மூன்று புதிய எஸ்யூவிக்களை இந்தியாவில் வெளியிடும் நிறுவனம்.. என்னென்னன்னு தெரியுமா?
சர்வதேச அளவில் எஸ்யூவி கார்களுக்குப் பெயர் போன ஜீப் நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புதிய எஸ்யூவிக்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மஹிந்திராவின் ப்ரீமியம் வெர்ஷனாக ஜீப்பின் எஸ்யூவிக்களை நாம் பார்க்கலாம். சர்வதேச அளவில் நன்மதிப்பைக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் ஜீப்பின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை, குறிப்பாக விற்பனையில். இந்தியாவில் மிகவும் குறைவான விற்பனை அளவைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஜீப்பைக் கூறலாம்.
இந்தியாவில் புதிதாக என்னென்ன எஸ்யூவிக்களை ஜீப் வெளியிடுகிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னாள், என்னென்ன எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது என்பதை ஒரு முறை பார்த்துவிடலாம். தற்போது இந்தியாவில் நான்கு எஸ்யூவிக்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஜீப். காம்பஸ், மெரிடியன், ரேங்ளர் மற்றும் கிராண்டு செரோக்கீ ஆகிய நான்கு எஸ்யூவிக்கள் தான் அது.

இதில் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகியவை மாஸ் மார்க்கெட் எஸ்யூவிக்களாகவும், ரேங்ளர் மற்றும் கிராண்டு செரோக்கீ ஆகியவை ப்ரீமியம் எஸ்யூவிக்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகறது. ரேங்ளர் ஒரு ஆஃப்-ரோடு எஸ்யூவியாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிராண்டு செரோக்கீ தான் ஜீப்பின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியாக இந்தியாவில் இருக்கிறது. காம்பஸ் மற்றும் மெரிடியன் கிட்டத்தட்ட ஒரே எஸ்யூவி தான், காம்பஸ் 5 சீட்டர் என்றால் மெரிடியன் 7 சீட்டர், அவ்வளவு தான்.
சரி இப்போது புதிய எஸ்யூவிக்களுக்கு வருவோம். மூன்று எஸ்யூவிக்களில் இரண்டு ஏற்கனவே இருக்கும் மாடல்களின் புதிய வடிவங்கள் தான். மேலே கூறிய காம்பஸ் (Compass) மற்றும் மெரிடியன் (Meridian) ஆகிய எஸ்யூவிக்கள் தற்போது 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2020ல் BS6 விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னாள் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் இந்த எஸ்யூவிக்களில் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், BS6 விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த பெட்ரோல் இன்ஜினை அப்டேட் செய்ய முடியாததால் அந்த இன்ஜின் கைவிடப்பட்டது. அப்போதிலிருந்து டீசல் இன்ஜினுடன் மட்டுமே இந்த எஸ்யூவிக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பெட்ரோல் இன்ஜின் மூலம் கிடைக்கும் விற்பனையை இரண்டு எஸ்யூவிக்களும் இழந்து வருகின்றன. இதனால் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய இரண்டு எஸ்யூவிக்களிலும் விரைவிலேயே புதிய டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்து ஜீப் அப்டேட் செய்யவுள்ளது.
அந்தப் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் வேறெதுவும் இல்லை, சியரா எஸ்யூவியில் டாடா கொடுத்திருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் அது. பல காலமாகவே ஸ்டெல்லான்டிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே கூட்டணி இருந்து வருகிறது. அந்த கூட்டணியின் கீழேயே ஸ்டெல்லான்டிஸ்ஸின் துணை நிறுவனமாக இருக்கும் ஜீப் டாடாவின் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறவிருக்கிறது.
இந்த இரண்டு எஸ்யூவிக்களைத் தவிர்த்து மூன்றாவதாக முற்றிலும் புதிய எஸ்யூவி ஒன்றை அடிப்டையில் இருந்து உருவாக்கவிருக்கிறது ஜீப். இந்தப் புதிய எஸ்யூவிக்கு மேலே கூறிய டாடாவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், சியராவிற்கு டாடா பயன்படுத்தி ARGOS பிளாட்ஃபார்மையே ஜீப் நிறுவனமும் பயன்படுத்தவிருக்கிறது. சியரா எஸ்யூவியையே ஜீப் உருவாக்கினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள், அது தான் புதிய எஸ்யூவி.
இந்தப் புதிய எஸ்யூவியின் வெளியீட்டை 2027 அல்லது 2028ல் இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்தப் புதிய எஸ்யூவியை ஜீப் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய எஸ்யூவி சற்று தாமதமானாலும், மேலே கூறிய காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிக்களின் பெட்ரோல் வெர்ஷன்களை விரைவிலேயே இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் புதிய எஸ்யூவிக்களின் வெளியீட்டுடன் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்கலாம் எனத் திட்டமிடுகிறது ஜீப். ஆனால் பிரச்சினை ஜீப்பின் கார்களில் இல்லை, அதன் ஷோரூம் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கில் தான் இருக்கிறது. நிறைய சர்வீஸ் நெட்வொர்க்குகளை உருவாக்கி நீண்ட காலம் இந்தியாவில் இருப்போம் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அளித்தால் மட்டுமே குறிப்படத்தக்க விற்பனை வளர்ச்சியை ஜீப் எட்ட முடியும்.
இத்துடன் தங்களுடைய கார்களின் விலையிலும் ஜீப் கவனம் செலுத்த வேண்டும். அந்நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை கொண்ட கார் என்றால் அது காம்பஸ் தான். இதன் தொடக்க விலையே 17.99 லட்சம் ரூபாய். இங்கேயே பெரும்பான்மை வாடிக்கையாளர்களை ஜீப் இழந்து விடுகிறது. அடுத்து உருவாக்கவிருக்கும் புதிய எஸ்யூவி சற்று குறைவான விலையில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஜீப் என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications