ந்ததாக இருப்பதோடு, ஜீப்பின் எஸ்யூவிக்கு மிக முக்கியமான அம்சமான ஆல் வீல் டிரைவ் அம்சத்தை சேர்க்கும் வசதியைக் கொண்டிருப்பதால், இந்த ARGOS பிளாட்ஃபார்மையே புதிய காருக்கு ஜீப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் புதிய காரை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஜீப் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2028ல் ஜீப் தயாரிக்கும் இந்தப் புதிய எஸ்யூவியின் வெளியீட்டை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது இந்தியாவில் நான்கு எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது ஜீப். 5 சீட்டர் எஸ்யூவியான காம்பஸ், அதன் 7 சீட்டர் வடிவமான மெரிடியன், ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற ரேங்ளர் மற்றும் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியான கிராண்டு செரோக்கீ ஆகிய நான்கு எஸ்யூவிக்களை ஜீப் விற்பனை செய்து வருவகிறது.
இவற்றில் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய எஸ்யூவி கார்கள் 30 லட்சம் ரூபாய்க்கு உள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், ரேங்ளர் மற்றும் கிராண்டு செரோக்கீ ஆகிய எஸ்யூவி கார்கள் 60 லட்சம் ரூபாய்க்கு மேலான எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2017ல் வெளியானது போது வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் வரவேற்பைப் பெற்றது காம்பஸ் எஸ்யூவி. ஆனால் அதன் பின்பு ஜீப்பிற்கு தொடர்ந்து இறங்குமுகம் தான். இப்போது இந்தியாவில் மிக மிகக் குறைவான அளவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஜீப்பே இருக்கும். கடந்த மாதம் வெறும் 250 கார்களை மட்டுமே இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. டாடாவுடனான கூட்டணியின் கீழ் உருவாக்கப்படும் புதிய எஸ்யூவி ஜீப்புக்கு வெற்றியைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications