2027ல் இந்தியாவில் அறிமுகமாகிறது ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார்கள்! ஜேஎல்ஆர் மெகா பிளான்!!
இந்தியாவில் மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தப் பிரிவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனம் வரும் 2027ஆம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் மின்சார கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் சொகுசு மின்சார கார் சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்த ஜேஎல்ஆர் நிறுவனம் தயாராகி வருகிறது. குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஆகிய இரண்டு புதிய மாடல்கள் முதற்கட்டமாக இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளன.

ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக்
ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜன் அம்பா இதுகுறித்த முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்தியாவை முக்கியமான வளர்ச்சி சந்தையாகக் கருதுவதாகவும், மின்சார வாகனங்களுக்கான சரியான தருணம் தற்போது உருவாகியுள்ளதாக தமது நிறுவனம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவிற்கு வர இருக்கின்றன. இந்த கார்கள் முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் (CBU) முறையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகு இந்த கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதை நிறுவனம் கவனிக்கவுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் உள்ளூரிலேயே கார்களை அசெம்பிள் செய்வது அல்லது இறக்குமதி முறையைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாகுவார் GT காரும் வருகிறது
ரேஞ்ச் ரோவர் மின்சார மாடல்களுடன் அடுத்த ஆண்டு புதிய ஜாகுவார் GT காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் பிராண்டை புதிய சொகுசு கார் அடையாளத்துடன் உலகளவில் மறுசீரமைக்கும் முயற்சியின் முக்கியமான பகுதியாக இந்த மாடல் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருவதாக ஜேஎல்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மின்சார கார்களின் மறுவிற்பனை மதிப்பு குறித்த நம்பிக்கை மேம்படுவதும் சந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
விற்பனை மையங்கள் விரிவாக்கம்
புதிய கார்கள் அறிமுகம் மட்டுமின்றி, இந்தியாவில் தனது விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க ஜேஎல்ஆர் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 25 விற்பனை மையங்களைக் கொண்டிருந்த நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) காரணமாக சில மாடல்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் விசாரணைகள் கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில மாடல்களின் விலை ரூ.4.25 கோடியிலிருந்து ரூ.3.5 கோடியாகக் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஃபென்டர் விற்பனையிலும் புதிய இலக்கு
இந்தியாவில் டிஃபென்டர் எஸ்யூவி கார்களை உள்ளூரிலேயே அசெம்பிள் செய்யும் நடவடிக்கையும் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டத்தில் முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் விலை குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் டிஃபென்டர் கார்களுக்கான ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர்மயமாக்கல் நடவடிக்கையால் டிஃபென்டர் பிராண்டின் ஆர்டர்கள் தற்போதைய அளவிலிருந்து 20 சதவீதம் அதிகரிக்கலாம் என ஜேஎல்ஆர் நிறுவனம் கணித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இந்த பிராண்டிற்கு கிடைத்து வரும் வரவேற்பை மேலும் அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: The Telegraph


Click it and Unblock the Notifications


