2-ம் உலகப்போரில் புகழ்பெற்ற ஜீப் வில்லிஸ் மீண்டும் வருகிறதா? இந்த முறை மின்சார எஸ்யூவி!

இரண்டாம் உலகப்போரின்போது ராணுவப் பயன்பாட்டில் முக்கியப் பங்கு வகித்த ஜீப் வில்லிஸ் (Jeep Willys) பெயர் மீண்டும் வாகன உலகில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. ஆம், பழைய வில்லிஸ் ஜீப் வாகனத்தை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில், பட்ஜெட் விலையில் சிறிய மின்சார எஸ்யூவியாக (Electric SUV) அறிமுகப்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1941-ம் ஆண்டு அறிமுகமான வில்லிஸ் எம்பி (Willys MB), இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ராணுவத்தின் முக்கிய வாகனங்களில் ஒன்றாக விளங்கியது. கரடுமுரடான பாதைகளில் எளிதாகப் பயணிக்கும் திறன், எளிமையான வடிவமைப்பு, வலுவான கட்டமைப்பு மற்றும் நான்கு சக்கர இயக்கம் (4x4) ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருந்தன.

Jeep Willys

காலப்போக்கில் வில்லிஸ் என்ற பெயர் ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியத்துடன் நெருக்கமாக இணைந்தது. இன்றும் ஜீப் என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அதன் பெட்டி போன்ற வடிவமைப்பும், சாகசப் பயணங்களுக்கு ஏற்ற வலுவான தோற்றமும்தான். இந்த அடையாளத்தை அடுத்த தலைமுறை வாகனங்களிலும் பயன்படுத்த ஜீப் நிறுவனம் விரும்புகிறது.

Also Read

மின்சார வாகனமாக உருவெடுக்குமா?

2026 பாரிஸ் மோட்டார் கண்காட்சியின்போது ஆட்டோகார் யுகே செய்தி இணையதளத்திற்கு பேட்டி அளித்த ஜீப் ஐரோப்பா பிரிவின் தலைவர் சேவியர் பியூஜியோ (Xavier Peugeot), தமது நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களில் வில்லிஸ் பெயர் முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், வில்லிஸ் மாடல் மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பியச் சந்தையில் சீன நிறுவனங்களின் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜீப்பின் பாரம்பரியத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

இந்தச் சூழலில், வில்லிஸ் பெயரில் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார எஸ்யூவியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜீப் நிறுவனத்தின் தற்போதைய திட்டம் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே இருப்பதால், இதன் மோட்டார் திறன், பேட்டரி அளவு, பயணிக்கும் தூரம், சார்ஜிங் நேரம் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

Also Read

பழைய வில்லிஸ் வடிவமைப்பு

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் படத்தில், பழைய வில்லிஸ் ராணுவ வாகனத்தின் பின்னணியில் கூரையுடன் கூடிய புதிய எஸ்யூவியின் நிழல் வடிவம் இடம்பெற்றுள்ளது. இந்த வாகனம் பெட்டி போன்ற தோற்றத்தையும், பின்புறக் கதவில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீலையும் கொண்டிருப்பது தெரிகிறது.

இதன் மூலம் பழைய வில்லிஸின் எளிமையான வடிவமைப்பை நவீன வாகனத்தில் மீண்டும் கொண்டுவர ஜீப் விரும்புவது தெரியவருகிறது. இருப்பினும், டீசரில் காட்டப்பட்டுள்ள உருவமே இறுதி தயாரிப்பு வடிவமைப்பா என்பது உறுதி செய்யப்படவில்லை. புதிய வாகனம் சிறிய அளவில் உருவாக்கப்பட்டால், நகரப் போக்குவரத்தில் எளிதாகப் பயன்படுத்துவதுடன் வார இறுதி சாகசப் பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கலாம். ஆனால், இதன் நீளம், அகலம், தரை இடைவெளி மற்றும் உட்புற வசதிகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

புதிய மின்சார கட்டைமப்பு

புதிய வில்லிஸ் மின்சார எஸ்யூவி உருவாக்கப்பட்டால், ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் உருவாக்கி வரும் குறைந்த செலவிலான மின்சார வாகனத் தளத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சர்வதேச ஆட்டோமொபைல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழியப்பட்ட 'இ-கார்' (E-car) விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் சிறிய வாகனங்களுக்காக இந்தத் தளம் திட்டமிடப்பட்டுள்ளது.

சிட்ரோன் நிறுவனத்தின் எதிர்கால 2CV மாடலும் இதே போன்ற தளத்தைப் பயன்படுத்தலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே தளத்தைப் பல வாகனங்களில் பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்புச் செலவைக் குறைக்க முடியும். இதனால் புதிய வில்லிஸ் உருவானால், ஜீப் நிறுவனத்தின் மற்ற மாடல்களைவிட மலிவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கலாம். எனினும், புதிய வில்லிஸ் எந்தத் தளத்தில் உருவாக்கப்படும் என்பதை ஜீப் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

4x4 வசதி

எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு ஜீப் மாடலிலும் நான்கு சக்கர இயக்க வசதியை வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று சேவியர் பியூஜியோ தெரிவித்துள்ளார். இதனால் புதிய வில்லிஸ் மாடலிலும் 4x4 வசதி இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், இந்த மாடலில் இரண்டு சக்கர இயக்கம் மற்றும் நான்கு சக்கர இயக்கம் என வெவ்வேறு தேர்வுகள் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

இந்தியாவுக்கு வருமா?

ஜீப் நிறுவனத்தின் தற்போதைய 'ரோடு டு 2030' (Road to 2030) திட்டம் நிறைவடைந்த பிறகு வில்லிஸ் திட்டம் அடுத்தகட்டத்திற்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மிக விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த மாடல் ஐரோப்பிய சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்டாலும், அம்பாசடர் போன்று இந்தியாவிலும் அரசுத்துறையில் மஹிந்திரா பிராண்டில் இந்த வாகனம் நீண்ட காலம் இருந்ததால், பரிட்சயமான மாடலாக இருக்கும். எனவே, எளிதில் வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்பு அதிகம் உண்டு என கூறலாம்.

Source - AutocarUK

Article Published On: Wednesday, October 21, 2026, 11:45 [IST]
English summary
Jeep willys electric suv comeback launch design features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out